அவள் ஏன் மந்திர புன்னகை பூத்தாள்?


 

காலை எட்டுமணி இருக்கும் . நிம்மதியாக நடந்து செல்ல லாயக்கற்ற  வாகனங்கள் நெரித்துக்கொண்டு செல்கின்ற சாலையில் நடைபயணம் சென்றேன் . வாகன சத்தத்திலிருந்து காதுகளுக்கு கொஞ்சம் விடுதலை கொடுக்கலாமென்று ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு ஓரமாக நடக்க ஆரம்பித்தேன் . பள்ளிக்கு கிளம்பியிருக்கும் மாணவிகள் இருவர் சாலை ஓரமாக காத்திருந்தார்கள் , அவர்களின் அம்மாக்கள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் .

 

வழக்கமாக போகும் வழிக்கு எதிர் திசையில் செல்லலாமென்று முடிவெடுத்து திரும்பினேன் . சிறிது தூரத்தில் அவள் வந்தாள் . புன்னகைத்தாள் . அவள் புன்னகைக்கிறாள் என்பதை கவனித்த எனக்கு , என்னை பார்த்து புன்னகைக்கவில்லை என்பதை அறிந்துகொள்ளவும் முடிந்தது .

 

 

 



17 முதல் 20 வயத்துக்குள்ளாகத்தான் இருக்க முடியும். கொஞ்சம் அழுக்கான முகம் , பார்த்தவுடனே அழுக்கென்று அறிந்துகொள்ள முடியாத அளவிலான ஆடை . அவளை நான் கண்ட போது எனக்கும் அவளுக்கும் இடையே 10 அல்லது 15 அடி தூரமிருக்கும் . அவளுடைய செருப்பில்லாத கால்கள் மிகவேகமாக என் திசை நோக்கி வந்தன . எனக்கு சற்று தொலைவில் இருக்கும் போது சிரித்துக்கொண்டு முன்பை விட சற்று வேகமாகவே முன்னேறினாள் .

 


 

அவளுடைய புன்னகை, ஏழை ஒருவனுக்கு கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்தால் ஏழைக்கு வருகின்ற புன்னகை போன்றும், வரவே மாட்டான் என பிரிந்த மகன் தாயை சேரும் போது தாய்க்கு வருகின்ற புன்னகை போன்றும் இருந்தது . எனக்கு தெரிந்தவரையில் இப்படி திருப்தி அடைந்த புன்னகையினை சிலமுறை மட்டுமே கண்டிருக்கின்றேன் . அவள் புன்னகையோடு என்னை கடந்தாள் . எதற்காக இந்தப்பெண் இப்படி புன்னகைத்துக்கொண்டு செல்கிறாள் ? அறிந்துகொள்ள ஆவலோடு திரும்பினேன் .

 

ஆச்சரியமாக இருந்தது , அவள் புன்னகை புரிந்தது அவளைவிட ஒன்றிரண்டு வயது குறைந்த இளைஞன் ஒருவனை பார்த்து தான் . அவளைப்போன்றே அவனும் அழுக்கான உடை அணிந்திருந்தான் ,  முந்தைய நாள் இரவில் குடித்துவிட்டு போட்டிருந்த காலியான நான்கைந்து பீர் பாட்டில்களை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு வந்தான் . விளையாட்டு திடலுக்குள் இருந்து வந்து கொண்டிருந்தான் . அப்போது அவன் கைகளில் இருந்த காலி வாட்டர் கேன் ஒன்று விழுக , அதை எடுக்கத்தான் அந்தப்பெண் மந்திர புன்னகையோடு வேகமாக என்னை கடந்து முன்னேறியிருக்கிறாள் .


திரும்பி நடக்கும் போது அருகிலே ஒரு மீன்பாடி வண்டியில் சிறுமி , இன்னொரு பெண் அமர்ந்து இருந்தார்கள் . அங்கே பார்த்தவர்கள்  இவர்களுடனேயே வந்திருப்பார்கள் என நம்பலாம் . எனக்கு ஆச்சரியம் அளிக்க கூடிய விசயம் , இதனை எழுதிட வேண்டும் என தூண்டிய விசயம் அவளது புன்னகைதான் . அது ஆண் பெண்ணை பார்க்கும் போது  வருகின்ற ஈர்ப்பினை போன்றதல்ல , சாலையில் செல்லும்போது காணுவோமே ஒரு குழந்தையின் சிரிப்பை அதனை போன்றது .

 


 

இன்னும் எனக்கு விளங்கிடவில்லை , நான்கைந்து பீர் பாட்டில்களில் சிறிது பணம் கிடைத்துவிடும் என்பதனால் சிரித்தாளா ? பீர் பாட்டில்களை சுமந்து வந்த நபரை பார்த்து சிரித்தாளா ? என்னால் சரியாக யூகிக்க இயலவில்லை.  மாதச்சம்பளம் வாங்கிடும் நம்மில் பலர் காசுகொடுத்து யோகா வகுப்பிற்கு சென்று பிணங்களை போன்று உணர்வற்று சிரித்துக்கொண்டு இருக்கையில் குப்பை பொறுக்கிக்கொண்டு நிச்சயமில்லாமல் அன்றாட வாழ்வினை நகர்த்துகின்ற அவளிடம் கண்ட புன்னகையை மந்திரப்புன்னகையாகவே இருக்க முடியும் .

 

 

ஆத்மார்த்தமாக சிரிப்பதற்கு பட்டாடையோ பணக்குவியலோ ஆடம்பரமோ தேவையில்லை , இருப்பதில் நிம்மதியடையும் மனமே என்பதை மேகத்தை விலக்கிக்கொண்டு வரும் சூரிய ஒளி இருள் விலக்குவதுபோல அவளது சிரிப்பு எனக்கு உணர்த்தியது .

 

இப்போதும் நான் யோசிக்கிறேன் அவள் ஏன் மந்திரப்புன்னகை பூத்தாள்?

 




பாமரன் கருத்து

 

 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *