அண்ணாவின் ஆங்கிலப்புலமை – மெய் சிலிர்க்கவைக்கும் நிகழ்வுகள்
இந்த மண்ணிற்கு “தமிழகம்” என பெயர் வைத்த அண்ணா தமிழில் புலமை பெற்றவர். ஆனால் ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை மிக்கவராக அண்ணா விளங்கினார் என்பது உங்களுக்கு தெரியுமா?
அண்ணா தமிழில் உரை ஆற்றினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்பார்கள். நேர்த்தியான கருத்துக்களை அளவான சொற்களை பயன்படுத்தி எளிய மக்களுக்கும் புரியும் விதமாக பேசுவதில் வல்லவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவரது அடுக்குமொழி அழகுதமிழுக்கு தமிழகம் அடிபணிந்து தான் ஆட்சிக்கட்டிலில் அவரை அமர வைத்து அழகுபார்த்தது. தமிழில் மட்டும் அண்ணா மிகப்பெரிய புலமை பெற்றவர் அல்ல, அவர் ஆங்கிலத்திலும் மிகப்பெரிய அளவில் புலமை பெற்றவராக விளங்கினார். உலகை வெல்ல ஆங்கில அறிவு வேண்டும் என அண்ணா அப்போதே கருத்தியதாலோ என்னவோ தான் இருமொழிக்கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார். அண்ணா அவர்களின் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை காண்போம்.
தொத்தாவை சோதித்த அண்ணா
தொத்தா அதாவது அண்ணாவின் சிற்றன்னை, மாலை நேரத்தில் மண்ணெண்ணை விளக்கேற்றி கொடுத்து பாடங்களை படி என்பார்களாம். பல நேரங்களில் அருகிலேயே அமர்ந்து கேட்கும் வழக்கமும் உண்டு. அப்போது அண்ணா படிப்பதை பார்த்து “ம்” நன்றாக கவனித்து படி என்பார் தொத்தா. ஆங்கில பாடங்களை படிக்கும் போதும் “ம்” நன்றாக கவனித்து படி என்பார் தொத்தா. ஒருநாள் அண்ணாவிற்கு ஒரு சந்தேகம் வந்தது, தொத்தாவிற்கு ஆங்கிலம் தெரியுமா? தெரியாதா? என்பதுதான் அது. சோதித்து பார்த்துவிடலாம் என நினைத்த அண்ணா ஆங்கில வாக்கியங்களை தவறாக படித்தார். அப்போதும் தொத்தா “ம்” நன்றாக கவனித்து படி என்றார். ஆக தொத்தாவிற்கு ஆங்கிலம் தெரியவில்லை என கண்டுபிடித்துவிட்டார் அண்ணா.
நான் நன்றாக படிக்கவேண்டும் என்ற உணர்வினால் தான் அன்னை தனக்கு தெரிந்ததை போல காட்டிக்கொள்கிறார் என்பதை உணர்ந்த அண்ணா அன்னையை சோதிப்பதை நிறுத்திவிட்டு கவனத்தோடு படிக்க ஆரம்பித்தார்.
யேல் பல்கலைக்கழகத்தில் அண்ணா
அண்ணாவின் ஆங்கிலப்புலமை பற்றி விவரிப்பவர்கள் நிச்சயமாக அண்ணாவிற்கு அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்து குறிப்பிடுவார்கள். மாணவர்களிடையே அண்ணா உரையாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு மாணவர் எழுந்து ‘A,B,C,D’ என்ற ஆங்கில எழுத்துக்கள் வராத 100 வார்த்தைகளை கூற முடியுமா என்றார். நிச்சயமாக இப்படியொரு கேள்வியை நம்மிடம் கேட்டால் 100 ஆங்கில வார்த்தைகளா அதுவும் ஆங்கிலத்தின் துவக்க எழுத்துக்களே வராத வார்த்தைகளா என எண்ணி முடங்கியிருப்போம். ஆனால் அவர் அண்ணா அல்லவா One Two Three என தொண்ணூற்று ஒன்பது வரை சொன்னார் அண்ணா. இந்த வார்த்தைகளில் ‘A,B,C,D’ வாராது. Hundred என சொல்லிவிடுவார் என அனைவரும் அவரை கவனித்துக்கொண்டிருந்த நேரத்தில் “Stop” என சொல்லிமுடித்தார் அண்ணா.
வாடிகனில் அண்ணாவின் ஆங்கிலப்புலமை
சிலர் பேசினால் எப்போது நிறுத்துவார்கள் என்று இருக்கும் ஆனால் அண்ணா பேசினால் முடித்துவிடுவாரோ என எண்ணத்தோன்றும் என்கிறார்கள் அண்ணாவை அறிந்தவர்கள். அண்ணா அவர்களின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு பேசிய நாஞ்சில் சம்பத் அண்ணாவின் வாடிகன் அனுபவம் பற்றி குறிப்பிடுகிறார். அண்ணா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வாடிகனுக்கு பயணமானார். போப் ஆண்டவரை சந்திக்க சென்ற அவருக்கு பேச 5 நிமிடம் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தது. அண்ணாவின் ஆங்கிலப்பேச்சில் பிடித்துப்போன போப் தொடர்ந்து பேச கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து அண்ணாவின் பேச்சு 55 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது.
அண்ணாவின் ஆங்கிலப்புலமையை கேட்ட போப் ஆண்டவர், அண்ணாவுக்கு பரிசு கொடுக்க விரும்பி ‘என்ன பரிசு வேண்டும் கேளுங்கள்’ என்று கேட்டார். அண்ணா பரிசு ஏதும் வேண்டாம் என மறுப்பு கூறினார். பரிசு கொடுப்பது தங்களின் அரண்மனையின் வழக்கம் என்று கூறியதால், போர்ச்சுக்கல் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கோவாவின் விடுதலை வீரன் மைக்கேல் ரேனிடேயை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
மொழியாற்றலோடு நிற்கவில்லை அண்ணா
நம் அனைவருக்கும் தமிழ் தெரியும் ஆனால் அதுமட்டுமே போதுமா நம் பேச்சை பிறர் மெய் மறந்து கேட்பதற்கு? போதாது. பேச்சில் விசயம் இருந்தால் மட்டுமே காது கொடுத்து கேட்பார்கள் எவரும். அண்ணா அதிகமாக படிக்கக்கூடிய நபராக இருந்தபடியால் தான் அவரது மொழியாற்றலோடு அறிவாற்றலும் இணைந்து அவரது பேச்சை மேன்மையாக்கி இருக்கிறது. அண்ணாவின் ஆங்கிலப்புலமை போலவே அவரது சமயோஜித அறிவும் போற்றத்தக்கது எனலாம். அது குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!