பொது சிவில் சட்டம் என்றால் என்ன? கொண்டு வருவது நல்லதா?

பொது சிவில் சட்டம்” பற்றிய விவாதங்கள் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கி இருக்கிறது. இந்தியாவிற்கு அரசியல் சாசனம் இயற்றப்படும் காலம் துவங்கி பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான பேச்சுக்கள் எழுந்து வந்தாலும் இன்றளவும் அது இன்னும் சாத்தியப்படவில்லை. மத்தியில் ஆளும் பாஜக, பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. அம்பேத்கார், நேரு உள்ளிட்டவர்கள் கூட இந்த பொது சிவில் சட்டம் குறித்த ஆதரவு மனப்பான்மையோடு இருந்துள்ளனர். 

இந்தப்பதிவில், பொது சிவில் சட்டம் [Uniform Civil Code] என்றால் என்ன, அதனை கொண்டு வருவதில் இருக்கும் சிக்கல்கள் என்ன, உச்சநீதிமன்றம் பொது சிவில் சட்டம் பற்றி என்ன கூறுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களை பார்க்கலாம்.

பொது சிவில் சட்டம் என்றால் என்ன?

இந்தியாவில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கின்றன. ஒன்று குற்றவியல் சட்டம் [IPC], இரண்டாவது உரிமையியல் சட்டம் [சிவில் சட்டம்]. இந்தியாவில் நடைபெறும் குற்றங்களுக்கு குற்றவியல் சட்டப்படி தான் தண்டனை வழங்கப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் எவர் ஒருவர் குற்றத்தை செய்தாலும் தண்டனை என்பது பொதுவானது. 

ஆனால், உரிமையியல் சட்டம் அல்லது சிவில் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது இல்லை. உதாரணத்திற்கு, இந்துக்களுக்கு என்று திருமண சட்டம் இருக்கிறது. முஸ்லீம் மதத்தவருக்கு என்று திருமண சட்டம் இருக்கிறது. இப்படி, திருமணம், விவாகரத்து, சொத்து உரிமை, தத்தெடுக்கும் உரிமை, சில சிறப்பு உரிமைகள் என மதங்களுக்கு ஏற்றது மாதிரியான சிவில் சட்டங்கள் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன. 

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம்

ஆனால், எப்படி குற்றவியல் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கிறதோ அதைப்போலவே உரிமையியல் சட்டம் அதாவது சிவில் சட்டமும் பொதுவானதாக இருந்தால் அதுவே பொது சிவில் சட்டம் [Uniform Civil Code].

பொது சிவில் சட்டம் – முஸ்லீம் மக்களுக்கு பாதிப்பா?

பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டால் முஸ்லீம் மக்கள் தான் பாதிப்பு அடைவார்கள் என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே இந்துக்கள், சீக்கியர்கள் என பல மதத்தவருக்கும் கூட சில சிறப்பு சட்டங்கள் இருக்கின்றன. அவையும் கூட, பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டால் மாற்றத்திற்கு உள்ளாகலாம். 

உதாரணத்திற்கு, சீக்கியர்களை எடுத்துக்கொள்வோம். அவர்கள் மதத்தின் சட்டப்படி, அவர்கள் பாதுகாப்பிற்காக எப்போதும் தங்களோடு குறுவாள் ஒன்றினை வைத்துக்கொள்ள முடியும். அதேபோல, இந்துவோ அல்லது மற்ற மதத்தவரோ வைத்திருந்தால் அவர் மீது காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோல, அவர்கள் காவல்துறை அல்லது ராணுவத்தில் பணி புரிந்தால் தாடி வைத்துக்கொள்ள முடியும், டர்பன் அணிய முடியும். ஆனால், மற்ற மதத்தவரால் அதை செய்திட முடியாது. 

இந்துக்களை எடுத்துக்கொண்டால், கூட்டு குடும்பமாக வாழ்ந்தால் வரிச்சலுகை உண்டு. அதேபோல, குழந்தை தத்தெடுக்க, ஜீவனாம்சம் பெற தனி சட்டம் உண்டு. 

பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டால் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பிரச்சனை என்பது போன்றதொரு எண்ணம் இருக்க முக்கியமான காரணம் உண்டு. இந்தியாவில் இப்போதைக்கு மதங்களுக்கு ஏற்றவாறு சிவில் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், முஸ்லீம் மதத்திற்கு உள்ள சிறப்பு சிவில் சட்டமானது மற்ற சட்டங்களோடு நேரிடையாக முரண்பட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு, திருமண வயது, விவாகரத்து முறை என்பவை சற்று மாறுபட்டு இருக்கிறது. 

