விடியலை தேடி – ஒரு இளைஞனின் பயணம் – மதன் – சிறுகதை
எல்லோருடைய வாழ்க்கையிலும் இருண்ட காலம் ஒன்று கண்டிப்பாக வரும். அவ்வாறு வரும்பொழுது, நம்முடைய வாழ்க்கையை அந்த இருளில் முடித்துக்கொள்ள எண்ணாமல் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்தப்பயணம் நிச்சயமாக “விடியலைத்தேடி” தரும். – மதன்
ஒரு புதிய படைப்பாளியின் முயற்சி இந்த சிறுகதை. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள். அவரை ஊக்கப்படுத்துங்கள்.
முருகன் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். அவன் ஊர் தஞ்சாவூர் பக்கத்தில் இருக்கும் ஓர் சிறிய கிராமம். அவனுடைய தந்தை பெரியசாமி கூலி வேலை செய்யும் தொழிலாளி. முருகன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த கால கட்டத்தில் அவனுடைய தந்தை இறந்துவிட்டார். முருகனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவள் பெயர் கார்த்திகா. குடும்ப சூழ்நிலையை நினைத்து பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மேல் படிப்பை விட்டு விட்டு வேலைக்கு சென்று விட முடிவு செய்தான் முருகன். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பில் 1025 மதிப்பெண் எடுத்த தன் மகனை வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்லாத முருகனின் தாய் கணகாம்பால் , தான் வேலைக்கு சென்று மகனை படிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள் .
தன் கணவர் வேலை செய்த இடத்திலேயே தானும் வேலை செய்யலாம் என்று முடிவு எடுத்து அந்த முதலாளியிடம் வேலை கேட்க சென்றாள். கூடவே மகன் முருகனும் சென்றான். போகும் வழி எல்லாம் அவளுடைய எண்ணங்கள் எல்லாம் தன் இரு குழந்தைகளின் வாழ்க்கை பற்றிய எண்ணமாகவே இருந்தது. அது மட்டும் இல்லாமல் தன் கணவர் இருக்கும்பொழுது தன்னுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதையும் நினைத்து கொண்டே முதலாளி வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் கணகாம்பல். இருண்ட வாழ்வில் என்றாவது ஒருநாள் “விடியல் வரும்” என்ற நம்பிக்கையோடு, அவளுடைய மன தைரியமும் , நடையின் வேகமும் அதிகரித்தது. இவ்வாறு எண்ணிக்கொண்டே முதலாளியின் வீட்டுக்குள் நுழைந்தார்கள் இருவரும்.
அதுவரை தன் கணவன் என்ன வேலை செய்கிறான் என்பதே தெரியதவளாய் இருந்த அவளுக்கு அன்று தான் தெரிஞ்சது தன் கணவனின் வேலை எவ்வளவு கஷ்டம் என்பது. ஆம் அந்த தொழிற்சாலையில் கரி அள்ளிப்போடும் வேலையைத்தான் பார்த்துவந்தார். வெந்து வரும் கறியை அள்ளி போடுவது அவ்வளவு சுலபம் இல்லை.அந்த சூட்டில் நம்மால் ஒரு ஐந்து நிமிடம் கூட நிற்க முடியாது. ஆனால் இவ்வளவு காலம் இந்த கஷ்டத்தை அவர் ஒருபோதும் தன் மனைவியிடமோ , பிள்ளைகளிடம் கூட சொன்னதே இல்லை. அன்று தான் புரிந்தது முருகனுக்கு தன் தந்தை எவ்வளவு கஷ்ட பட்டு தன்னை இவ்வளவு காலம் படிக்க வைத்திருக்கிறார் என்று.
