துணைநிலை ஆளுநர் – முதல்வர் யாருக்கு அதிகாரம் ? தீர்ப்பு என்ன சொல்கிறது ?

டெல்லி ஆம் ஆத்மி அரசின் சார்பாக தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ” டெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் : மத்திய அரசு நியமிக்கும் துணை நிலை ஆளுநருக்கா அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கா ? ” என்ற கேள்விக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்களின் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியிருக்கிறது .

 

டெல்லியை பொறுத்தவரையில் “சட்டம் ஒழுங்கு , காவல்துறை , நிலம் சம்பந்தப்பட்ட விசயங்களில் மட்டுமே துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் இருக்கின்றது ” எனவும் “மற்ற விசயங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு தான் அனைத்து அதிகாரமும் இருப்பதாக தெரிவித்துள்ளது .

 

வென்ற சனநாயகம்

 

 

இதே வழக்கில் இதற்கு முன்னர் உயர்நீதிமன்றம் துணை நிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்து இருந்தது . இதனை எதிர்த்துதான் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் உச்சநீதிமன்றத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் இல்லை ,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிக அதிகாரம் இருப்பதாக வாதிட்டது .உச்சநீதிமன்றமும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது .

 

தீர்ப்பின் முக்கிய விவரங்கள்

 

துணை நிலை ஆளுநருக்கு என தனி அதிகாரம் ஏதுமில்லை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பரிந்துரைப்படியே நடந்துகொள்ள வேண்டும்

 

காவல் , பொது அமைதி , நிலம் உள்ளிட்ட விசயங்களை தவிர துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை

 

 அமைச்சரவை அனைத்து முடிவுகளுக்கும் ஆளுநரின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை

யாருக்கு அதிக அதிகாரம் என்பது அந்ததந்த விசயங்களை பொறுத்தது .

 

மக்களுக்கு சென்று சேர வேண்டிய நல்ல திட்டங்களுக்கு தாமதம் ஏற்பட்டால் துணை நிலை ஆளுநர் மற்றும் அரசு இரண்டிற்குமே  பொறுப்பு இருக்கின்றது .

 

போன்ற பல விளக்கங்களை அளித்துள்ளது உச்சநீதிமன்றம்.

 

புரிந்துகொள்வார்களா துணை நிலை ஆளுநர்கள் மற்றும் ஆளுநர்கள்

 

சிலர் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாண்டிச்சேரிக்கு பொருந்துமா தமிழக ஆளுநருக்கு பொருந்துமா என்றெல்லாம் விவாதம் நடத்துகிறார்கள் , அது தேவையில்லாதது .

அனைவருக்குமே இது பொருந்தும்

 

இந்தியாவின் அடிப்படையே மக்களாட்சி தான் , அப்படிப்பட்ட நிலையில் அண்ணா அவர்கள் கூறுவதைப்போல

 

ஆளுநர் பதவியென்பது ஆட்டுக்கு தாடியை போன்றது தான்

 

மத்திய அரசின் மேற்பார்வையாளராக இருக்கத்தான் ஆளுநர் என்பவர் நியமிக்கப்படுகிறார் . அவரது முக்கியவேலை மாநில அரசை கண்காணித்து சட்டம் ஒழுங்கு முறையாக செயல்படுத்தப்படுகிறதா  என்பதனை கண்காணிப்பதும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக அதனை நிர்வகிப்பதும் தான் .

 

ஆனால் டெல்லி , பாண்டிச்சேரி போன்றவற்றில் இருக்கக்கூடிய துணை நிலை ஆளுநருக்கு சற்று கூடுதலான அதிகாரம் அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டு இருக்கின்றது . ஆனாலும் அளவாக . அதனை புரிந்துகொள்ளாமல்  தங்களுக்கு தான் வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைத்துக்கொண்டு செயல்பட்டனர் . தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் அது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றது .

 

இதனை உணர்ந்துகொள்வார்களா ஆளுநர்கள் என்பதுதான் கேள்வி

 

 ஆளுநர் – அமைச்சரவை உறவு எப்படி இருக்க வேண்டும் ?

 

ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படவேண்டும் . இல்லையெனில் மாமியார் மருமகள் பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் மகனை போல மக்களும் அதிகாரிகளும் குழப்பமடைவார்கள் . 

யார் சொல்வதை கேட்டு நடைப்பது என்கிற சூழ்நிலைக்கு அதிகாரிகளை தள்ளுவது நிர்வாகத்தில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் . 

இனி அந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும் என நம்புகின்றேன் .

பாமரன் கருத்து

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *