கணவன்மார்களே, ஒரு மனைவியின் நிலை புரிந்ததா உங்களுக்கு – யாழினி

ஏன் எப்போ பாத்தாலும் கத்திகிட்டே இருக்க …வர வர உனக்கு ஏதோ ஆயிடுச்சு.. இப்படி பல்வேறு குடும்பங்களில் ஆண்கள் பேசுவதை கேட்டிருக்கலாம். வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடந்தால் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் அதே நிலை வரும். கணவன்மார்களே, ஒரு மனைவியின் தனிமை புரிந்ததா உங்களுக்கு – யாழினி
family women

எப்போதும் சுறுசுறுப்பாக நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் யாழினியை யாருக்குத்தான் பார்த்தால் பிடிக்காது. அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நாட்கள் அவை.    எப்போதும் எதார்த்தமாக செயல்படும் நிரஞ்சன் அலுவலகம் சேர்ந்ததில் இருந்தே யாழினிக்கு நல்ல நண்பன். ஆனால் அந்த உறவு அடுத்தகட்டத்தை நோக்கி அவர்களை அறியாமலேயே நகர்ந்துகொண்டு இருந்தது. நிரஞ்சனுக்கு இன்னொரு பெண் “I Love You” மெசேஜ் அனுப்பிடும் வரை அவர்களுக்கு இடையிலான உறவை நிரஞ்சனும் யாழினியும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் அந்த நிகழ்வு நடைபெற்றதற்கு பின்னால் இருவரும் பேசிக்கொண்டார்கள், ஆமாம் காதலை உறுதிப்படுத்திக்கொண்டார்கள். 

 

ஓராண்டு காதல் வெற்றிகரமாக பயணித்தது. வழக்கம்போல நடக்கும் சண்டைக்காட்சிகள் எதுவும் இன்றி கல்யாணமும் நடந்தேறியது. பிடித்தவர்களை காதலிப்பதும் காதலிப்பவர்களை கல்யாணம் செய்துகொள்வதும் மற்றவர்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைக்காத வாழ்வென இருவரும் பேசி பேசி தங்களுக்கு கிடைத்ததொரு வாழ்க்கையை மாபெரும் பாக்கியமென கருதி கொண்டாடினார்கள். நினைத்தது போலவே சந்தோசமாக வாழ்ந்தார்கள். அவர்கள் சந்தோசத்திற்கு அடையாளமாக ஒரு உயிர் உருவானது. 

 

இனிமேலும் யாழினி வேலைக்கு செல்வது சரியாக இருக்காதென கருதிய பெற்றோர்கள் அவர்கள் இருவரிடமும் வலியுறுத்த யாழினியும் ஒப்புக்கொண்டாள். ஆரம்பத்தில் வேலைக்கு செல்வதைக்காட்டிலும் வீட்டில் இருப்பது சொகுசாகவே பட்டது. வேலைக்கு செல்லும்போதும் வீட்டு வேலைகளை யாழினியே செய்தபடியால் இப்போது பெரிய கஷ்டம் ஒன்றுமில்லை. பெரிய டிவி, இன்டர்நெட் வசதி, ஏசி என அனைத்தும் இருக்கும் அந்த வீட்டில் இருக்கும் ஒரே குறை பேச இன்னொரு ஆள் இல்லை என்பது மட்டும் தான். ஆரம்பத்தில் இது யாழினிக்கு பெரிதாக பாதிக்கவில்லை. எப்போது பேச வேண்டும் என தோன்றுகிறதோ அப்போது நிரஞ்சனுக்கு போன் செய்திடுவாள். அவனும் பேசுவான். 


ஆனால் நாட்கள் ஆக ஆக யாழினிக்கு ஏதோ ஒரு உணர்வு மனதுக்குள் அடிக்கடி வரத்துவங்கியது. முன்பெல்லாம் அலுவலகத்திற்கு சென்று நெறைய பேருடன் பேச முடிந்தது, இப்போது முடியவில்லையே என்ற ஏக்கமா அல்லது இப்போதெல்லாம் நிரஞ்சன் நான் நினைக்கும் போது போன் செய்தால் வேலை இருக்கிறது என்று சொல்லிவிடுகிறானே என்பதால் வருகிற கோபமா அல்லது முன்பெல்லாம் எதையாவது வாங்க வேண்டும் என்றால் என்னிடம் ஆலோசனை கேட்கும் நிரஞ்சன் இப்போது கேட்பதில்லையே, நான் சம்பாதிக்கவில்லை என்று அவன் நினைத்து இப்படி செய்கிறானா என்ற எண்ணத்தினாலா என காரணம் தேடித்தேடி யாழினி மீண்டும் மீண்டும் ஆழ்ந்த யோசனைக்குள் சென்றுகொண்டே இருந்தாள். 

 

யாழினியின் இப்படிப்பட்ட யோசனைகள் வீட்டில் நிரஞ்சன் எதார்த்தமாக பேசும்போது மிகப்பெரிய வாக்குவாதத்தை இருவரிடமும் உருவாக்கிக்கொண்டே இருந்தது. இருவரையும் அறியாமல் ஏதோ ஒரு இடைவெளி இவர்களுக்குள் உருவானது. நிரஞ்சன் எவ்வளவோ பொறுத்துக்கொண்டான் ஆனால் யாழினி முன்புபோல மாறவே இல்லை. அவளுடன் பேசினால் தானே பிரச்சனை கொஞ்சநாள் பேசாமல் இருப்போம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் நிரஞ்சன். 

 

இந்தியாவில் அப்போதுதான் கொரோனா பிரச்சனை ஆரம்பிக்க துவங்கியது. அலுவலகத்தில் இனி அடுத்த அறிவிப்பு வரும்வரை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் என கூறிவிட்டார்கள். நிரஞ்சனுக்கு ஒரே சந்தோசம், ஆனால் யாழினி சண்டை போடுவாளே என்ற பயமும் இருந்தது. நிரஞ்சன் எப்போதும் போல அலுவலக பணிகளை வீட்டில் இருந்தே செய்ய ஆரம்பித்தான். யாழினி அவளுடைய வீட்டு வேலைகளை செய்து முடித்துவிட்டு அவளது அறைக்கு சென்றுவிடுவாள். நம்மை ஏன் நிரஞ்சன் புரிந்துகொள்ள மாட்டேங்குறான், வீட்டில் இருக்கும் போது கூட பேச மாட்டேங்குறான் என யாழினி நினைத்துக்கொண்டிருந்தாள். 

 

பேசலாம் ஆனால் நாம் எதார்த்தமாக பேசப்போக யாழினி அதை தவறாகவே எடுத்துக்கொள்கிறாளே என்ன செய்வது என நிரஞ்சன் நினைத்துக்கொண்டிருந்தான். இப்படியே ஒருவாரம் போனது. வீட்டில் இருந்து வேலை செய்தால் சந்தோசமாக ஜாலியாக இருக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்த நிரஞ்சனுக்கு சலிப்பு தட்டத்துவங்கியது. ஒரே இடத்தில் வேறு நபர்களுடன் பேசாமல் இருந்தால் ஏற்படக்கூடிய ஒரு மன அழுத்தம் நிரஞ்சனுக்கு மெல்ல வரத்துவங்கியது. வீட்டில் எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும் அலுவலகத்திற்கு சென்று அங்கு வேறு நண்பர்களுடன் பேசி சிரிக்கும் போது ஏற்படும் ஒரு நிம்மதி தற்போது அவனுக்கு கிடைக்கவில்லை. 

 

தனக்கு இப்படிப்பட்ட உணர்வு ஏற்படுவதை நிரஞ்சன் உணர்ந்தான். அப்போதான் அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது, ஒருவாரம் வீட்டிற்குள் இருந்த நமக்கே இப்படி இருக்கிறதே, அலுவலகத்தில் நம்மைவிட ஜாலியாக இருந்த யாழினி 6 மாதங்களாக வீட்டிற்குள் தனியாகவே இருக்கிறாளே அவளுக்கு எப்படி கஷ்டமாக இருந்திருக்கும். அவள் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை என்னிடம் கூற முடியாமல் கோவமாக வெளிப்படுத்தி இருக்கிறாள் அது புரியாமல் நானும் அவளுடன் வாக்குவாதத்தில் சண்டை போட்டிருக்கிறேன் என நொந்துகொண்டான் நிரஞ்சன். 


 

நிரஞ்சன் மெல்ல யாழினி இருந்த அறைக்கு சென்றான். கட்டிலில் படுத்திருந்த அவளை பின்பக்கமாக அணைத்தான். அவள் திரும்பினாள், அவளுக்கு கண்கள் கசிந்திருந்தது. ஆமாம் அவள் நிரஞ்சன் எப்போது தன்னை புரிந்துகொள்வான் என நினைத்து நினைத்து கண்ணீரை சிந்திக்கொண்டு இருந்தாள். மீண்டும் கண்ணீர் சிந்தினாள் யாழினி ஆனால் இது ஆனந்தக்கண்ணீர். இருவரும் பேசிக்கொள்ளவில்லை,  உன்னுடைய தனிமையையும் அதனால் தான் நீ இப்படி நடந்துகொண்டாய் என்பதையும் நான் புரிந்துகொண்டேன் என பேசிய நிரஞ்சனின் மனதின் குரல் யாழினியின் மனதிற்கு கேட்டது. 

 

கொரோனா சமூகத்தில் தான் இடைவெளியை ஏற்படுத்தியது. நெருக்கமானவர்களுக்குள் அல்ல.

 

// பல கனவுகளையும் திறமைகளையும் கொண்ட பெண்கள் திருமணத்திற்கு பிறகு கணவன் வேலைக்கு சென்ற பின்பு தனிமையிலேயே கழிக்கிறார்கள். ஒரே இடத்தில் தொடர்ச்சியாக இருக்கும் போதும் தன்னுடைய விருப்பங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள உயிருள்ள ஒரு நபர் கூட அருகிலேயே இல்லாமல் இருக்கும் போதும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. நாம் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் போது அதுவே அவர்களின் இயல்பாகிப்போகிறது. இதை ஒவ்வொரு ஆணும் புரிந்துகொண்டால் நிச்சயமாக ஒரு மாற்றம் உறவுகளுக்குள் ஏற்படும். 

 

உங்கள் மனைவியிடம் நீங்கள் “சாரி” கூற வேண்டும் என தோன்றினால் கூறிவிடுங்கள் இப்போதே. 


Get updates via WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *