விஜய் அரசியல் வருகை: புத்திசாலித்தனமா? முட்டாள்தனமா?

இன்றைய தமிழக சினிமா நிலவரப்படி மிக மிக அதிகமாக ஒரு திரைப்படத்திற்கு சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார். அவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 100 கோடி சம்பளம் வாங்குகிறார் என சொல்லப்படுகிறது.

இப்படி மிக உயர்ந்த நிலையில் இருக்கும்போது தான் நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடித்துவிட்டு அரசியலுக்கு முழுமையாக வந்து மக்கள் பணி ஆற்றப்போகிறேன் என சொல்லி இருக்கிறார்.

விஜய் அவர்களின் அரசியல் வருகை, அவரது சினிமா முற்று ஆகியவை வரவேற்பையும் பெற்றுள்ளது, விமர்சனத்தையும் பெற்றுள்ளது.

விஜய் அவர்களின் அரசியல் வருகை புத்திசாலித்தனமான முடிவா அல்லது முட்டாள்தனமான தவறான முடிவா என்பதை பார்க்கலாம். அதோடு, இன்னும் பல்வேறு விசயங்களையும் விரிவாக பார்க்கலாம்.



இங்கே நாம் விவாதிக்க இருப்பவை,

நடிகரான விஜய் அரசியலுக்கு வரலாமா?

அரசியல் வருகை புத்திசாலித்தனமான முடிவா?

விஜய் நினைத்தது மாதிரி 2026 இல் முதல்வர் ஆகி விடலாமா?

விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள், சவால்கள் என்ன?

சினிமாவிற்கு விடை கொடுத்த முடிவு சரியானதா?

இன்னும் பல……

இந்தக்கட்டுரை உங்களுக்கு பிடித்து இருந்தால் பிறருக்கு பகிருங்கள். உங்களது கருத்துக்களை தவறாமல் கமெண்டில் பதிவிடுங்கள்.

நடிகரான விஜய் அரசியலுக்கு வரலாமா?

தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கும் அறிவிப்பை டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

தமிழக மக்களிடையே, நடிகர்களின் அரசியல் வருகை குறித்த அதிருப்தி பல காலமாகவே இருந்து வருகிறது. விஜய் அரசியல் அறிவிப்பின் போதும் அதுவே நடந்தது.

நடிகர்கள் தங்களது சினிமா பிரபல்யம் மூலமாக கிடைக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அரசியலுக்கு வருகிறார்கள் என்ற எண்ணமே அதற்கு மிக முக்கியக்காரணம்.

வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு ஆரம்ப ஆதரவு நடிகர்களுக்கு உடனே கிடைப்பது உண்மை தான். ஆனால், நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல ஜனநாயகத்தில் யாருக்கும் உரிமை இல்லை.

மக்களுக்கு நடிகர் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை என்றால் அவருக்கு ஓட்டு போடாமல் இருக்கலாம்.

ஆகவே, விஜய் அவர்கள் அரசியலுக்கு வர அவருக்கு முழு உரிமை நிச்சயமாக இருக்கிறது.

அரசியல் வருகை புத்திசாலித்தனமான முடிவா?

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்திற்கு புதிது அல்ல. ஆனால், வந்தவர்கள் அனைவரும் அரசியலில் வென்றதும் கிடையாது.

எம்ஜிஆர் அவர்களை வெற்றி பெற்றவர் பட்டியலில் வைக்கலாம். ஆனால், அவர் தனது பயணத்தை திமுகவில் துவங்கினார் என்பதை மறக்கக்கூடாது.

அவரைப்போலவே, உச்ச நட்சத்திரமாக இருந்த சிவாஜி அவர்களால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.

இப்படி, நடிகர் கார்த்திக், கமல் என பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். பல மாநிலங்களிலும் இது நடந்துள்ளது.

சினிமாவில் உச்ச நட்சத்திரத்தில் இருக்கும் போது அதனை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவதை பலரும் முட்டாள்தனமான முடிவாக கருதுகிறார்கள்.

ஆனால், ஒரு மனிதன் தான் நினைத்ததை அடைய சில விசயங்களை தியாகம் செய்துவிட்டு வருவதென்பது குறிப்பிட்ட விசயத்தில் அவருக்கு இருக்கும் ஈர்ப்பை அறிய வைக்கிறது.

நம்மை பொருத்தவரைக்கும் விஜய் அவர்களின் துணிவான முடிவை முட்டாள்தனமான முடிவு என சொல்லாமல் தைரியமான முடிவு என்றே கருதுகிறோம்.

விஜய் நினைத்தது மாதிரி 2026 இல் முதல்வர் ஆகி விடலாமா?

கட்சி ஆரம்பிக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற கனவு, முதல்வர் நாற்காலியில் அமருவது தான். ஆனால், அது அத்தனை சுலபமான காரியமா என்றால் 100% இல்லை என்றே கூற வேண்டும்.

விஜய் அவர்களின் அறிவிப்பின்படி அவர்களது இலக்கு 2026 என்றே தெளிவாகிறது. ஆனால், அதிலே வெற்றி பெற்றுவிட முடியுமா என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கவே செய்கிறது.

மத்தியில் பாஜக பலம் வாய்ந்த கட்சியாக இருப்பது போல, மாநிலத்தில் திமுக சக்தி வாய்ந்த கட்சியாக இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறப்பிற்கு பிறகு அதிமுக சற்று பலவீனமாக இருந்தாலும் அமைப்பு ரீதியில் அதுவும் மிகவும் பலமாகவே இருக்கிறது.

இந்த இரண்டு கட்சிகளையும் வீழ்த்திவிட்டு முதல்வர் நாற்காலியை பிடிப்பது என்பது எதார்த்தத்தில் இவ்வளவு விரைவில் முடியாத காரியம்.

திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகள் அல்லாமல் விஜய் உள்ளிட்ட இன்னொருவர் ஆட்சியை பிடிக்க வேண்டுமெனில் “அலை” உண்டாக வேண்டும்.

எப்படி, நரேந்திர மோடி அவர்கள் முதல் முறையாக பிரதமர் தேர்தலுக்கு நிற்கும் போது ஓர் மோடி அலை உருவனதோ அப்படி விஜய் அலை என்ற ஒன்று உண்டானால் தான் விஜய் ஆட்சியை பிடிக்க முடியும்.

அப்படி ஓர் அலை உருவாக வாய்ப்பு உள்ளதா? கமென்டில் பதிவிடுங்கள்.

விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள், சவால்கள் என்ன?

விஜய் அவர்களின் அரசியல் வருகைக்கு பின்னால் யாரேனும் இருக்கிறார்களா என தெரியவில்லை. அரசியல் பற்றி குறை சொல்லவோ விமர்சனம் சொல்லவோ குறைவான அரசியல் அறிவு இருந்தால் போதும். ஆனால், அரசியல் செய்வதற்கு அரசியல் அறிவு மிக மிக அதிகமாக இருக்க வேண்டும். விஜய் அவர்களுக்கு இந்த அரசியல் அறிவு எவ்வளவு இருக்கிறது என போகப்போகவே தெரியும்.

ரசிகர்கள் விஜய்க்கு பக்கபலமாக இருப்பார்கள். இவர்களில் பலர் விஜய்க்கு நிச்சயமாக ஓட்டும் போடுவார்கள். ஆனால், இவர்கள் விஜய்க்காக களத்தில் நின்று வேலை செய்வார்களா என தெரியவில்லை. ஆகவே, ரசிகர்கள் அவரது நம்பிக்கைக்கு பலமாக அல்லது பலவீனமாக இருக்கலாம். அது போகப்போக தெரியும்.

தற்போது தமிழக மக்களை பொறுத்தவரையில் இருக்கக்கூடிய பெரும் பிரச்சனை ஊழல் மற்றும் லஞ்சம். திமுக, அதிமுக இரண்டுமே பல விசயங்களில் சிறப்பாக செயல்பட்டாலும் இந்த இரண்டு விசயங்களில் கோட்டை விட்டுள்ளன. இதனை விஜய் அவர்கள் முக்கியமான கொள்கையான முன்னெடுத்தால் அவருக்கு ஆதரவு கிடைக்கலாம். இது அவருக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

தமிழகத்தில் புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாத சூழலே நிலவுகிறது. கமல் அவர்களே இதற்கு சிறந்த உதாரணமாக சொல்லலாம். திமுகவை பெரிய அளவில் விமர்சனம் செய்த அவரே இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு உண்டு என சொல்கிறார்கள்.