அந்த சூட்டில் வேலை செய்த காரணத்தினால் தான் தன் தந்தை உடல்நிலை சரி இல்லாமல் இறந்தார் என்று அவன் தெரிந்துகொண்டபோது அவன் மனதில் ஒரு விசயம் தோன்றியது. கரி அள்ளுவதற்கு மனிதர்களுக்கு பதில் இயந்திரம் பயன்படுத்தினால் தனது அப்பாவைப்போல இன்னொருவர் இறக்க மாட்டார் அல்லவா என எண்ணிக்கொண்டான். ஏனென்றால் தனது தந்தைபோல அங்கு அவன் வேலை செய்த எண்ணற்ற தந்தைகளை பார்த்தான். அவர்களின் பிள்ளைகளுக்கு ஒரு போதும் நம் நிலமை வந்து விட கூடாது என்று எண்ணினான். நிச்சயமாக தான் ஒரு சமயம் இதற்கொரு இயந்திரத்தைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தான். அதுவரை தோன்றாத ஒரு பயம் அவனிடம் திடீரென வந்தது. தன் தந்தை அளவுக்கு தன் தாயால் இங்கு வேலை செய்ய முடியுமா,அப்படி செய்தால் அவர்களுக்கும் தன் தந்தையின் நிலைமை தான் உண்டாகுமா, இந்த வேலைக்கு நாம் சேர்ந்து விடலாமா என்று பலவாறு அவனின் எண்ண ஓட்டங்கள் இருந்தன.
இருந்தாலும் நாம் ஒருமுறை முதலாளியிடம் பேசி பார்க்கலாம் என்று முதலாளி அறைக்கு சென்றான். சிறிது தயக்கத்தோடு அவரிடம் ஏதோ சொல்ல வருபவன் போல் நின்றான். அதைப் புரிந்து கொண்ட முதலாளி எதாவது என்னிடம் சொல்ல விரும்புகிறாயா என்று கேட்டார். அது வந்து……என தயங்கி நிற்க..சொல்லு தம்பி என்ன சொல்ல வருகிறாய் என்று முதலாளி மீண்டும் கேட்டார். அது வந்து முதலாளி என் தாயால் இந்த கரி அள்ளும் வேலையை செய்ய இயலாது. அவருக்கு வேறு ஏதேனும் வேலை இருந்தால் கொடுங்கள் என்று கண்ணீர் வராத குறையாய் கேட்டான். அவனை பார்த்த முதலாளி சிரித்து கொண்டே , பெண்களை இவ்வளவு கடினமான வேலைக்கு அனுப்பும் கல் நெஞ்சம் படைத்தவன் நான் இல்லை.
உன் தாய் எட்டாவது வரை படித்திருக்கிறார் என்று உன் தந்தை என்னிடம் ஒரு முறை கூறியிருக்கிறார், அதனால் அவருக்கு கரி மூட்டைகளை கணக்கு பார்க்கும் வேலையை கொடுக்க முடிவு எடுத்து இருக்கிறேன் என்று சொன்னார். இதை கேட்டதும் அவனுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. பிறகு அவன் தாயாரை அழைத்து கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஒரு மாதத்திற்கு பிறகு பொறியியல் கலந்தாய்வு நடந்தது.அதில் அவனுக்கு அரசாங்க கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை, தனியார் கல்லூரியிலேயே இடம் கிடைத்தது. இருந்தாலும் அவன் தாய் அதை பற்றி கவலை படவில்லை.அந்த கல்லூரியில் சேர்த்து விட்டாள். தன்னிடம் இருந்த நகைகள் மற்றும் முதலாளியிடம் சிறிது பணம் வட்டிக்கு என தன்னால் முடிந்த வரை பணத்தை சேர்த்து கல்லூரியில் சேர்த்து விட்டாள்.
