தேர்தல் வெற்றியை தனியார் நிறுவனங்களின் வியூகத்தால் பெறுவது ஜனநாயகத்திற்கு நல்லதா?

பாஜக, காங்கிரஸ் துவங்கி தற்போது மம்தா பானர்ஜி அவர்களின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வியூகங்களை அமைக்கும் பணியில் ஈடுபட இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர் - மம்தா பானர்ஜி

 

நாம் பாமரன் கருத்து இணையதளத்தில் “ஐனநாயக பேராபத்து – நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கப்போகும் சமூக வலைதளங்கள்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்தக்கட்டுரை இருக்கும்.

2014 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத்தேர்தலில் பாஜக வென்று திரு மோதி அவர்கள் பிரதமாக ஆனதில் இருந்து பிரசாந்த் கிஷோர் என்ற பெயர் ஒவ்வொரு தேர்தலிலும் அடிபட துவங்கியது. தற்போது 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார் திரு ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக பிரசாந்த் கிஷோர் அவர்களின் நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரசாந்த் கிஷோர் அவர்கள் தற்போதைய மேற்கு வங்க முதல்வராக இருக்கக்கூடிய மம்தா பானர்ஜி அவர்களுக்காக பணியாற்றிட ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இயல்பாக நடக்கின்ற விசயங்களை கவனித்து அதன் மூலமாக தனக்கான அரசை மக்கள் தேர்ந்தெடுக்கிற காலம் மாறி, தனியார் நிறுவனங்கள் மூலமாக வியூகங்களை அமைத்து அதன் மூலமாக வெற்றியை பெற அரசியல் கட்சிகள் முயல்வது என்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு ஆபத்தானதா என்பதைதான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

தேர்தலில் தனியார் நிறுவங்களின் பங்கு

 

தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படுகிற கட்சிகளுக்கு தேர்தல் நிதி கொடுப்பது வழக்கமான ஒன்று. முன்பெல்லாம் தேர்தல் நிதி வரைக்கும் தான் தேர்தலில் தனியார் நிறுவங்களின் பங்கு இருந்தன. அரசியல் கட்சிகள் தங்களுக்கென தொலைக்காட்சிகளையும் செய்தித்தாள்களையும் நடத்த துவங்கின. தற்போது சமூக வலைத்தளங்களின் வருகைக்கு பிறகு தேர்தலில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு என்பது மிக அதிகமாகிவிட்டது. மக்களின் மனநிலையை அறிந்து கொள்வது, அவர்களை தாங்கள் வேலை செய்கின்ற கட்சிக்கு ஆதரவானவர்களாக மாற்றிடுவது என அவர்களின் பணி நீளுகிறது. இதற்காக ஐடி நிறுவன கட்டமைப்பில் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் வெற்றிகரமான அமைப்பாக பிரசாந்த் கிஷோர் அவர்களின் நிறுவனம் திகழ்கிறது.

பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தின் தேர்தல் பங்களிப்பு

 

2012 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திரு மோதி அவர்கள் மூன்றாவது முறையாக முதல்வராக தேர்தெடுக்கப்பட்டதில் தான் பிரசாந்த் கிஷோர் அவர்களின் அரசியல் பங்களிப்பு துவங்கி இருக்கிறது.

 

2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான திரு மோதி அவர்களுக்காக பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர்

 

பிரசாந்த் கிஷோர் அவர்கள் பாஜக , காங்கிரஸ் உட்பட பல கட்சிகளுக்காக பணியாற்றி இருக்கிறார்

 

2015 ஆம் ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் அவர்களுக்காக பணியாற்றினார்

 

2017 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர்

 

2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் திரு ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்காக பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர்

 

மேற்குவங்கத்தில் வரப்போகும் சட்டசபை தேர்தலுக்காக பணியாற்றிட தற்போது மேற்குவங்க முதல்வராக இருக்கின்ற மம்தா பானர்ஜி அவர்களோடு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

 

இன்னும் பல நிறுவனங்கள் இதே போன்றதொரு பணியில் ஈடுபட்டிருந்தாலும் பல வெற்றிகளால் நிரூபித்துள்ள பிரசாந்த் கிஷோர் அவர்களின் நிறுவனத்தை பற்றி இங்கே பார்த்தோம்.

 

இது ஜனநாயகத்திற்கு ஆபத்தா?

