ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இமானுவேல் சேகரன் | immanuvel sekaran

இராணுவத்தில் இருந்து விடுமுறைக்காக வந்தவர் இங்கு நடக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளை கண்டு இனி நாம் வேலை செய்ய வேண்டிய இடம் இதுதான் என சமூகப்பணிகளில் ஈடுபடத்துவங்கினார்
யார் இந்த இமானுவேல் சேகரன்

எனக்கு எப்போதுமே ஒரு வருத்தமுண்டு – குறிப்பிட்ட இன மக்களின் விடுதலைக்காகவோ அல்லது உரிமைக்காகவோ போராடுகிற நபர்கள் அந்த சமூகத்தினரால் கொண்டாடப்படுவதும் பிற மக்களால் வெறுக்கப்படுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. உரிமைக்காக போராடுகிற நபர்கள், அவர்கள் யாருக்காக போராடினாலும் அவர்களை அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும். அதுவே மனிதம். இந்த வரிசையில் மிக முக்கியமானவர் அம்பேத்கர்.

 ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் இமானுவேல் சேகரன் என்பவருக்கு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. யார் இந்த இமானுவேல் சேகரன் அவரை எதற்காக இத்தனைபேர் கொண்டாடுகிறார்கள் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்காகவே சிறு கட்டுரை.

யார் இந்த இமானுவேல் சேகரன்?

யார் இந்த இமானுவேல் சேகரன்

 

பரமக்குடியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு 33 வயது இளைஞன் வீடு திரும்பிக்கொண்டு இருக்கையில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக அந்த இளைஞனை தாக்குகின்றது . அந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத அந்த இளைஞனை மரணம் ஆட்கொள்ளுகிறது . 

 

இந்தக்கொடுமை அரங்கேறியது செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி . 12 ஆம் தேதி உடற்கூறாய்வு செய்யப்படுகின்றது ,அடக்கம் செய்யப்படுகிறது. 13 ஆம் தேதி ராமநாதபுரம் முழுக்க பதற்றமான சூழ்நிலை ஏற்படுகிறது . அதனால் ஏற்படுகிற பிரச்சனையில் 85 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர் .

 

அந்த இளைஞன் தான் பின்னாளில் பெருவாரியான மக்களால் கொண்டாடப்படுகின்ற இம்மானுவேல் சேகரன் .

 

இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடினார் என்ற மையக்கருத்தை மட்டுமே வைத்து அவரது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது . ஆனால் அவர் இதற்கெல்லாம் முன்னதாகவே , தனது 18 ஆம் வயதிலேயே அந்நியர்களுக்கு  எதிராக போராடத்துவங்கிவிட்டார் . இதற்காக மூன்று மாதம் சிறை தண்டனையும் பெற்றார் . 

 

இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக இருந்திட்ட இமானுவேல் சேகரன் விடுமுறைக்காலங்களில் சொந்த ஊருக்கு திரும்பியபோது இங்கிருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக்கண்டு மனம் வெதும்பி இனி தான் பணி செய்யவேண்டிய இடமே இதுதான் என புறப்பட்டார் . ஏற்கனவே தன்னுடைய 19 ஆம் வயதில் இரட்டைக்குவளை அநீதியை எதிர்த்து குரல் கொடுத்திருந்தவரின் குரல் இப்போது வலுவாக ஒலிக்கத்துவங்கியது .

 

1957 ஆண்டு செப்டம்பர் மாதம் துவக்கத்தில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேருகின்றன . காடாமங்கலம் கிராமத்தில் இறந்த மூதாட்டியின் பிணத்தை சுடுகாட்டுக்கு கொண்டுசெல்வதில் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் காவல்நிலையம் சென்று முடிவுக்கு வருகின்றது . அதனைத்தொடர்ந்து லாவி எனும் கிராமத்தில் கிணறு அசுத்தம் செய்யப்பட்டதில் பிரச்சனை உருவாகின்றது .

 

அதனைத்தொடர்ந்து நடந்த அமைதிப்பேச்சுவார்தையில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநியாக கலந்துகொண்ட ஆறுபேரில் இமானுவேல் சேகரனும் ஒருவர் . இருதரப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்று இறுதியில் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர் இரு பக்கத்தினரும் .

 

இதற்கு அடுத்தநாள் தான் இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்படுகின்றார் .தங்களுக்காக போராடிய இமானுவேல் சேகரன் நினைவுதினத்தை மக்கள் ஆண்டுதோரும் அனுசரித்துவருகிறார்கள் .

இமானுவேல் சேகரன் எதை விரும்பியிருப்பார் ?

யார் இந்த இமானுவேல் சேகரன்

 

இமானுவேல் சேகரன் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதனையே விரும்பினார் , அதற்காகவே போராடினார் . ஒருவேளை அவர் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் அம்மக்கள் விடுதலை பெற்றிருப்பார்களோ என எண்ணத்தோன்றுகின்றது .

 

இமானுவேல் சேகரன் என்றுமே ஆதிக்கம் என்ற வார்த்தையை விரும்பிடாதவர் . முதலில் அதனை அவர் யாருக்காக குரல் கொடுத்தாரா அவர்களே உணர வேண்டியவர்கள் . நாம் அவர்களை விட உயர்வானவர்கள் என ஆதிக்கம் பேசினால் இமானுவேல் சேகரன் உங்கள் பக்கம் நிற்கமாட்டார் . நீங்கள் தாழ்ந்தவன் என யாரை சொல்லுகிறீர்களோ அவர்களுக்காக அங்கே குரல் கொடுத்துக்கொண்டு இருப்பார் .

 

இந்தத்தெளிவு இந்தக்கால இளைஞர்களிடத்தில் நிச்சயமாக இருக்கவேண்டும் . யாரும் யாரை விடவும் உயர்வானவர்கள் இல்லை , அனைவரும் சமமானவர்களே . இதனை உணர்ந்துவிட்டால் போதும் .அவர் என்றும் சமத்துவமான அமைதியான வாழ்க்கையை அனைவரும் பெறவேண்டும் என்றே விரும்பினார்.

 

என்னைப்பொறுத்தவரையில் இமானுவேல் சேகரன் அவர்களது நினைவுதினத்தில் முழங்கவேண்டியது “அனைவரும் சமமானவர்கள்” என்பதனைத்தான் .

பாமரன் கருத்து

Share with your friends !