விஜய் அவர்கள் கூட்டணி நோக்கி சென்றால் அவர் தனது தனித்துவத்தை இழக்க நேரிடும். கூட்டணி இல்லாவிட்டால் வெற்றிபெற காத்திருக்க வேண்டும். இதில் எதை அவர் நாடினாலும் அவருக்கு அது சிக்கலாகவே இருக்கும்.

ஒருவேளை அவரது இலக்கான 2026 இல் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனால் அடுத்த 5 ஆண்டுகள் அரசியல் பயணம் மிகவும் சவாலாக அமையும்.

அந்த கால கட்டங்களில் சினிமாவிலும் அவர் நடிக்காமல் இருக்கும் போது புதிய தலைமுறைகளிடம் இருந்து விலகி செல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல, அவரது நிதி நிலைமையும் மோசமாகலாம்.

மத்தியில் ஆதரவு ஓரளவு இருந்தால் நிச்சயமாக மாநிலத்தில் தங்களுக்கு தேவையான தகவமைப்பு சிலவற்றை அரசியல் கட்சிகளால் செய்துகொள்ள முடியும். ஆனால், பாஜக ஏற்கனவே தமிழகத்தில் கால் ஊன்ற கடுமையாக உழைத்து வருகிறது. ஆகவே, அது விஜய் போன்றவர்களுக்கு ஆதரவாக செயல்படும் என எதிர்பார்க்க முடியாது. இது சவாலாக அவருக்கு அமையும்.

சினிமாவிற்கு விடை கொடுத்த முடிவு சரியானதா?

அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என அவர் சொல்லி இருப்பது மிகவும் வரவேற்க வேண்டிய விசயமாகவே பார்க்கிறேன். சுமார் 100 கோடி சம்பளம் வாங்கும் நிலையில் இருக்கும் ஒருவர் மக்களுக்கு அரசியல் சேவை செய்திட அதனை விட்டு வருவதென்பது சாதாரணமான விசயம் இல்லை.

100 கோடி ரூபாய் வேலையை தான் விட்டுவிட்டு வருவதைபோல தனக்கு உறுதுணையாக இருக்க வருவோரும், அரசியல் மாற்றத்தை எதிர்பார்ப்போரும் தங்களது வருமானத்தை தியாகம் செய்துவிட்டு முழு அளவில் அரசியல் பணியாற்ற வர வேண்டும் என்பதற்கு உதாரணமாகவே அவரது செயலை நான் பார்க்கிறேன்.

அவருடைய செயல் நிச்சயமாக பலரை அவர் பின்னால் செல்ல ஈர்க்கும் என்பதே எனது கணிப்பு.

ஏற்கனவே, மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்ற கமல் அவர்கள் சினிமா – அரசியல் என இரண்டிலும் பங்கேற்க நினைத்து பின்னடைவை சந்தித்துக்கொண்டு இருக்கிறார். இது விஜய்க்கு ஓர் படிப்பினையாக இருந்திருக்கலாம்.

முடிவு

விஜய் அரசியலுக்கு வருவதை நாம் வரவேற்கும் அதே வேளையில், அவருக்கு இருக்க கூடிய சவால்களை இங்கே நாம் கவனமாக பார்த்தோம். அரசியலில் இதுதான் நடக்கும் என நம்மால் சொல்லவே முடியாது. விஜய் தான் ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் நினைத்துவிட்டால் யாரால் என்ன செய்துவிட முடியும்.

அவரது கொள்கை என்ன, அவர் களத்தில் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்தே அவருக்கு ஆதரவு கொடுக்கலாமா இல்லையா என்பதை ஒவ்வொருவரும் (அவரது ரசிகர்கள் உட்பட) முடிவெடுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

இந்தக்கட்டுரை உங்களுக்கு பிடித்து இருந்தால் பிறருக்கு பகிருங்கள். உங்களது கருத்துக்களை தவறாமல் கமெண்டில் பதிவிடுங்கள்.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.