மணிப்பூர் கலவரம், காரணம் என்ன? | Manipur Violation In Tamil

மணிப்பூர் கலவரம் பல நாட்களாக நீடித்து வருகிறது. இந்த  கலவரத்தால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அண்மையில் பெண் ஒருவரை கலவரக்காரர்கள் நிர்வாணமாக இழுத்துவரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 

அங்கு, பாஜக கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது என்பதும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மணிப்பூர் கலவரம் குறித்து பேச மறுக்கிறார் என்பதும் பலரது குற்றச்சாட்டாக இருக்கிறது. 

இந்த நிலையில், மணிப்பூர் கலவரம் குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் தெளிவாக அறிந்துகொள்ள விரும்புவோருக்கு இந்தப்பதிவு. 

மணிப்பூர் பிரச்சனை முக்கியக்காரணம்

மணிப்பூர் பிரச்சனைக்கு முக்கியமான காரணம், மெய்தேய் இனக்குழுவுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கிட அம்மாநில அரசு பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திட அம்மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, பழங்குடியின மக்கள் நடத்திய பேரணி, அதில் நடந்த வன்முறை தான் மணிப்பூர் வன்முறையின் துவக்கப்புள்ளி.

மெய்தேய் இனக்குழுவுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதால் இவ்வளவு கலவரம் ஏன் நடக்கிறது என்பதை அறிய நீங்கள் மணிப்பூர் பற்றி அறிவது அவசியம்.

மணிப்பூர் மாநிலம்

மணிப்பூரில் நடக்கும் கலவரங்களை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனில் அங்கு வாழக்கூடிய முக்கிய இனக்குழுக்கள் பற்றி அறிந்துகொள்வது அவசியம். மணிப்பூரில் முக்கியமாக மூன்று இன குழுக்கள் இருக்கின்றன. அவை, மெய்தேய், குகி மற்றும் நாகா. 

இந்த மூன்றில் குகி மற்றும் நாகா இனக்குழுக்கள் பழங்குடியின அந்தஸ்து கொண்டுள்ள இன குழுக்கள். இந்த பழங்குடியின இனக்குழுக்கள் அனைத்தும் மலைப் பகுதிகளில் வசிக்கின்றனர். மற்றொரு இனக்குழுவான மெய்தேய் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கிறார்கள். 

மணிப்பூரில் 90% மக்கள்தொகை கொண்ட இனக்குழு மெய்தேய். மக்கள் தொகையில் 90% ஆக இருந்தாலும் இவர்கள் 10% நிலப்பரப்பில் தான் வாழ்கிறார்கள். குகி, நாகா போன்ற பழங்குடியின இனக்குழு மக்கள்தொகை அடிப்படையில் 10% ஆக இருந்தாலும் அவர்களே 90% நிலப்பரப்பில் வாழ்கிறார்கள்.

அதேபோல, மெய்தேய் இனக்குழுவில் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். குகி மற்றும் நாகா பழங்குடியின இனக்குழுவில் பெரும்பான்மையான மக்கள் கிறிஸ்துவர்கள். 

சரி, இப்போது என்ன பிரச்சனை?

மணிப்பூரில் 90% மக்கள்தொகையைக் கொண்ட இனக்குழுவான மெய்தேய் தான் அரசியலிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு, இப்போது மணிப்பூரில் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதிலே, 40 பேர் மெய்தேய் இனக்குழுவை சேர்ந்தவர்கள். 20 பேர் குகி, நாகா இனக்குழுவை சேர்ந்தவர்கள். இதுவரைக்கும் இருந்த முதல்வர்களில் 10 பேர் மெய்தேய், 2 முறை மட்டுமே பிற நபர்கள். இப்போது உள்ள முதல்வரும் மெய்தேய் இனக்குழுவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், குகி மற்றும் நாகா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் மெய்தேய் இனக்குழு ஆதிக்கம் செலுத்துவதாக உணர்கிறார்கள். 

மணிப்பூர் வன்முறைக்கு என்ன காரணம்?

இந்திய ஒன்றியத்தில் இணைவதற்கு முன்னதாக மெய்தேய் இனக்குழுவிற்கு பழங்குடியின அந்தஸ்து இருந்தது. ஆகவே, அதேபோல இப்போதும் எங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என மெய்தேய் இனக்குழுவை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அதில் தீர்ப்பு வழங்கிய அம்மாநில உயர்நீதிமன்றம், மெய்தேய் இனக்குழுவிற்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குமாறு மத்திய பழங்குடியின மேம்பாட்டுத்துறைக்கு பரிந்துரை செய்திட அம்மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. 

மெய்தேய் இனக்குழுவிற்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டால் ஏற்கனவே அரசியல் உள்ளிட்ட விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் அவர்கள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விசயங்களிலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது என்கிற அச்சம் ககி மற்றும் நாகா உள்ளிட்ட பழங்குடியின இனக்குழுவிற்கு உள்ளது. அதேபோல, பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டால், மெய்தேய் இனக்குழு மலைப்பகுதிகளில் நிலம் வாங்க முடியும் என்கிற நிலை வரலாம். இதுவும் பிரச்சனைக்கு முக்கியக்காரணம். 

மெய்தேய் இனக்குழுவிற்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்படுவதை எதிர்த்து மே 03 ஆம் தேதி பழங்குடியின மாணவ அமைப்பு அமைதி பேரணி ஒன்றினை 10 க்கும் மேற்பட்ட மலை மாவட்டங்களில் நடத்தியது. அங்கே ஆரம்பித்த வன்முறை இன்றுவரை தொடர்கிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். தொடரும் வன்முறையில் எண்ணற்ற கட்டிடங்கள், வீடுகள், கிருஸ்துவ மடாலயங்கள், கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.

மெளனம் காக்கும் ஆட்சியாளர்கள்

கலவரம் துவங்கி மாதங்களை கடந்துவிட்டது. ஆனாலும், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. அங்கே ஆளும் மாநில அரசு பாஜக அரசாக இருப்பதனால் தான் இத்தனை மவுனம் என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துகிறார்கள்.

ஜூலை 19 அன்று, ஒரு பெண்ணை வன்முறையாளர்கள் நிர்வாணமாக அழைத்துவரும் வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கி இருக்கிறது. இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மனிதரும் குறிப்பாக ஒவ்வொரு பெண்ணும் மாண்புடனும் பாதுகாப்புடனும் வாழ்வதை அரசு உறுதி செய்திட வேண்டும். இதனை பிரதமர் உறுதி செய்திட வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருக்கிறது.

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *