கொரோனாவால் மீன் விற்கும் தனியார் பள்ளி ஆசிரியர்
கொரோனாவால் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீன்கடை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கொரோனா தாக்கம் இந்தியாவில் துவங்கிய போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திடீரென்று ஏற்பட்ட இந்த தாக்கத்தினால் கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் ,தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அரசு நடத்தும் பணியிடங்களில் பணி பாதுகாப்பு மற்றும் மாத சம்பளம் இருந்தபடியால் அவர்கள் பெரிதளவில் பாதிக்கப்படவில்லை. அதுபோலவே சில தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதித்தது. அவர்களும் பெரிதளவில் பாதிப்படையவில்லை. இதுதவிர மற்ற பணியாளர்களும் தினசரி வேலை செய்து பிழைப்பவர்களும் பெரிதளவில் பாதிப்படைந்தனர்.
தற்போது ஊரடங்கு நீக்கப்பட்டாலும் கூட இன்னமும் பழைய நிலையை எட்டிட முடியவில்லை. குறிப்பாக மீண்டும் திறக்கப்படாத தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களின் நிலைமை மிக மோசமானதாக மாறிக்கொண்டே போகிறது. அப்படி பாதித்தவர்களில் ஒருவர் தான் கேரளாவை சேர்ந்த சுபீஷ் குமார். இவர் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரது மனைவியும் இதே பள்ளியில் தான் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
கொரோனா ஊரடங்கிற்குப்பிறகு நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும் பள்ளிகள் இன்னமும் திறக்கப்படவில்லை. இதனால் இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் குடும்பத்தை நகர்த்துவது பெரும் கடினமாக மாறியது. சுபீஷ் மட்டும் இதுபோன்றதொரு சிக்கலில் மாட்டிக்கொண்டவர் இல்லை. இவரைப்போலவே தனியார் பள்ளிகளில் பணியாற்றிடும் ஆசிரியர்கள் பலரும் கூட இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் சிக்கிக்கொண்டனர்.
பள்ளிகள் எப்போதும் திறக்கப்படும் என உறுதியாகத் தெரியாத சூழ்நிலையில் சுபீஷ் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். ஆமாம், தனது கிராமத்திற்கு அருகே ஒரு இடத்தில் மீன் கடை ஒன்றைத் திறந்தார். பிறர் என்ன நினைப்பார்கள் என்பதெல்லாம் குடும்பத்தை நடத்திட பணம் வேண்டும் என்ற கவலைக்கு பின்னால் மறைந்து போனது. தனது கிராமத்தில் எளிதாக மீன் கிடைக்கும் என்பதனால் மீனைக் கொள்முதல் செய்து விற்பனை செய்திட துவங்கினார் சுபீஸ். தற்போது அவருக்கு குடும்பத்தை நடத்திட போதுமான அளவு பணம் மீன்கடை மூலமாக கிடைக்கிறது.
கொரோனா கற்றுக்கொடுத்த பாடம்
கொரோனா பாதிப்பினால் ஏகப்பட்ட தொழிலாளர்கள் வேலையினை இழந்து துன்பப்பட்டு வருகிறார்கள். அன்றாடம் குடும்பத்தை நடத்திட, வாங்கிய கடனை அளித்திட என பணத்தேவையில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் சூழலுக்கு ஏற்ப வேறு தொழிலை நடத்தி தங்களது வாழ்க்கையை நகர்த்துகிறார்கள், பலர் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டு திணறுகிறார்கள்.
கொரோனா நமக்கு ஒரு அற்புதமான பாடத்தை கற்பித்து இருக்கிறது. இரண்டாவது வேலையை ஒருவர் ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும், அதேபோல திடிரென்று வேலை போய்விட்டாலும் கூட சில மாதங்களுக்கு குடும்பத்தை முன்புபோலவே நடத்திட பணத்தை சேமித்து வைக்க பழகிக்கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் அனைவரும் கடைபிடித்தால் பிரச்சனையே இல்லை.
கொரோனா உங்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? கமெண்டில் பதிவிடுங்கள்
அம்மாவால் எடிசன் என்ற மாபெரும் அறிஞன் உருவான கதை
ஏன் நீங்கள் எப்போதும் பெரிதாக சிந்திக்க வேண்டும்?
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!