பெண்மை அடிமையின் அடையாளம் அல்ல – மகளிர் தின சிறப்பு பகிர்வு

இனம் காண
உலகம் அளித்த பெயரே
பெண்மை”  – அன்றி
அடிமையாக கிடந்து
நொந்துபோக அடையாளமல்ல
பெண்மை
வானமும் எல்லையல்ல
சிறகு விரித்து பறந்திடு !
அடிமையெனும் சிறைமுறித்து
வாழ்வினில் உயர்ந்திடு !

 

ஆதிகாலத்தில் குடும்ப பொறுப்புகளும் நிர்வாகமும் ஏன் வேட்டையாடும் பொறுப்பும் பெண்களுக்கே இருந்ததாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன .

பிறகு வரலாறு மாற துவங்கி “பெண்மை” “புனிதம் ” “நளினம்” “வெட்கம்” “பண்பு” என பலவித பெயர்களை கொண்ட அடிமை சங்கிலிகளால் பெண்கள் பூட்டப்பட்டு அலங்கார அணிகலன்களாக வீட்டிற்குள்ளாகவே பூட்டப்பட்டு கிடக்கிறாள் .

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் . ஆனால் ஆணினத்தின் ஆதிக்கம் அதிகரித்து எல்லையில்லாமல் போனதும் அவர்கள் சொல்வதை பெண்கள் நம்பியதும், நம்பாமல் வெகுண்டெழும் பெண்களை சமுதாயம் தூற்றுவதும் மிக முக்கிய காரணம்.

காலம் இன்று மாறிக்கொண்டு வருகின்றது . பாலின அடிப்படையிலான வேறுபாடு கலையப்படுகிறது . ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் பெண்களை காண முடிகின்றது . கல்வியில் சிறந்தவர்களாக பெண்கள் இருக்கின்றனர் .

ஆனால் சதவிகித அடிப்படையில் பார்த்தால் இந்த மாற்றம் மிக குறைவானதாகவே இருக்கின்றது . இன்றும் பல பெண்கள் வீட்டிற்குள்ளாகவே அடைபட்டு கிடக்கின்றனர் , பலர் அதிலே நிம்மதியும் அடைகின்றனர் . அவர்களிடம் கேட்டால் “குடும்பம் ” “பிள்ளைகள் ” என்ற இரண்டையும் காப்பாற்றுவது அவர்களுடைய கடமையாகவே கருதுகின்றனர் .

பெண்ணிண் அடிமை விலங்கு உடைய என்ன செய்ய வேண்டும் :

பெண் சுதந்திரம் என்றால் ஏதோ ஆணை விட்டு விலகி தனியாக வாழ்வது என்பதல்ல பொருள் .

வீட்டில் எடுக்கப்படும் சாதாரண முடிவுகளில் பெண்ணிண் ஆலோசனையை மதித்து கேட்பது , அவர்களுக்கு அதில் சம முக்கியதுவம் அளிப்பது போன்றவைகள் கூட பெண் சுதந்திரம் தான் .

பெண்ணோ ஆணோ யாராக இருந்தாலும் அவர்கள் மதிக்கப்படுவது பொருளாதரத்தில் உயர்ந்திருக்கும்போது தான் . ஆகவே நன்றாக படித்த பெண்கள் திருமணமாகி குழந்தை பெற்று வளர்ப்பதோடு நின்றுவிடாமல் அதற்கென இரண்டு மூன்று ஆண்டுகள் ஒதுக்கிவைத்துவிட்டு மீண்டும் வேலைக்கு சென்று அல்லது வீட்டிலேயே தொழில் செய்து தற்சார்பு பொருளாதாரத்தை அடைய வேண்டும் .

அவ்வாறு அடைந்துவிட்டால் ஆண்கள் உங்களை அடக்க முனையும் போது கண்ணீராக நீங்கள் கரைந்துபோகாமல் வெகுண்டெழுந்து சுதந்திர பெண்ணாக வாழ தற்சார்பு பொருளாதாரம் உதவும் .

ஆண்களும் பெண்ணிண் திறமையை மதிக்க பழக வேண்டும் . பள்ளியிலோ கல்லூரியிலோ நன்றாக படிக்கும் மாணவியை மதித்த நாம், நம் மனைவியின் படிப்பறிவையும் மதிக்க வேண்டும் . அவர்களுக்கு தகுந்த மரியாதையோடு சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும் .

மாற்றம் தன்னிலிருந்தே துவங்கிட வேண்டும் .

ஒவ்வொரு பெண்ணும் அவர்களின் சுதந்திரத்தில் அக்கறை கொண்டிருந்தால் மட்டுமே “பெண் சுதந்திரம்” சாத்தியமாகும் .

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *