முதல்நாளே இளையராஜா ஆப்சென்ட் | அலைக்கழிக்கப்படுகிறதா நியமன எம்பி பதவி?

மாநிலங்கள் அவைக்கு 12 நியமன பதவிகள் உள்ளன. கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குகிறவர்களை குடியரசுத்தலைவர் நியமன எம்பியாக நியமனம் செய்திட அரசியல் சாசனம் அவருக்கு உரிமையை வழங்குகிறது. இவர்களது துறை அனுபவம்  மற்றும் அறிவாற்றல், மாநிலங்களவையில் விவாதம் நடக்கும் போது உதவிகரமாக இருக்கும் என்ற நோக்கத்தில் தான் இந்த மாதிரியான நியமன எம்பி பதவி கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்தப்பதவியில் நியமிக்கப்படும் எம்பிக்களில் பலர் அவைக்கு வருவதே இல்லை. சகல பலன்களையும் அனுபவித்துக்கொண்டு தங்களது கடமையை ஆற்றாதவர்களை கேள்விக்கு உள்ளாக்க வேண்டியது நம் கடமை. ஆகவே தான் நாம் இது குறித்து விரிவாக பேச இருக்கிறோம். 


 

தமிழகத்தை சேர்ந்த இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிசாத், வீரேந்திர ஹெக்டே ஆகிய நால்வரையும் நியமன எம்பியாக குடியரசுத்தலைவர் அறிவித்தார். இதிலே, இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே தமிழகத்தை சார்ந்தவர். இந்திய அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க குடியரசுத்தலைவர் அவர்களுக்கு உரிமை வழங்குகிறது. குடியரசுத்தலைவர் இந்த உறுப்பினர்களை நியமிக்கிறார் என்றாலும் கூட, அப்போது எந்தக்கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக்கட்சி விரும்புகிறவர்கள் தான் நியமன எம்பிக்களாக நியமிக்கப்படுவார்கள். இவர்களது பதவிக்காலம் 6 ஆண்டுகள். இவர்கள் நியமனம் செய்யப்பட்டாலும் கூட மற்ற எம்பிக்கள் போலவே செயல்படுவார்கள் (குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது)

விமர்சனத்திற்கு உள்ளான சச்சின் டெண்டுல்கர்

 

மிகப்பெரிய கிரிக்கெட் ஜாம்பவானும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வென்றவருமான சச்சின் டெண்டுல்கர் 2012 ஆம் ஆண்டு நியமன எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் பதவியில் இருந்தபோது மாநிலங்கள் அவை 348 நாட்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் அவர் கலந்துகொண்டது வெறும் 23 நாட்கள் தான் என்றால் நம்ப முடிகிறதா? அவரை விடவும் மோசமாக நடிகை ரேகா வெறும் 18 நாட்கள் தான் கலந்துகொண்டு உள்ளார். இவர்கள் சில உதாரணம் தான். 

 

இந்த வருகை குறைபாடு காரணமாக சச்சின் அவர்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

சச்சின் அடித்ததிலேயே வலி நிறைந்த சதம் இதுதான் | கென்யாவிற்கு எதிராக 140 ரன்கள்

 

பொதுவாக மாநிலங்கள் அவைக்கு உறுப்பினர்கள், மாநில சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறார்கள். ஆகவே, அவர்கள் கட்சி சார்ந்த நபர்களாகவே மாநிலங்களவைக்கு வருவார்கள். அங்கே, பல துறை சார்ந்த வல்லுனர்களும் விவாதத்தில் பங்கேற்று நாட்டு நலன் சார்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே குடியரசுத்தலைவர் அவர்களுக்கு 12 எம்பிக்களை நியமனம் செய்துகொள்ள அரசியல் சாசனம் அதிகாரம் வழங்குகிறது. 

 

உதாரணத்திற்கு, விளையாட்டுத்துறை சார்ந்து ஒரு விசயம் விவாதிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அந்த விவாதத்தில் எத்தனை அரசியல் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தாலும் கூட சச்சின் தெரிவிக்கும் கருத்துக்கு தனி முக்கியத்துவம் இருக்கும். காரணம், அவர் விளையாட்டுத்துறையில் உச்சம் தொட்ட சாதனையாளர். அதுபோலவே, ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் அறிவு பூர்வமான முறையில் மக்களுக்கு நன்மை பயக்கும் மசோதாக்கள் நிறைவேறும். அவைக்கு செல்லவே இல்லை என்றால் எப்படி இதை செய்திட முடியும்?

 

மாநிலங்கள் அவைக்கு தங்களால் சரியாக வர முடியாது என்று நினைக்கிற பெரிய ஆளுமைகள், தங்களுக்கு பதவி வழங்கப்படுவதற்கு முன்னதாகவே அதை வேண்டாம் என்று ஒதுக்கி விடுதல் சிறந்தது. அந்த இடத்தில் அந்த வேலையை சிறப்பாக செய்திட முடிகிறவருக்கு வாய்ப்பு கிடைத்தால் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

ஏமாற்றம் தந்த இளையராஜா

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நியமன எம்பி பதவி கொடுக்கப்பட்டபோது அது சில எதிர்மறை விமர்சனங்களை தந்தாலும் பலரும் அவருக்கு பதவி வழங்கப்பட்டதை வரவேற்கவே செய்தார்கள். ஆனால், அண்மையில் தேர்வு செய்யப்பட்ட நியமன எம்பிக்களுக்கு துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தபோது “இளையராஜா” அவர்களையும் அழைத்தார். ஆனால், இளையராஜா அவர்கள் அங்கே வரவில்லை என்றவுடன் சற்று ஏமாற்றம் அடைந்த அவர் மற்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

 

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இளையராஜா அவர்கள் சென்று இருப்பதால் அவர் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. 

பொறுப்புணர்ந்து அனைவரும் செயலாற்றுங்கள்

 

சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ தேர்வு செய்யப்படுகிறவர்கள் கண்டிப்பாக அவைக்கு வந்தே தீர வேண்டும் என்ற நிர்பந்தம் ஏதும் இல்லை. ஆனால், அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான முக்கிய நோக்கமே அவர்கள் சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களில் பங்கேற்று தான் சார்ந்த மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், தேர்வு செய்யப்பட்டவுடன் அவர்களில் பலர் அந்த கடமையை சரிவர செய்திடுவது இல்லை. ஆனால், பலன்கள் அனைத்தையும் மட்டும் அனுபவித்துக்கொள்வார்கள். 

 

மற்ற உறுப்பினர்களை எல்லாம் அரசியல் கட்சிகள் தான் தேர்வு செய்கின்றன. ஆனால் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களை மட்டும் குடியரசுத்தலைவர் தேர்வு செய்கிறார். ஆளும் மத்திய அரசின் விருப்பத்தின் பேரில் தான் இந்தத் தேர்வும் இருக்கும் என்பது தான் இங்கே சற்று சிக்கல். மக்கள் பணியாற்ற விருப்பம் உள்ள ஏராளமான திறமையாளர்கள் இந்தியாவில் ஏராளமாக இருக்கிறார்கள். ஆகவே, நியமன உறுப்பினர்களை தேர்வு செய்திடும் போது, குறிப்பிட்ட நபர்களுக்கு மக்கள் கடமையாற்ற விருப்பம் எந்த அளவிற்கு உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு அவர்கள் தேர்வு செய்யப்பட்டால் அவர்களால் இந்த தேசம் பலன் அடையும். இல்லையேல் வழக்கம் போல “வீண் தான்” 

மக்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினால் மட்டுமே இதில் மாற்றம் உண்டாகும்.

எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *