ஜீவித் குமாருக்கு வாழ்த்துக்கள், ஆனால் மறந்துவிடாதீர்கள்

ஜீவித் குமாருக்கு வாய்ப்பு கிடைத்தது கனவு நிறைவேறியது ஆனால் பிற மாணவர்களுக்கு….

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அகில இந்திய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர் என்கிற சாதனையை தமிழக மாணவர் ஜீவித் குமார் படைத்திருக்கிறார். இவர் நீட் தேர்வில் 664 மதிப்பெண் பெற்று பெருமை சேர்த்திருக்கிறார். அனிதா உட்பட பல மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் ‘அரசுப்பள்ளி மாணவராலும் முடியும்’ என நிரூபித்துக்காட்டியிருக்கிறார். இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

இப்போது விசயத்திற்குள் வருவோம்…..

அரசுப்பள்ளி மாணவர் ஒருவரே இப்போது நீட் தேர்வில் 664 மதிப்பெண் பெற்றுவிட்டார். நீட் தேர்வு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எதிரானது எனப் பேசுவதை இப்போதாவது தமிழகத்தில் உள்ளவர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும், இனி நீட் தேர்வுக்கு எதிராக போராட்டமெல்லாம் நடத்தக்கூடாது என ஒரு கூட்டம் ஆரம்பித்துவிடும். அவர்கள் அப்படி பேசுவதற்கு முன்பாக அதற்கான பதிலை நாம் தெரிந்துவைத்திருப்பது நல்லது.

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர் 664 மதிப்பெண் பெற்றுள்ளார். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அந்த மதிப்பெண்ணை அவர் எப்படிப் பெற்றார் என்பதே நாம் எழுப்பிட வேண்டிய கேள்வி. நீட் தேர்வுக்கு அனிதா தற்கொலை செய்துகொண்டபோது எழுந்த உணர்வின் காரணமாக தனது ஆசிரியர் பணியைத் துறந்தவர் ஆசிரியை சபரிமாலா அவர்கள். அனிதா போன்ற பல மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொள்வதினால் மனமுடைந்த இவர் ஒரு அரசுப்பள்ளி மாணவரையாவது நீட் தேர்வுக்கு படிக்க வைப்பேன் என உறுதிபூண்டார்.

பிற ஆசிரியர்கள் மற்றும் உதவி செய்திடும் நல்ல உள்ளங்களின் உதவியோடு ஜீவித் குமார் எனும் அரசுப்பள்ளி மாணவரை தெரிவு செய்து நாமக்கல்லில் இருக்கும் ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் பயிற்சி எடுக்க ஏற்பாடு செய்கிறார். தனக்கு கிடைத்த உதவியை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஜீவித் குமார் மிகவும் கடுமையாக படித்து 664 மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார். இவர் தான் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர். 700 க்கு 700 பெற்ற மாணவர்களும் இருக்கிறார்கள், தனியார் பள்ளி மாணவர்கள்.

ஆடு மேய்க்கும் சாதாரண குடும்பப் பின்னனியில் இருந்து வந்த ஒரு ஏழை அரசுப்பள்ளி மாணவன் தான் ஜீவித் குமார். இவர் மீது சபரிமாலாவின் பார்வை படாவிடில் இவருக்கு தனியார் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெரும் வாய்ப்பு கிடைக்காவிடில் இந்நேரம் அவர் வேறெந்த படிப்பையோ படித்துக்கொண்டு இருப்பார்.

நீட் தேர்வு மருத்துவத்தின் தரத்தினை உயர்த்துவதற்கான தேர்வு என வாதிடுகிறவர்களின் வாதத்தை நிச்சயமாக ஏற்கிறோம். ஆனால் அனைத்து தரப்பட்ட மாணவர்களும் போட்டியில் கலந்துகொள்ளும் விதமாக சம வாய்ப்பினை உருவாக்கிய பிறகு அல்லது சம வாய்ப்பினைக் கொண்ட தேர்வினை நடத்துங்கள் என்பது தான் அனைவரின் கோரிக்கையாகவும் இருக்கிறது. ஆமாம், தமிழக அரசு இலவசமாக நீட் பயிற்சியை அளிக்கிறது. ஆனால் அது அனைவருக்கும் கிடைக்கிறதா? நீட் தேர்வுக்கு போதுமான தரத்துடன் இருக்கிறதா என்ற கேள்விகள் அவசியமான ஒன்று.

இப்போது ஜீவித் குமார் என்ற அரசுப்பள்ளி மாணவரின் வெற்றியைக் கொண்டாடுகிறோம். ஆனால் போதிய பயிற்சி வாய்ப்பு கிடைக்காமல் நீட் தேர்வில் சரியான மதிப்பெண்களை பெறாமல் வீட்டில் அழுது புலம்பிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் கண்ணீர் துளிகளை தலையணைகள் உறுஞ்சிக்கொள்ள அனுமதித்துவிட்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். ‘நியாபக மறதி’ என்பது தமிழக மக்களிடம் இருக்கும் பெரும் குறைபாடு. ஆகவே தான் நியாபகப்படுத்திட இந்தப்பதிவை எழுதுகிறேன். 






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *