அஸ்தமனமாகிறதா பாஜக; மோடி அலை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே போகிறதா ?

மோடி பேரலை : 




அதுவரை குஜராத் முதல்வராக 2001 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் சுமார் 12 ஆண்டுகள் 6 மாதங்கள் முதல்வராக இருந்தவர். குஜராத்தில் தான் செய்ததை இந்தியா முழுவதும் செய்து காட்டுவேன் என்ற உறுதிமொழியை கொடுத்து பிரதமருக்கான போட்டியில் களமிறங்கினார். குஜராத் வளர்ச்சி அடையவில்லை மோடி பொய் சொல்லுகிறார் என எதிர்க்கட்சிகள் கூவிய போதும் மோடி அலையும் சமூக வலைத்தளங்களை அவர் பயன்படுத்திய விதத்திலும் அனைத்தும் சிதறி ஓடின. விளைவு தனி பெரும் கட்சியாக 2014 இல் ஆட்சி அமைத்தது பாஜக. பிரதமரானார் மோடி.

இது தான் மோடி : 

மோடி ஒரு தலைவர் என்பதை காட்டிலும் மோடி தன்னை ஓர் பிராண்டாக மாற்றிடவே முயன்று கொண்டிருக்கிறார். சிறிய விஷயமோ அல்லது பெரிய விஷயமோ அதை பிரமாண்டமாக செய்வதிலும் பிறரை சொல்ல வைப்பதிலும் மிகப்பெரிய கெட்டிக்காரராக இருக்கிறார். அவருக்கு ஏற்றார் போலவே அனைத்தும் நடந்தன. நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.

சுவிஸ் வங்கியில் இருந்து கருப்பு  பணத்தை மீட்டு ஒவ்வோர் குடிமகனின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்பதே மோடியின் வாக்குறுதிகளில் முதன்மையானது. அவரால் முடியும் எனவும் மக்கள் நம்பினார்கள்.

பண மதிப்பிழப்பு என்பது அதுவரை ரிசர்வ் வங்கி மட்டுமே கொண்டிருந்த அதிகாரம். அதை தான் பெற்று ஒரு நடு இரவில் 500 மற்றும் 1000 நாளை முதல் செல்லாது என திகைப்பூட்டினார். மக்கள் என்னதான் கஷ்டப்பட்டாலும் வரிசையில் நின்று பணத்தினை மாற்றிக்கொண்டாலும் “பண மதிப்பிழப்பால் கருப்பு  பணம் முற்றிலும் ஒழியும் , எல்லையில் தீவிரவாத குழுக்களிடம் உள்ள பணம் மதிப்பிழந்து போகும் என மோடி கூறிய வாக்குறுதிகள் அவருக்கு ஆதரவை பெற்று தந்தன.

GST – காங்கிரஸ் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு தாமதமாக்கப்பட்டு வந்த GST மோடியின் ஆட்சியிலேயே அமல்படுத்தப்பட்டது. அதையும் தனது சாதனையாகவும் இதனால் நாட்டின் பொருளாதாரம் எங்கோ செல்ல போகிறது எனவும் நம்பிக்கையூட்டினார்.

அனைத்திலும் ஏமாற்றமே : 

சுவிஸ் வங்கியிலிருந்து கருப்பு  பணத்தை மீட்டு 15 லட்சம் தருவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. கருப்பு  பண முதலைகளின் கணக்குகள் பெறப்பட்டன. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு பணம் அங்கில்லை என்பதே தகவலாக கிடைத்தது.

பண மதிப்பிழப்பு : அறிவித்த நேரத்தில் மட்டுமே மிகப்பெரிய துணிவான சரியான நடவெடிக்கையாக இது பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பொருளாதார வல்லுனர்களும் குறிப்பாக பாஜகவின் மூத்த ஆட்களே மிக தவறான நடவடிக்கை என விமர்சிக்க தொடங்கிவிட்டனர். 99 சதவிகித பழைய நோட்டுகள் அனைத்தும் திரும்ப ரிசெர்வ் வங்கிக்கே வந்து சேர்ந்ததில் அதிர்ந்தே போனது மத்திய அரசு. இழப்பை புரிந்து கொண்டது.

குறிப்பு : தமிழகத்தை சேர்ந்த சேகர் ரெட்டியின் வீட்டில் 30 கோடி அளவிற்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் இந்த நோட்டுகள் எப்படி வந்தன என தெரியவில்லை என்கிறது சிபிஐ . இதைபோன்று எத்தனை பேர் தங்களது கருப்பு பணத்தை மாற்றினார்களோ ?

GST : அவசர கோலத்தில் GST அமலாக்கப்பட்டது. இதனால் பொருள்களுக்கு வரிவிதிப்பில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது. குறிப்பாக சிறு வணிகர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். 96 ஆயிரம் கோடி வரி வசூலாயிருக்கிறது என திரும்ப திரும்ப நிதித்துறை அமைச்சகம் கூறினாலும் அதில் பெரும்பாலான தொகை மீண்டும் அவர்களுக்கே திரும்ப கொடுக்கப்படவேண்டியது என்பதை கூற மறுக்கிறார்கள்.

GST குறித்து மிக பெரிதாக பேசிய பிரதமர். அது எதிர்ப்பை பெற்றவுடன் இதில் காங்கிரஸ்க்கும் பங்கு உண்டு என நழுவ தொடங்கியிருக்கிறார்.

மதவாதம், வெறுப்பு அரசியல், கட்சிக்குள் குழப்பம் விளைவித்து அதன் மூலமாக பயனடைவது என பல வேலைகளை செய்து கொண்டிருப்பதும் அவருக்கு பின்னடைவை கொடுத்து கொண்டிருக்கிறது .

எதிரியே இல்லை : 

வேர் அரித்துவிட்ட மரம் விழ வேண்டுமானால் காற்று அடிக்க வேண்டும். வேரில்லாத மரத்திற்கே காற்று தேவைப்படும் போது மோடி என்கிற மிகப்பெரிய தலைவரை வீழ்த்த சரியான எதிர்தலைவர் வேண்டுமல்லவா ? அப்படி ஒரு தலைவராக காங்கிரஸ் கட்சி ஆவலுடன் எதிர்பார்க்க கூடிய ராகுல் வளரவில்லை என்பதே உண்மை. அந்த நம்பிக்கையில் தான் பாஜக மிக தைரியமாக செயல்பட்டு வருகின்றது.

மம்தா பானர்ஜி  எதிர்க்கும் அளவிற்கு கூட ராகுல் மற்றும் பிற காங்கிரஸ்காரர்கள் பாஜகவை வலிமையாக எதிர்ப்பது கிடையாது.

மொத்தத்தில் மோடியின் வீரியம் குறைந்து வருவது உண்மை. ஆனால் ஓய்ந்து போக வாய்ப்பில்லை.

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *