கேள்வி குறியாக நான்? – இப்படிக்கு அவள் ராணி
கேள்வி குறியாக நான்
என் பெயர் ராணி. பேரு மட்டும் தான் ராணி. பொறுப்பில்லாத அப்பா அப்பாவியான அம்மா மூன்று தங்கைகள் ஒரு தம்பி. என் அம்மாவால் எங்களை படிக்க வைக்க முடியவில்லை. என் மாமா வீட்டில் எங்களை படிக்க வைத்ததால் 12ம் வகுப்பு படித்தோம். என் அப்பா ஒரு குடிகாரர். இவரால் ஒவ்வொரு நாளும் போராட்டம் தான்.
எனக்கு திருமண வயது வந்தது. என் அப்பா பொறுப்பில்லாதவர் என்பதால் எனக்கு நிறைய ஆசைகளும் கனவுகளும் இருந்தாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும் திருமணத்திற்கு திருமணம் செய்து கொள்ளலாம் என எண்ணியிருந்தேன். எனக்கு திருமணம் செய்தால் பணம் செலவாகும். வரதட்சணை நிறைய கொடுக்க வேண்டும் என நினைத்து என் அப்பா எனக்கு வந்த நல்ல வரன்களை எல்லாம் தட்டிக் கழித்த வந்தார்.
எனக்கு திருமண வயதையெல்லாம் தாண்டி விட்டது. அடுத்து வருபவர்கள் என் தங்கைகளை பெண் பார்க்கவே வந்தார்கள். என் தங்கைகளின் சிறுசேமிப்பிலும் எனது சேமிப்பிலும் அவாகளின் திருமணத்தை செய்ய முன் வந்தோம். என் முதல் தங்கையின் திருமணத்தின் போது நீ இப்படி இருந்தால் உன் தங்கை திருமணம் நடக்காது என சொல்லிவிட்டார்கள் என் பெற்றோர். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னால் என் தங்கை திருமணம் தடைபட்டு விடக்கூடாது என நினைத்து வீட்டை விட்டு வெளியேறி ஒரு சர்ச்சில் தங்கி இருந்தேன்.
திருமணம் முடிந்ததம் என் பெற்றோர் என்னை அழைக்கவில்லை. என் உடன் பிறந்தவர்களும் என்னை அழைக்கவில்லை. என் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் நீ இப்படி இருந்தால் உன் அடுத்த தங்கை தம்பிக்கு திருமணம் நடக்காது என சொல்ல என்னால் அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நினைத்து மீண்டும் என் குடும்பத்தில் சேர்ந்தேன்
இரண்டாவது தங்கைக்கு திருமணம் நிச்சயமானதே எனக்கு தெரியாது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தெரியும். என் பெற்றோரும் என் உடன் பிறந்தவர்களும் என்னை உதாசீனப்படுத்தியதை நினைத்து மிகவும் வருந்தினேன். திருமணத்தின் போது மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் வீட்டில் இருந்தேன். மீண்டும் அடுத்தவர்களின் வாழ்க்கையை நினைத்து வீட்டிற்கு திரும்பினேன்.
என் பெற்றோர் மிகவும் நல்லவர்கள் என் தங்கைகள் திருமணத்திற்கெல்லாம் என்னை அழைக்காமல், என் தம்பி திருமணத்திற்கு என்னை அழைத்தனர். நானும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டேன். நான் தன்னார்வ தொண்டு நிறுவத்தில் வேலை செய்த கொண்டிருந்தேன். அதனால் எனக்கு நண்பர்கள் அதிகம். என் தம்பி திருமணத்திற்கு வந்த என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களை மட்டும் உன் பெற்றோர் ஏன் உன்னை மட்டும் இப்படி விட்டுட்டாங்கனு சொல்லும் போது நான் பட்ட வேதனையை சொல்ல வார்த்தைகளே இல்லை.
என் தம்பி மனைவி கூட ப்ரெண்ட்லியாக இருக்கலாம்ணு நினைச்சேன் பெற்றோரே பிள்ளையாக நினைக்காத போது எங்கிருந்தோ வந்தவங்க மட்டும் எப்படி நினைப்பாங்க. நான் எதையும் பொருட்படுத்துவதில்லை.
நான் என்ன செய்வேன்
நான் வேலை செய்யுற ஆபிஸ்ல நிறையபேர் என்னை ஏளனமாக நினைத்தாலும் என்னுடைய பிரச்சனைகளை எல்லாம் சொல்ல ஒரு தோழி உண்டு. அவங்களும் எவ்வளவு நாள் என் கூட இருப்பாங்கனு தெரியலை. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாதுனு நினைச்சுப்பேன். என் வாழ்க்கை எதை நோக்கி போகுதுனு தெரியல. நான் எதற்காக வாழுறேன்? யாருக்காக வாழுறேனு எனக்கு தெரியல. யோசிச்சுப் பார்த்தாலும் புரியல. எப்படி பார்த்தாலும் நான் ஒரு கேள்விக்குறி தான்.
இப்படிக்கு அவள் ராணி…