ஆன்லைன் ரம்மி எப்படி செயல்படுகிறது? தடை எப்போது வரும்? தடை மட்டுமே போதுமா? இளையோரே உங்களுக்காக!

ஆன்லைன் ரம்மி என இணையத்தில் தேடினால் நீங்கள் பார்ப்பவற்றில் பல, நஷ்டத்தினால் உண்டான கடன் தொல்லையால் இளைஞர்கள் செய்துகொண்ட தற்கொலை, ஆன்லைன் ரம்மி விளையாட நடந்த திருட்டு, கொலை ஆகியவை பற்றிய செய்திகள் தான் அதிகம் இருக்கும். பல முனைகளில் இருந்தும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்து வருகிறது. விரைவில் தடை வரும் என்றாலும் கூட இளைஞர்கள் மனதளவில் மாறாவிட்டால் இந்தப்பிரச்சனை நீளும்.

ஆன்லைன் ரம்மியில் அளவுக்கு அதிகமாக பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது. இப்போது, ராசிபுரம் அருகே உள்ள ஊரை சேர்ந்த சுரேஷ் என்கிற இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அது அவசர கதியில் போதிய காரணம் இன்றி கொண்டுவரப்பட்டுள்ளது என்ற வாதத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கியது. இப்போதைய திமுக அரசு, முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைத்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆராய குழு அமைத்தது. அந்தக்குழு தனது அறிக்கையை கடந்த மாதம் சமர்ப்பித்துள்ள நிலையில் விரைவில் தடை சட்டம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்குமா என்பதை நாம் விரிவாக பேசுவோம்.

ஆன்லைன் ரம்மி எப்படி செயல்படுகிறது?

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுமே திட்டமிட்டு தான் உருவாக்கப்படுகிறது. பயனாளர்களை அதிக நேரம் தங்களது விளையாட்டில் மூழ்க வைப்பதற்கான அனைத்து விவரங்களையும் குறிப்பிட்ட நிறுவனம் திரட்டிய பிறகு தான் ஆன்லைன் ஆப்களையே அவை உருவாக்குகின்றன. உதாரணத்திற்கு, பயனாளர்கள் எந்த மாதிரியான நிறங்களை விரும்புவார்கள், எவ்வளவு நேரம் அவர்களால் பொதுவாக விளையாட முடியும், அவர்களை அதிக நேரம் விளையாட வைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பவை போன்ற பல திட்டமிடல்கள் ஆன்லைன் கேம் உருவாக்கத்தில் இருக்கும். 

நமது சமூகத்தில் ரம்மி விளையாட்டை இயல்பாகவே பலர் விளையாடுவார்கள். எதார்த்தத்தில் சொல்ல வேண்டுமானால், இந்த விளையாட்டில் நீங்கள் ஜெயிப்பதற்கு உங்களுக்கு மூளையும் கொஞ்சம் இருக்க வேண்டும். ஆகவே தான் இதனை சூதாட்டம் என்று சொல்லாமல் அறிவுக்கான ஆட்டமாக சிலர் சொல்கிறார்கள். ஆனால், நிஜத்தில் விளையாடுகிற ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளன.

ஆன்லைன் ரம்மியில் நீங்கள் இணைய வேண்டும் என்பதற்காக நடிகர்களைக் கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். மேலும், நம்மைப்போன்ற நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரை பேசச்சொல்லி நான் 5 லட்சம் சம்பாதித்து விட்டேன் 7 லட்சம் சம்பாதித்து விட்டேன் என விளம்பரம் போடுகிறார்கள். அப்படியும் விளையாட வராதவர்களுக்கு இணைந்தால் போனஸ் தருகிறோம் என்ற பேர்வழியில் ஈர்க்கிறார்கள். 

இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் பெரிதாக இணைகிறார்கள். இவர்கள் இணைந்தவுடன் ஆரம்பத்தில் சில சில வெற்றிகளை பெரும் விதத்தில் கேம் உருவாக்கப்பட்டு இருக்கும். ஆகவே, இவர்கள் போடும் பணத்திற்கு கொஞ்சம் லாபம் இருப்பது போல தோன்றும். ஒவ்வொரு பயனாளரும் எப்படி விளையாடுகிறார் என்பது துவங்கி அவரைப்பற்றிய பல விவரங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டுக்கொண்டே வரும். லாபம் கிடைக்கிறது என்பதற்காக நமது இளைஞர்களும் அதிக பணத்தை போட ஆரம்பிப்பார்கள். இப்போது தான் உண்மையான சிக்கலே எழும். பல நேரங்களில் நமக்கு எதிரே விளையாடுவது நம்மைப்போன்ற ஒரு மனிதர் தான் என நாம் நினைத்துக்கொண்டு இருப்போம். ஆனால், நமக்கு எதிரே பல நேரங்களில் ஒரு புரோகிராம் தான் விளையாடிக்கொண்டு இருக்கும். நமது முந்தைய விளையாட்டு தகவல்களை அடிப்படையாகக்கொண்டு நமது ஆட்டத்தை அது தெரிந்துகொள்ளும். ஆகவே,  வெல்வது என்பது கடினமானதாக மாறிக்கொண்டே வரும். 

இப்போது நாம் நமது பணத்தை இழக்க துவங்கி இருப்போம். இந்த கேமை இனி விளையாட வேண்டாம் என்றெல்லாம் நமக்குத் தோன்றும். ஆனால் நம்மால் விளையாடாமல் இருக்கவே முடியாது. காரணம் என்னவெனில், நாம் அந்த ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி இருப்போம். எவ்வளவு கடன் ஆனாலும் எங்கிருந்தோ பணம் திரட்டி அந்த விளையாட்டை விளையாடியே ஆக வேண்டும் என்ற அளவுக்கு நமது மனநிலை மோசமாக மாறிவிடும். 

நம்மை மீறி எப்படி அப்படியெல்லாம் விளையாடத் தோன்றும் என நீங்கள் கேட்கலாம். அண்மையில் தற்கொலை செய்துகொண்ட சுரேஷ் என்கிற இளைஞரின் தற்கொலை கடிதத்தை நீங்கள் பார்த்தால் இது உண்மையென உங்களுக்கு புரியும். அவர் எழுதிவைத்த தற்கொலை கடிதத்தில், இந்த நிமிடம் கூட என்னிடம் பணம் இருந்தால் இந்த விளையாட்டை விளையாடாத்தான் தோன்றுகிறது என அவர் குறிப்பிட்டு உள்ளார். அப்படியானால் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டின் அடிமைத்தனத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆன்லைன் ரம்மி தடை எப்போது வரும்?

கடந்த அதிமுக ஆட்சியில் பொத்தாம் பொதுவாக ஆன்லைன் சூதாட்ட ஆப்கள் அனைத்திற்கும் தடை என அவசர சட்டம் இயற்றினார்கள். இதற்கு காரணமாக “அந்த காலகட்டத்தில் நடந்த தற்கொலைகளை” அப்போதைய அரசு சொன்னது. ஆனால், இந்த கேம்கள் சூதாட்டம் இல்லை என்றும் இவை மூளை திறன் அடிப்படையிலானவை என்றும் வாதிடப்பட்டது. மேலும், இவைகளைவிட அதிகம் பேர் இறக்கும் ஜல்லிட்டு போட்டியை திறமை சார்ந்தது என அரசாங்கம் நடத்தும் போது இதனை ஏன் தடை செய்திட வேண்டும் என்ற எதிர்வாதம் வைக்கப்பட்டது. இந்த வாதங்களை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், பொதுவாக அனைத்து ஆன்லைன் கேம்களையும் தடை செய்வது போன்று சட்டம் இயற்றுவது அரசியல் அமைப்புக்கு எதிரானது. சரியான காரணங்களோடு குறிப்பிட்ட ஆப்களை தடை செய்திட சட்டம் இயற்ற எந்தத்தடையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது. 

இதனை அடுத்து ஆன்லைன் ரம்மி உட்பட அனைத்து கேம்களும் மீண்டும் செய்லபட ஆரம்பித்தன. உயர்நீதிமன்றம் தடை நீக்கிய நாள் முதல் நேற்றுவரைக்கும் மட்டும் சுமார் 28 பேர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். அதுமட்டுமல்ல, பல திருட்டு வழக்குகளில் கைது செய்யப்படுவோர் ஆன்லைன் ரம்மியில் விளையாட திருடியாக கூறியுள்ளனர். 

ஆகவே, இந்த ஆன்லைன் ரம்மி ஆப்பிற்கு எதிராக பலரும் குரல் எழுப்ப துவங்கி இருக்கிறார்கள். சரியான காரணங்களோடு தடைக்கான சட்டம் இயற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைத்தது தமிழக அரசு. அந்தக்குழு கடந்த மாதம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. விரைவில் தமிழக அரசு ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தடை சட்டம் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.

இளைஞர்கள் மாற வேண்டும்

இக்கால இளைஞர்களுக்கு அதிகம் சிரமப்படாமல் விரைவாக லட்சங்களை சம்பாதித்துவிட வேண்டும் என்கிற ஆசை பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த ஆசையை மையப்படுத்தி தான் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள் அனைத்துமே களம் கண்டுள்ளன. ஆகவே, தடை சட்டம் கொண்டுவந்தாலும் கூட இளைஞர்கள் மனதளவில் மாறவில்லை எனில் வேறு ஏதோ ஒரு ரூபத்தில் உள்ள ஏமாற்று வேலையில் சிக்கிக்கொண்டு வாழ்க்கையை இழக்க நேரிடும். நாம் பொறுப்புணர்வோடு செயல்பட்டால் எந்தவித சிக்கலிலும் நாம் மாட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.


பாமரன் கருத்து

“அரசியல் பேசுவோம்! மாற்றத்தை விதைப்போம்!”


Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *