சர்க்கார் : விஜய் தயாராகி விட்டார், தவறில்லை ஆனால் …
நான் விஜய் அவர்களின் தீவிர ரசிகன் அல்ல …ஆகவே உங்களின் எண்ணங்களுக்கு மாற்றாக கூட கருத்துக்கள் இடம் பெற்று இருக்கலாம் . மாற்றுக்கருத்து இருந்தால் பதிவிடுங்கள் தவறாமல் .
[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடித்திருக்கும் சர்க்கார் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா அக்டோபர் 02 அன்று நடந்தது . சர்க்கார் ஒரு அரசியல் படம் என்பது அனைவரும் அறிந்ததே . ஆனால் சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய சர்க்கார் பட நாயகன் திரு விஜய் அவர்களின் பேச்சு வித்தியாசமானதாக இருந்தது . நான் அறிந்தவரையில் மேடையில் இதுபோன்ற பாணியில் விஜய் அவர்கள் பேசி பார்த்தது இல்லை . நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லையென்று சொல்லி சொல்லி இன்றைய அரசியலையும் தொட்டு பேசினார் . எல்லாரும் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்து சர்க்கார் அமைப்பார்கள் நாம் சர்க்கார் அமைத்தபிறகு உங்ககிட்ட வாக்கு கேக்குறோம் , புடுச்சா ஓட்டு போடுங்க என அதிரடி காட்டினார். அரசியலுக்கு வர அடித்தளம் போடுகிறாரா விஜய் ? என பரவலாக பேச ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்களும் மற்றவர்களும்.
100 சதவிகிதம் மாறிய விஜய்
விஜய் மேடைகளில் நன்றாக பேசுவார் சில நேரங்களில் பன்ச் களையும் சொல்லிடுவார் . ஆனால் ஒருவித அமைதியான பாணியில் அவர் மேடைகளில் பேசிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார் . ஆனால் சர்க்கார் பட இசை வெளியீட்டு விழா மேடையில் பேசிய விஜய் ‘இன்று இப்படித்தான் பேச வேண்டும்‘ என்ற முடிவோடு வந்ததை போன்றே தோன்றியது . அவர் பயன்படுத்திய வார்த்தைகள் , பன்ச்கள் மேடையேறிய பின்னர் தானாக வந்தவை அல்ல . ஏற்கனவே தயார் செய்த பேச்சாகவே அது இருக்கவேண்டும் . இதனை நன்றாக உணர முடிந்தது . எதற்க்கான மாற்றமாக இது இருக்கும் ? அரசியலுக்கு வரவா ?
சில பன்ச்கள் : விஜய் க்கு உரியதாகவே தோன்றவில்லை
பல இடங்களில் விஜய் பேசியது ரசிக்கும்படியானதாக இருந்தாலும் சில இடங்களில் பயன்படுத்திய வாக்கியங்களை கவனிக்கும் போது ‘விஜய்யா இப்படி பேசுகிறார்?‘ என தோன்றியது . உதாரணத்திற்கு கலாநிதிமாறனை புகழ்ந்தது .
கலையை வளர்க்கவேண்டும் என்பதற்காகவே நிதியை அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டு இருப்பவர்
அதுனாலதான் இவருக்கு கலாநிதிமாறன் னு பேரு வச்சாங்களா
இல்ல , கலாநிதிமாறன் னு பேரு வச்சதுனால அள்ளி அள்ளி கொடுக்கிறாரா ?
இந்த சொல்லாடலை பயன்படுத்துவதற்கு இரண்டு நொடிகளுக்கு முன்பாக விஜய் அவர்கள் தன்னுடய Body Language ஐ மாற்றியிருப்பார் . ஆக அவர் இப்படி பேசவேண்டும் என்ற முடிவோடு வந்திருக்கின்றார் என்ற முடிவிற்கு வந்துவிடலாம் , பேசுவது தவறும் இல்லை . ஆனால் இதுபோன்ற வசனங்கள் செயற்கையானதாக தோன்றிடவும் தவறவில்லை .
இறுதியாக யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்று ஒரு ராஜா கதை சொன்னாரே அது சூப்பர்
விஜய் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டார்
விஜய் அவர்களின் பேச்சை கேட்டபிறகு அரசியலுக்கு வரப்போகிறாரா என சந்தேக கேள்வி எழுப்புகிறார்கள் . என்னை பொறுத்தவரையில் விஜய் ஏற்கனவே அரசியலுக்குள் வந்துவிட்டார் . பல நேரங்களில் சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் கருத்து தெரிவிக்கும் விஜய் அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களை இரவோடு இரவாக சென்று சந்தித்தாரோ அப்போதே அது உறுதியாகிவிட்டது . மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுப்பவரும் பாதிக்கபட்ட மக்களுடன் துக்கத்தை பகிர்ந்துகொள்ள நினைப்பவரும் அரசியல்வாதி தான் .
அரசியல்வாதி என்றால் பொதுநலவாதி என பொருள் கொள்பவர்களில் ஒருவன் நான் . விஜய் பொதுநலவாதியாகி நிறைய காலம் ஆகிவிட்டது .
விஜய் விரும்பினால் வரலாம் , ஆனால்…
கடந்த காலங்களில் விஜய் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு வர வாய்ப்பு அதிகமிருந்தது . அதனை அவரது தந்தை SAC ஊக்குவித்தும் வந்தார் . விஜய் அவர்களுக்கு பிடிக்கவில்லை அவரது அப்பா திணிக்கிறார் என்றும் பேச்சு எழுந்தது . இன்றைய அரசியல் சூழல் , நல்லவர்களுக்கான வெற்றிடம் , மக்களின் அவதி , அரசியலில் நிலைப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றை கண்டபிறகு விஜய் அவர்களின் மனதில் தேர்தல் அரசியல் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவரது கடந்தகால நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் .
விஜய் அவர்களுக்கு நமது சார்பாக சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான் . உங்களது இசை நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்கள் உங்களது ரசிகர்கள் . ஆகவே நீங்கள் எதனை பேசினாலும் கைதட்டுவார்கள் (ஓட்டு போடுவார்கள்) . ஆனால் தேர்தலில் பல நாயகர்களின் ரசிகளின் வாக்குகளையும் வெல்லவேண்டியது அவசியம் .
நாம் ஒன்றினை மனதார விரும்புகின்றோம் என்றால் அதற்காக எதனையும் செய்திடலாம் , தியாகங்கள் புரிந்திடலாம் . ஆனால் பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக எத்தகைய முடிவினையும் நீங்கள் எடுக்காதீர்கள் , உங்களின் மீதுள்ள அக்கறையால் சொல்கிற உண்மை இது .
உங்களின் முடிவிற்கு முன்பாக உங்களது வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்
உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும்
கடுப்பேத்துவரன்கிட்ட கம்முனும் இருக்கணும்
முதல் வரிசையில் அமர்ந்து கைதட்டி புன்னகை பூத்தவர்களை கண்டுகொள்ளாதீர்கள் , கடைக்கோடியில் இருக்கும் பாமரனின் கருத்துக்களை அறிந்து செயல்படுங்கள் . அப்போதுதான் உங்களுடைய வாழ்க்கை ஜம்முனு இருக்கும்.
உங்களது முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகிறது பாமரன் கருத்து
அருமை நண்பா 👌 உங்கள் பதிவு