பிரசாந்த் கிஷோர் - மம்தா பானர்ஜி

 

சமூக வலைதளம் என்பது கட்டற்ற சுதந்திரத்தோடு இயங்குகிறது. பல பொய்யான செய்திகள் கூட மக்களால் வெகு விரைவாக பகிரப்படுகின்றன. அவை மக்களின் மனதிலும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. பின்னர் அந்த செய்தியை பொய்யென கூறினாலும் அது அனைவருக்கும் போய் சேருவதில்லை. பொய்யான செய்திகள் எதார்த்தமாக பகிரப்பட்டால் பிரச்சனையில்லை, குறிப்பிட்ட நோக்கத்தோடு பகிரப்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் அபாயகரமானது.

 

அரசியல் கட்சிகள் தங்களுக்காக வியூகங்களை அமைக்கவும் தங்களுக்காக சமூக வலைத்தளங்கள் உட்பட அனைத்து தளங்களிலும் விளம்பரங்களை தேடவும் தனியார் நிறுவனங்களை மிகப்பெரிய தொகைக்கு விலை பேசுகின்றன. அந்த நிறுவனங்களும் நிலவரங்களை ஆராய்ந்து தங்களோடு ஒப்பந்தம் செய்தவருக்காக பணியாற்றுகின்றன. சாதாரண கட்சியால் அல்லது வேட்பாளரால் எப்படி தனியார் நிறுவனங்களோடு போட்டிபோட முடியும். தேர்தல் களத்தில் “போட்டியில் சம வாய்ப்பு” என்ற தார்மீகம் கூட இதனால் அடிபட்டுப்போகிறது.

 

நீங்கள் சமூகவலைத்தளத்தில் 10 போஸ்ட்களை பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அவற்றில் 5 போஸ்டர்கள் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு எதிரான கருத்துக்களோடு இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். தொடர்ந்து இப்படியே நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தால் அந்த கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது என முடிவெடுத்து விடுவீர்கள். இப்படித்தான் சமூக வலைத்தளங்களை நிறுவனங்கள் தங்களுக்கு பயன்படுகிற வகையில் மாற்றிக்கொண்டு இருக்கின்றன.

 

நீங்கள் பார்க்கின்ற பெரும்பாலான மீம்ஸ்கள் இப்படிப்பட்ட நிறுவனத்திற்கு வேலை செய்பவர்களாலேயே உருவாக்கப்படுகிறது. நம்மை அறியாமலேயே நாமும் அதனை நம்பிக்கொண்டு இருக்கிறோம். வருகின்ற தகவல்கள் உண்மையானதாகக்கூட இருக்கலாம். ஆனால் எதிர்தரப்பின் பதிலை கேட்பதற்கான வாய்ப்பு என்பது சமூக வலைத்தளங்களில் இல்லை.

 

பணமுள்ள பெரிய கட்சிகளால் மட்டுமே தங்களுக்கு வேலை செய்ய பெரிய கம்பெனிகளை விலைக்கு வாங்கிட முடியும். புதிதாக ஆரம்பிக்கப்படுகிற கட்சியாலோ அல்லது பணமில்லாத கட்சிகளாலோ இப்படிப்பட்ட நிறுவனங்களை விலைக்கு வாங்கிட முடியாது. இதன் இறுதி முடிவாக என்ன இருக்குமெனில் பணமுள்ளவர்கள் வெல்வார்கள் பணமற்றவர்கள் தோற்பார்கள். சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்ற பெரும்பாலானவர்களுக்கு நாம் பார்க்கின்ற அல்லது கேட்கின்ற விசயங்களுக்கு பின்னால் தனியார் நிறுவனம் ஒன்றின் செயல்பாடு இருக்கிறது என்பது தெரியாதவரைக்கும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு என்பது ஜனநாயக விரோதமாகவே இருக்கும் என்பது எனது பார்வை.

 

இந்தியா சிந்திக்க வேண்டும்


 

கட்சி பாகுபாடின்றி அனைவருமே தங்களால் முடிந்த அளவில் தனியார் நிறுவனங்களை பணிக்கு வைத்திருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இன்று பணமிருக்கும் கட்சியாக நீங்கள் இருக்கலாம் வெல்லும் போது அது தேனாக இனிக்கலாம், ஆனால் நாளை இதே நிறுவனங்கள் ஒன்றிணைந்து வேறு ஒரு பணம் படைத்த கட்சியை வெற்றி பெற வைத்தால், நீங்கள் தோற்கும் போது நிச்சயமாக அது கசக்கும். ஜனநாயக விரோதம் என நினைக்க வைக்கும். ஆகவே அரசியல் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து சிந்திக்க வேண்டும். இல்லையேல் மக்களாட்சி என்பது தனியார் நிறுவனங்களின் ஆட்சியாக மாறிப்போகும்.

 

விழிப்போம்!

 





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *