பள்ளி விடுமுறை தினங்களை பயனுள்ள வகையில் செலவழிப்பது எப்படி ?

துள்ளிவிளையாடும் சிறுவர்கள்

 

ஒருவழியாக தேர்வுகள் முடிந்து மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த “கோடை விடுமுறை” தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் விடுமுறை தினங்களை வெறுமனே தூங்கி கழித்துவிடாமல் முறையாக பயன்படுத்திட ஒரு சில வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆசை தீர விளையாடுங்கள் (Play sports as much as possible):

விளையாடும் பள்ளி குழந்தைகள்

தேர்வுக்காக கொஞ்சநேரம் கூட வீணாக்கமால் விளையாட செல்லாமல் படிப்பிலேயே கவனத்தை செலுத்தியிருப்பீர்கள். ஆகவே ஆசை தீர விளையாடுங்கள்.

விளையாட்டு விளையாட்டல்ல என்பதே உண்மை. நீங்கள் பல மணி நேரம் மனதை ஒருநிலை படுத்த யோகா செய்வதை விட எதிரணியின் பந்தில் கவனம் செலுத்துவது கூட யோகாவிற்கு ஈடானதே, இரண்டிலும் மனது ஒருநிலையிலேயே இருக்கும். அதனை போலவே தான் உடலினை வளப்படுத்த காசு செலவழித்து உடற்பயிற்சி செய்வதை விட ஓடி ஆடி விளையாடுவதும் உடற்பயிற்சியை விட மேலானதே. ஆகவே தினந்தோறும் சில மணி நேரம் விளையாட்டுக்கு என ஒதுக்கி வைத்துவிடுங்கள்.

குறுகிய கால சிறப்பு வகுப்புகள் (Short Term Courses) :

குறுகிய கால படிப்புகள்

 

போராட்டம், போட்டி நிறைந்த இவ்வுலகில் மற்றவர்களை விட நாம் சிறந்து இருக்கவே வேண்டும். அதற்காக நிச்சயமாக நமது தகுதியை மேம்படுத்திக்கொள்ள சிறப்பு வகுப்புகளில் சேருங்கள். புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளுங்கள். இசை, கணினி என தாங்கள் விரும்பிய துறைகளில் சேர்ந்து படிக்கலாம்.

சுற்றுலா செல்லுங்கள் (Tour) :

சுற்றுலா

 

வாழ்க்கை புத்தகத்தில் கிடைப்பதில்லை, அது உங்களை சுற்றி இருக்கிற சமூகத்தில் தான் இருக்கிறது. அப்படியானால் அந்த சமூகத்தை சந்தித்தால் தானே வாழ்க்கைக்கு தேவையான படிப்பினையை உங்களால் பெற முடியும்.

ஒரு சுற்றுலா ஒரு ஆண்டில் நீங்கள் கற்காததைக்கூட ஓரிரு நாட்களில் கற்று கொடுத்துவிடும். ஆகையால் நிச்சயமாக ஏதேனும் ஒரு இடத்திற்க்காவது சுற்றுலா செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். பெற்றோர் தங்களது பிள்ளைகள் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருப்பின் விடுமுறை எடுத்துக்கொண்டு சுற்றுலா செல்லுங்கள்.

நூலகம் மற்றும் புத்தகம் (Go to library and read books) :

நூலகத்தில் படிக்கும் பள்ளி மாணவர்கள்

படிப்பு என்பது வெறும் பாட புத்தகத்தோடு முடிந்துவிடுவதில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் நீங்கள் பள்ளியில் படிப்பது என்பது நுனிப்புல்லின் நுனி மட்டுமே.

மொழி பற்றி அறிய, சமூகத்தை பற்றி அறிய, நம்மை பற்றி அறிய, உலக வரலாற்றினை பற்றி அறிய, விஞ்ஞானத்தை பற்றி அறிய என எதை குறித்த தேடலிலாவது உங்களை ஈடுபடுத்திக்கொண்டு படிக்க ஆரம்பியுங்கள்.

என்ன படிப்பதென்றே தெரியாமல் குழம்பினால் தயக்கமே இல்லாமல் நூலகத்திற்கு சென்று அடுக்கப்பட்டு இருக்கும் ஆயிரம் புத்தகங்களில் சிலவற்றை திறந்திடுங்கள், அவை உங்களை அழைத்துச்செல்லும்.

தன்னார்வலராக பணியாற்றுங்கள் (Join as a volunteer) :

தன்னார்வ குழுக்களுடன் மாணவர்கள்

 

உலகின் இன்றைய தேவை பிறருக்கு உதவுகின்ற மனம் கொண்டவர்கள் தான். ஆகையால் இளம் வயதிலேயே அதற்க்கான பக்குவம் கொண்டவராக உங்களை பழக்கப்படுத்திக்கொள்ள ஏதேனும் நன்கறிந்த தொண்டு நிறுவனங்களில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு பல நண்பர்களையும் சமூகத்தில் நிலவும் துன்பங்களையும் நீங்கள் பயில உதவும்.

நன்றாக தூங்குங்கள் (Sleep on Right Time) :

அயர்ந்து தூங்கும் சிறுவன்

 

தேர்வினால் நிச்சயமாக இரவு நெடு நேரம் வரை படித்துவிட்டு காலையில் விடியற்காலையே எழுந்திருப்பீர்கள். ஆகையால் நீங்கள் சோர்வடைந்து இருக்க வாய்ப்புண்டு. ஆகவே விடுமுறை நாளில் சரியான நேரத்தில் உறங்கி உடலுக்கு தகுந்த ஓய்வினை கொடுத்திடுங்கள். அது உங்களின் அடுத்த செயல்பாடுகளுக்கு தேவையான உடல் மற்றும் மன வலிமையை தரும்.

இந்த வழிமுறைகளை பயன்படுத்தி பள்ளி விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றி பயன்பெறுங்கள்.

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *