நெருங்குகிறது பிடிமானம் : ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு
விழிப்புணர்வுக்காக மீம்ஸ் போடுவது மறைந்து இப்போது தனி நபர்களை தவறாக சித்தரித்து அல்லவா மீம்ஸ் போடுகிறோம். யார் அந்த உரிமையை உங்களுக்கு கொடுத்தது? சாட்டையை சுழற்றப்போகும் நீதிமன்றம்.
ஒரு வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா வெளியிட்ட கருத்துக்கள் அல்லது கவலைகள் இன்டர்நெட் பயன்பாட்டில் மிகப்பெரிய கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டுவருவதற்கு பேருதவியாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். குறிப்பாக நீதிபதி தீபக் குப்தா அவர்கள் பின்வருமாறு தனது கவலைகளை அரசுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். இவற்றில் எதனையும் நாம் நிராகரித்துவிட முடியாது என்பதே எதார்த்தம்.
>> ஒருவரால் டார்க் வெப்பை பயன்படுத்தி எந்தவித ஆதாரமும் இன்றி ஏ கே 47 முதற்கொண்டு எந்தவித அபாயகரமான பொருளையும் வாங்க முடியும் என்ற நிலைக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
>> அப்பாவிகள் இணையத்தில் வசைக்கு உள்ளாகின்றனர். அதனை ஒரு வேலையாக செய்தே சிலர் புகழ் அடைகிறார்கள் [மீம்ஸ் ஐ நீதிபதி அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என நினைக்கிறன்]
>> நான் யாரென்றே அறியாத ஒருவர் என்னை ஏன் கிண்டலும் கேலியும் செய்திட வேண்டும்? என்னுடைய குணாம்சம் பற்றி பொய்களை ஏன் பரப்பிட வேண்டும்? ஒரு சாதாரண நபரால் எப்படி அவரை தற்காத்துக்கொள்ள இயலும்?
>> இறுதியாக நானே எனது ஸ்மார்ட் போனை விட்டுவிட்டு பழைய நிலைக்கு சென்றுவிடலாமா என எண்ணுகிறேன் என்றார். இதில் முக்கியமாக பேசப்பட்டது என்னவெனில் End to End Encryption பற்றித்தான். இந்த தொழில்நுட்பத்தின்படி அனுப்புகிறவர் மற்றும் பெருகிறவரால் மட்டுமே குறிப்பிட்ட செய்தியை படிக்க இயலும். மாறாக இடைமறித்து கேட்க இயலாது. தற்போது வாட்ஸ்ஆப் போன்றவை இதனை பயன்படுத்துகின்றன.
இந்த விவாதத்தின் மூலமாக தனிநபர் உரிமைகள் பறிபோகாமல் அதேசமயம் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை இணையம் வழங்கிடும் வகையில் கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும் என கேட்டுக்கொல்லப்பட்டிருக்கிறது.
முறையாக பயன்படுத்தினால் ஏன் கட்டுப்பாடு வரப்போகிறது?
நமக்கு இணைய சுதந்திரம் முழுமையாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதனை முறையாக பயன்படுத்தினால் எதற்கு இப்படி புதிது புதிதாக கட்டுப்பாடுகளும் விதிகளும் விவாதங்களும் வரப்போகின்றன. நினைத்துப்பாருங்கள் தினந்தோறும் நாம் எத்தனை தனி நபர்களை தவறாக கிண்டல் செய்து வெளியிடப்படுகின்ற மீம்ஸ்களை பார்க்கிறோம்? வன்முறையை தூண்டக்கூடிய தவறான செய்திகளை எத்தனை பார்க்கிறோம்? ஆக உண்மையான பிரச்சனை நம்மில் இருந்துதான் துவங்குகிறது. வீட்டிலும் நாட்டிலும் கிடைக்கும் சுதந்திரத்தை நாம் கட்டுப்பாட்டோடு பயன்படுத்தினால் புதிய விதிகள் வராது.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!