பொறியியலில் இயந்திரவியல் துறையில் சேர்ந்து தன்னால் முடிந்த வரை அவன் படிப்பில் கவனம் செலுத்தி படித்தான். அவனுடைய கல்லூரி படிப்பு காலம் கல்வி கடனிலும், ஹாஸ்டல் செலவுகள் எல்லாம் அம்மா வாங்கின கடனிலும் சென்றது. நான்கு வருடங்கள் படிப்பை முடித்து விட்டு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான் முருகன். இதற்கு இடையில் முருகனின் தங்கை கல்லூரியில் டிகிரி சேர்ந்து விட்டாள். முருகன் குறைந்த சம்பலதிலேயே வேலைக்கு சேர்ந்தான். அவனுடைய சம்பளம் அவனின் கல்வி கடனை அடைப்பதற்கு , வீட்டு செலவிற்கு மட்டுமே சரியாக இருந்தது. இந்த பணத்தை கூட அவன் கஷ்டப்பட்டுதான் அனுப்பி வந்தான். அவனுடைய நண்பர்கள் வார இறுதியில் வெளியில் செல்லும் போது கூட முருகன் அவர்களுடன் செல்வதற்கு தயங்குவான். ரொம்ப சிக்கனமாக இருக்காதே முருகா என நண்பர்கள் பேசினாலும் கூட சிரித்துக்கொண்டே நகர்ந்துபோவான்.
காரணம், அப்படி வெளியில் செல்லும் போது செலவு செய்திடும் பணம் தனது குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியமானது என அவனுக்குத் தெரியும். ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும் இரயில் பயங்களையே மேற்கொள்வான். காரணம் ரயிலில் தான் பயண செலவு குறைவாக இருக்கும். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகையின் போது கூட தனது தாய் மற்றும் தங்கைக்கு தான் துணி வாங்கி செல்வான். அவ்வளவு சிக்கனமாக அவன் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை நடத்தி வந்தான். இது போலவே ஒரு நான்கு வருடங்கள் கழிந்தன. விலை வாசி மட்டும் தான் மலை போல் உயர்ந்து கொண்டே போனதே தவிர அவனுடைய சம்பளம் கடுகு அளவுதான் உயர்ந்தது. இதற்கு இடையில் அவனுடைய தங்கைக்கு ஒரு நல்ல இடத்தில் மாபிள்ளை வரன் வந்தது.
இரு வீட்டாரும் முழு சம்மதத்தோடு இருந்தார்கள். இதனால் கல்யாண வேளையில் இறங்கினான் முருகன். நல்ல வேளையாக அந்த வருடதோடு அவனுடைய எல்லா கடன்களையும் அடைத்து விட்டான் முருகன். தனது தங்கையின் திருமணத்திற்கு அடுத்ததாக லோன் வாங்குவதற்கு தயாராக இருந்தான். இதற்கு இடையில் அவனுடைய மனதில் நீண்ட நாள் ஆசையாக , தனது தாயை இதோடு வேலைக்கு செல்ல கூடாது வீட்டிலேயே இருங்கள் என்று சொல்ல போவதாகவும் , அந்த தொழிற்சாலையில் தானியங்கி இயந்திரம் ஒன்று வாங்கி கொடுக்க போவதாகவும் அவன் பெருமையாக எண்ணிக்கொண்டான். தனது தங்கைக்கு வரன் கிடைத்த மகிழ்ச்சியோடு சென்னைக்கு கிளம்பிவிட்டான் முருகன்.
சென்னையில் அவன் லோன் போடுவதற்காக வங்கிக்கு சென்றான். வங்கியில் அவன் காத்திருக்கும் போது தான் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது, கல்யாண செலவோடு சேர்த்து , நமது ஊர் தொழிற்சாலைக்கு தானியங்கி இயந்திரம் வாங்குவதற்கும் சேர்த்து பணத்தை வாங்கி கொண்டு, மொத்தமாக நாம் கடனை அடைத்து விடலாம் என்று எண்ணி கொண்டே வங்கி மேனஜர் ஐ பார்க்க சென்றான். அவனுடைய தேவையை சொல்லி அவனுக்கு தேவையான பணத்தை கேட்டான். மேனஜர் அவனுடைய வங்கி கணக்குகளை எல்லாம் சரி பார்த்து விட்டு ஓரிரு நாட்களில் பணத்தை உறுதிப்படுத்துகிறேன் என்று கூறிவிட்டார். அந்த ஓரிரு நாட்களில் முருகன் மனதில் என்ன என்னமோ தோன்றியது . மேனஜர் நாம் கேட்ட பணத்தை குடுதுவிட்டால் , தங்கையின் திருமண செலவுகள் போக , தானியங்கி இயந்திரத்தை வாங்கி குடுத்து விடலாம் என நம்பிக்கையோடு இருந்தான்.