இந்தியாவில் பெரும்பான்மையாக இந்துக்கள் இருக்கிறார்கள். கொண்டுவரப்படும் சட்டங்கள் இயல்பாகவே அவர்களுக்கு பொருந்திவிடுகின்றன. ஆனால், இவை சில நேரங்களில் முஸ்லீம் உள்ளிட்ட மதத்தவருக்கு என்று இருக்கும் சிறப்பு சட்டங்களோடு ஒத்துப்போகாத பட்சத்தில் அவை விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இது நீதிமன்ற வழக்குகளில் அதிகப்படியாக எதிரொலிக்கிறது. ஆகவே தான், பொது சிவில் சட்டம் வந்தால் அவர்களுக்கு மட்டுமே சிக்கல் என்பது போன்றதொரு எண்ணம் உண்டாகிறது. 

இதற்கு சில வழக்குகளை உதாரணமாக கூற முடியும்.

குழந்தைகள் திருமண தடை சட்டம் vs முஸ்லீம் தனிநபர் சட்டம்

இந்தியாவில் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. இப்போதுள்ள சட்டப்படி, ஆணுக்கு திருமண வயது 21, பெண்ணுக்கு 18. அதே சமயம், முஸ்லீம் தனிநபர் சட்டப்படி, ஆண் அல்லது பெண் பருவம் அடைந்துவிட்டால் அவர் திருமணத்திற்கு தகுதி அடைகிறார் [பொதுவாக, இதனை 15 வயதாக கருதுகிறார்கள்]. ஆக, இரண்டு சட்டங்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு இருக்கின்றன. இந்துக்களுக்கு திருமண வயது குறித்த சிறப்பு சட்டங்கள் எதுவும் இல்லை என்பதனால் இந்திய அரசு வயது குறித்து கொண்டுவரும் சட்டங்கள் அவர்களை பாதிப்பது இல்லை. ஆனால், முஸ்லீம் மதத்தவருக்கு அப்படி ஒரு சட்டம் இருப்பதனால் அவர்களோடு பொதுவான சட்டங்கள் முரண்படுகின்றன. 

இதனால், நீதிமன்றங்களே பல நேரங்களில் குழம்பிப்போயுள்ளன. முஸ்லீம் மக்களுக்கான சிறப்பு சட்டம், பொதுவான குழந்தைகள் திருமண தடை சட்டத்திற்கு மேலானதா இல்லையா என்ற குழப்பங்கள் இருக்கின்றன. இதுபோன்ற சூழல்களில் தான் இவை வெளிச்சத்திற்கும் வருகின்றன.

ஷா பானு வழக்கு

1985 ஆம் ஆண்டு சா பானு என்ற பெண்ணை விவாகரத்து செய்கிறார் முகமதுகான் என்பவர் . முஸ்லிம் முறைப்படி தலாக் சொல்லி விவாகரத்து செய்தபோது சா பானுவுக்கு வயது 73 . 40 வருட திருமண வாழ்க்கையை தலாக் சொல்லி முடிவுக்கு கொண்டுவந்தது மட்டுமில்லாமல் அந்த மத சட்டப்படி ஜீவனாம்சம் கொடுக்கவும் மறுத்து விட்டார் முகமதுகான் .

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்  சா பானு . அவருக்கும் குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் அளிக்கவேண்டும் வேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம். 

இப்படி பல்வேறு வழக்குகளில் முஸ்லீம் மக்களுக்கு தனித்துவமாக இருக்கும் சட்டங்கள் பொதுவான சட்டங்களோடு வேறுபட்டு இருப்பதனால் அவை குறித்து மட்டுமே வெளியில் அதிகமாக தெரிகிறது.

பொது சிவில் சட்டம் – அரசியல் சாசனம் கூறுவது என்ன?

இந்தியாவை அரசியல் சாசனம் தான் ஆட்சி செய்கிறது. இந்தியாவில் பின்பற்றப்பட வேண்டிய சட்டங்கள் பற்றி மட்டுமே அரசியல் சாசனத்தில் கூறப்படவில்லை. இனிவரும் காலங்களில் இந்தியா எந்தப்பாதையில் செல்ல வேண்டும் என்பதையும் தெளிவாக அது கொண்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், அந்த சூழ்நிலையில் சில விசயங்களை செய்திட முடியாமல் போயிருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் இவையெல்லாம் செய்து முடிக்கப்பட வேண்டியவை என்பதே அதன் உள்ளர்த்தம். அதன், 44 பிரிவில் தான் பொது சிவில் சட்டம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. 

அதில் “நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர முயலவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றமும் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற சாராம்சத்தை சில தீர்ப்புகளில் சுட்டிக்காட்டி இருக்கிறது.

பொது சிவில் சட்டம் – சட்ட ஆணையம் சொல்வது என்ன?

பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்வதற்காக சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது. அது பல்வேறு விசயங்களை ஆராய்ந்து அதன் முடிவைக்கூறியது. 2018 ஆம் ஆண்டு அது சமர்ப்பித்த அறிக்கையில், பொது சிவில் சட்டம் இந்த நேரத்தில் தேவையானதாக இல்லை என்றும் அது விரும்பத்தக்கதாக இல்லை என்றும் கூறியது. அதேசமயத்தில், குறிப்பிட்ட மதத்தில் பாரபட்சமாக உள்ள சட்டங்களை ஆராய்ந்து அவற்றில் திருத்தங்களை செய்யலாம் என்று ஆலோசனை கூறியது. 

உதாரணத்திற்கு, சீக்கியர்கள் காவல்துறையில் தாடி வைத்திருக்க சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், அவற்றால் இங்கே எந்தவொரு பாதிப்பும் இல்லை. பொது சிவில் சட்டம் என்று வந்தால், தாடி வைக்கலாம் என்றால் எல்லோரும் வைக்கலாம், தாடி வைக்கக்கூடாது என்றால் யாரும் வைக்கக்கூடாது என்றாகிவிடும். ஆனால், அவர்கள் தாடி வைத்திருப்பதனால் எதுவும் பிரச்சனை இல்லை. 

ஆனால், பெண்களின் திருமண வயது என்பது குழந்தைகள் திருமண சட்டத்தோடு மாறுபடுகிறது. நாம் ஓர் சமூகமாக சிந்தித்து பார்த்தால் குழந்தைகள் திருமணத்தை தடுக்க வேண்டியது அவசியம். அப்படியானால், அதிலே மாற்றம் கொண்டுவரலாம். 

இதைத்தான் ஆணையம் பரிந்துரை செய்கிறது.

பொது சிவில் சட்டம் – சாத்தியமா?

பொது சிவில் சட்டம் என்பது முஸ்லீம் மக்களை மட்டுமே பாதிக்காது. அது இந்துக்களையும் பாதிக்கும், மற்ற மதத்தையும் பாதிக்கும் என்கிறார்கள் முக்கிய ஆளுமைகள். இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது மக்களுக்கு மத சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது. ஒவ்வொரு மதத்தவருக்கும் சில பழக்கவழக்கங்கள் இருக்கும்.இந்தியா போன்றதொரு மத சார்பற்ற நாட்டில் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் பலதரப்பட்ட மக்கள் வாழ்வதற்கு அவர்களுக்கு அரசியல் சாசனம் உரிமையினை வழங்கி உள்ளது. பொது சிவில் சட்டம் அதில் தலையிட அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

இவை அனைத்தையும் தாண்டி, பொது சிவில் சட்டம் சாத்தியப்படுமா என்றதொரு கேள்வியினை ஆர்வலர்கள் எழுப்புகிறார்கள். பொது சிவில் சட்டம் அனைத்து மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, அது அவ்வளவு விரைவில் சாத்தியப்படுமா என்கிற சந்தேகம் எழுகிறது. 370 சட்டப்பிரிவை நீக்கியது போல மிகவும் எளிதாக பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முடியாது, இது அனைத்து மதத்தவரையும் பாதிக்கும் என்கிறார் குலாம் நபி ஆசாத்.

பொது சிவில் சட்டம் பற்றிய எனது கண்ணோட்டம்

“பொது சிவில் சட்டம்” பற்றிய எனது கண்ணோட்டம் சட்ட ஆணையத்தின் பரிந்துரையோடு முற்றிலும் ஒத்துப்போகிறது. பிரதமர் உள்ளிட்ட அனைவரும் பேசும்போது, ஒரு குடும்பத்தில் உள்ள இருவருக்கு தனித்தனி சட்டம் இருந்தால் எப்படி குடும்பத்தை நடத்த முடியும் என கேட்கிறார்கள். ஒரே குடும்பத்தில் உள்ள இருவர் என எப்படி இந்த விசயத்தை சுருக்கி பார்க்கிறார்கள் என யோசிக்கிறேன். பொது சிவில் சட்டம், ஒரு குடும்பத்தில் உள்ள இருவருக்கு இடையிலானது அல்ல. இந்தியாவில் இருக்கும் பல்வேறு மதங்கள் பற்றியது, அவர்களுக்கு இடையிலானது. இதனை முதலில் ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என நினைக்கிறேன். 

சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்தியா பல்வேறு மத இன மக்களால் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஓர் உன்னத தேசம். ஆகவே தான் இங்கே அனைவரது மத நம்பிக்கைகளுக்கும் தனித்துவமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, தனி நபர்களின் உரிமைகளை பாதிக்கும் சட்டங்கள் மதத்தின் பெயரால் யாருக்கும் சிறப்பு சலுகையாக வழங்கப்படக்கூடாது. உதாரணத்திற்கு, அனைத்து மதத்திலும் ஒரே மாதிரியான திருமண வயது இருக்க வேண்டும், சொத்து உரிமை இருக்க வேண்டும், ஜீவனாம்ச உரிமை இருக்க வேண்டும். இப்படி, செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் அந்தந்த மதங்களின் சட்டங்களிலேயே செய்யப்படலாம். 

அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் இது மாதிரியான சட்ட மாறுதல்களை எதிர்க்க மாட்டார்கள். அனைவருக்குமே இப்படிப்பட்ட புரிதல் இருக்கும் காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆகவே, சட்ட ஆணையம் பரிந்துரைப்படி ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சமான நடைமுறைகள் இருக்கும் சட்டங்களை மாற்றலாம்.

பொது சிவில் சட்டம் குறித்த உங்களது கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *