பெரியார் வெறும் சிலையல்ல அவர் ஒரு “தத்துவம்” – சிறப்பு பகிர்வு
அண்மையில் திரிபுராவில் பாஜக வென்ற பிறகு லெனின் சிலை உடைக்கப்பட்டது. அது நடந்த பிறகு தமிழ்நாட்டின் மிக பிரபலமான பாஜக நபர் H ராஜா அவர்களின் ட்விட்டர் கணக்கில் “அடுத்ததாக தமிழ்நாட்டில் பெரியார் சிலை உடையும்” என்கிற ரீதியில் பதிவிடபட்டு இருந்தது. பல பக்கமும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அதை தனது அட்மின் என்னை கேட்காமல் போட்டுவிட்டார் என மழுப்பியது அடுத்த கதை.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த பலரில் (கமல் உள்பட) பெரியார் சிலைக்கும் கடவுள் சிலைக்கும் முடுச்சு போடுகின்றனர். கடவுள் சிலையை எடுக்க ஒப்புக்கொண்டால் பெரியார் சிலையை எடுக்கலாம் என பேசினார்கள். அவர்களின் பெரியார் பற்றை நான் கேள்வி கேட்க விரும்பவில்லை. ஆனால் அனைவரும் பெரியாரின் சிலைக்கும் கடவுளின் சிலைக்கும் ஒப்பீடு செய்வது ஏன் ? அது எப்படி சரியாகும் என்கிற கேள்வி எழுகிறது..
இது என்னவோ பெரியார் கடவுள் மறுப்பாளர் மட்டுமே என காட்டுவதாக அல்லவா இருக்கிறது. மேலும் கடவுள் சிலையை அகற்றுவதாக சொன்னால் பெரியார் சிலையை அகற்றிவிடலாமா என்ன ? இது என்னவோ நீ உன் கண்களில் குத்திக்கொண்டால் நான் என் கண்களை குத்தி கொள்கிறேன் என்பது போற்றல்லவா இருக்கிறது.
பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை என்பது சிறு பகுதி. தாழ்த்தப்பட்டவர்களின் நிலை உயர, அடுப்பாங்கரையில் அடைபட்டு கிடந்த பெண்களின் வாழ்க்கை முன்னேற, சம்பிரதாயங்களை சொல்லி சொல்லி உழைப்பவர்களின் ஊதியத்தை பிடுங்குபவர்களை ஒடுக்க , சாதிகளின் பெயரால் வேறுபட்டு கிடந்த மக்களை ஒன்றிணைக்க, பாலின வேறுபாட்டை களைய என அவரது கொள்கைகள் எல்லையற்று கிடந்தன.
பெரியார் சிலையல்ல ! அவர் “தத்துவம்”
பெரியாரின் சிலை வெறுமனே சிலை அல்ல. அதற்க்கு பின்னால் அவரின் கொள்கைகள் இருக்கின்றன. லெனின், மார்க்ஸ் ,ஏங்கல்ஸ் போன்றோரின் வரிசையில் பெரியார் தமிழகத்துக்கு கிடைத்த ஒரு “தத்துவம்”.
தமிழகம் இன்றைக்கு மிக முன்னேறிய மாநிலமாக , சமூக சிந்தனையுள்ள மாநிலமாக, பெண்கள் முன்னேற்றத்தில் சிறந்த மாநிலமாக ,மத கலவரங்கள் அற்ற மாநிலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியாரும் அவரது கொள்கைகளும் தான்.
பெரியாரிடம் உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்ற கேள்விக்கு ” எனக்கு அரசியல் வாரிசு கிடையாது, என்னுடைய கொள்கைகளும் கருத்தும் தான் வாரிசு என்றார். இன்றைக்கு ஆள்பவர்களும் போட்டிகளத்தில் நிற்பவர்களும் பெரியாரின் கொள்கைகளுடனையே இருக்கின்றனர்.
உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேத புத்தகமாக சொல்லும் “செகண்ட் செக்ஸ்” புத்தகம் வெளியாவதற்கு முன்பாகவே “பெண் ஏன் அடிமையானாள் ? என புத்தகம் எழுதிய மாமேதை தந்தை பெரியார் அவர்கள்.
நான் சொல்வதையும் நம்பாதீர்கள் உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என நல்லதை சொல்லி முடிவெடுக்கும் விசயத்தை மக்களிடமே விட்டுவிடும் அளவிற்க்கான பகுத்தறிவு சிந்தனைவாதி.
தற்போது நடைபெறும் அரசியல் நகர்வுகளில் பல பெரியார்கள் தேவைப்படுவார்கள். பெரியாரின் சிலை குறித்த வன்முறைக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளனர் தமிழக மக்கள்.
மக்களே ஒன்றினை நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் இன்று பள்ளியில் மற்றவர்களுடன் சரி சமமாக அமர்ந்து படிக்க, மற்றவர்களுக்கு இணையாக வேலை பார்க்க, சாதிய கொடுமைகளில் இருந்து விடுபட்டு நிமிர்ந்து நடக்க பெரியார் என்னும் தத்துவமே காரணம். சிறு பூச்சிகளோ பெரிய திமிங்கிலங்களோ நமது பகுத்தறிவு கொள்கைகளுக்கு எதிரானதாக வந்தால் போராட தயங்காதீர்கள்.
பெரியார் வாழ்க!
நன்றி
பாமரன் கருத்து
Pingback:Nakkeran
Pingback:பெரியார் பெருமை பெரிதே! – Nakkeran