மீதி பணத்தை வைத்து கொண்டு அம்மாவிற்கு ஒரு சிறிய பெட்டி கடை ஒன்றை வைத்து கொடுத்து விடலாம். இவ்வாறு பல்வேறு யோசனைகள் அவனுள்ளே இரண்டு நாட்களாக ஓடி கொண்டே இருந்தது.அன்று காலை வங்கியில் இருந்து அவனுக்கு கால் வந்தது.அவன் கேட்ட மொத்த பணத்தையும் வங்கி கொடுப்பதாக ஒப்புக்கொண்டது.சந்தோசத்தில் துள்ளி குதித்தான் இன்னும் இரண்டு மாதங்களே இருந்தன தங்கையின் திருமணத்திற்கு. அப்படியே ஒரு மாதம் சென்று விட்டது அப்போதுதான் அந்த அதிர்ச்சி அவனிடம் வந்தது. அவன் வேலை பார்த்த கம்பெனியை மூடபோவதகவும் அனைவரும் வேறு வேலை பார்த்து கொள்ளுமாறும் சொல்லி விட்டார்கள். முருகன் செய்வது அறியாமல் திகைத்தான்.
அவனிடம் சேமிப்பு என்பதே இல்லை, வேலைக்கு சென்றால் தான் அவனால் அந்த மாதத்தை ஓட்ட முடியும்.இப்பொழுது முருகனின் நிலைமை தலைகீழாக மாறியது. இந்த நேரத்தில் வீட்டில் இந்த விசயத்தை சொல்வது நல்லது இல்லை என்று எண்ணினான். அடுத்த ஒரு மாதம் வேலை தேடி அலைந்தான் எங்கேயும் கிடைக்கவில்லை. இதற்கு இடையில் திருமண வேலை விசயமாக ஊருக்கு வேற அடிக்கடி சென்று வந்தான். நண்பர்கள் அவர்களால் முடிந்த அளவுக்கு அவனுக்கு உதவினார்கள். இதை நினைத்து கொண்டே முருகன் மன நிலைமை மிகவும் மோசமானது. இதற்கு மேல் நாம் எதற்கும் உதவ போவதில்லை. நாம் நினைத்த விசயங்கள் எதுவும் நடைபெற போவதில்லை என்று தனக்குள்ளே சொல்லி கொண்டான். இதற்கிடையில் தங்கையின் திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.
இதில் என்ன கொடுமை என்றால் அவன் வாங்கிய மொத்த பணமும் திருமணத்திற்கே செலவாகிவிட்டது. சும்மாவா சொன்னார்கள் நம் பெரியவர்கள் , திருமணத்தை பண்ணி பார், வீட்டை கட்டி பார் என்று. ஒரு வாரமாக வீட்டிலேயே இருந்தான் முருகன்.அவன் தாய், முருகனிடம் வேலைக்கு செல்ல வில்லையா , எத்தனை நாள் விடுமுறை எடுத்து வந்து இருக்கிறாய் என்று அடிக்கடி கேட்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் அவன் மனதில் தோன்றும் ஒரே எண்ணம் இதுதான். எப்படி நாம் சென்னையில் ஓட்டுவது, வேலை கிடைக்காவிட்டால் என்ன பண்ணுவது , வாங்கிய பணம் அனைத்தும் திருமணத்திற்கு செலவு ஆகி விட்டதே, நம் கனவு என்ன ஆக போகிறது, என்று எண்ணிக்கொண்டே இருந்தான். இதை பற்றியே எண்ணிக்கொண்டு இருந்த முருகனுக்கு ஒரு கட்டத்தில் நாம் வாழ்வதே எதற்கு , வாழ்வதால் தானே நமக்கு இவளோ கஷ்டங்கள் வருது என்று தவறாக எண்ண ஆரம்பித்து விட்டான்.
வழக்கம் போல் அவனுடைய தாய் கேட்க ஆரம்பித்து விட்டாள் , எப்போது ஊருக்கு போக போகிறாய் என்று. உடனடியாக சிறிதும் யோசிக்காமல் நாளை காலை சென்று விடுவேன் அம்மா என்று முருகன் பதில் கொடுத்தான். அன்று இரவு தூஙகுவதற்கு முருகன் சென்றான். அவனுடைய தாய் காலையில் சீக்கிரம் எந்திருச்சு பையனுக்கு சமைத்து வைக்கவேண்டும் என்று எண்ணி சீக்கிரமாகவே தூங்கிவிட்டாள். முருகனுக்கு தூக்கமே வரவில்லை, அம்மாவிடம் உண்மையை சொல்லி விடலாமா அப்படி சொன்னால் அம்மாவின் மனநிலை எப்படி இருக்கும்,அம்மாவிற்கு நாம் பாரமாக இருக்க கூடாது, நம்மிடம் இருக்கும் மீதி பணத்தை அம்மாவிடம் வைத்து விட்டு நாம் நம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்று ஒரு மனதாக முடிவு பண்ணினான். வீட்டில் அணைத்திருந்த விளக்கை போட்டான்.
அந்த விளக்கின் ஒளியில் அவனுடைய அம்மாவின் முகம் ஒரு விடியலாய் தெரிந்தது. தந்தை இறந்த பிறகு இதே போன்று அன்று அம்மா நினைத்து கொண்டு, தன்னால் இனிமேல் எப்படி வாழ முடியும் என்று தன் வாழ்க்கையை முடித்து இருந்தால் , நாம் இந்த நிலைமைக்கு வந்து இருக்கவே முடியாதே என்று எண்ணினான். அன்று இருளில் மூழ்கி போன நம் வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக ஒரு “விடியலை தேடிய” பயணம் தானே (வேலைக்காக முருகனும் அவனுடைய தாயும் முதலாளி வீட்டை நோக்கி நடந்த பயணம்) நம்மை இன்று ஒரு என்ஜினீயர் ஆக்குவதற்கு உதவியாக இருந்தது. நம்மிடம் திறமையும் , படிப்பும் இருக்கும்பொழுது நாம் ஏன் தவறான முடிவை எடுக்க வேண்டும் என்று எண்ணி நிம்மதியாக தூங்கினான் முருகன்.மறுநாள் காலை விடிந்தது. அவனுடைய அம்மா அவனுக்கு புடிச்ச உணவை சமைத்து வைத்து விட்டு, தூங்கி கொண்டிருந்த முருகனை எழுப்பினாள்.
முருகன் குளித்து விட்டு அம்மா சமைத்து வைத்த உணவை மன நிம்மதியோடு சாப்பிட்டு முடித்து விட்டு சென்னைக்கு கிளம்பினான். தற்போது இருண்டு கிடக்கும் நம் வாழ்வில் ஒரு நாள் வெளிச்சம் வரும் என்ற எண்ணத்தோடு ஒரு “விடியலைத்தேடி” நம்பிக்கையுடனும் , முன்பை விட வேகமாகவும் , உற்சாகமாகவும் கிளம்பி சென்றான். என்றாவது ஒரு நாள் அவன் நிச்சயமாக அவனுடைய கனவுகளை நிறைவேற்றுவான்.
எல்லோருடைய வாழ்க்கையிலும் இருண்ட காலம் ஒன்று கண்டிப்பாக வரும். அவ்வாறு வரும்பொழுது, நம்முடைய வாழ்க்கையை அந்த இருளில் முடித்துக்கொள்ள எண்ணாமல் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்தப்பயணம் நிச்சயமாக “விடியலைத்தேடி” தரும்.
உங்களுக்கும் கதை கட்டுரை கவிதை எழுதும் திறன் இருந்தால் அது இந்த இணையதளத்தில் இடம்பெற வேண்டும் என விரும்பினால் எழுதி அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி pamarankaruthu@gmail.com or admin@pamarankaruthu.com
இந்தக்கதையை எழுதியவர்
Nice story.