அரசியல் பழகு தோழா ! – சிறந்த தலைமையாக மாறிடு அண்ணா வை போல
அரசியல் பழகு தோழா ! – சிறந்த தலைமையாக மாறிடு அண்ணாவை போல
சிறந்த தலைமை யார் :
சிறந்த கொள்கைகளை கொண்டவரும் அதற்காக எள்ளளவும் பின்வாங்காமல் துணிவோடு போராடும் குணம் கொண்டவருமே சிறந்த தலைமை என சொல்லலாம் .
ஆனால் இதோடு சேர்த்து இன்னும் பல திறன்களும் நல்ல தலைமைக்கான தகுதியை பெற்றுத்தர பயன்படுகின்றன .அவற்றை முதுபெரும் தலைவர் அண்ணாவின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டு கூற முற்படுகிறேன் .
இந்த பதிவில் அண்ணாவின் பிறரை மதிக்கும் மாண்பை முன்னிறுத்தியிருக்கிறேன் .
மரியாதை :
பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது வழி சென்றவர் அண்ணா . பெரியாரின் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர் .
பெரியார் மணியம்மை திருமணம் நடந்ததற்கு பின்னால் தனி கட்சி தொடங்கிய அண்ணாவையும் திமுகவையும் விமர்சிக்க பெரியார் தயங்கியது இல்லை . ஒவ்வொரு முறையும் கட்சிக்காரர்கள் பெரியாருக்கு எதிர்ப்பை காட்டிட வேண்டும் அவரை விமரிசிக்க வேண்டும் என கூறும் அன்பர்களையும் அண்ணா தடுத்தே வந்துள்ளார் .
அதற்காக அண்ணா கூறும் ஒரே காரணம் ‘ பெரியாரை விமர்சிக்கும் அளவிற்கு யாரும் இங்கு வளர்ந்துவிடவில்லை ‘ என்கிற மதிப்பே .
அதே நேரத்தில் குறைந்த வயதுகொண்ட பெண்ணை பெரியார் திருமணம் செய்துகொண்டதை அண்ணா மிக அதிகமாகவே எதிர்த்தார் .மதிப்பை மரியாதையை குலைக்காமல் நாகரிகமாக நேர்மையாக .
இன்று என்ன நடக்கிறது :
முந்தாநாள் ஒருவர் ஒரு அணியில் இருக்கிறார் , எதிரணியில் உள்ளவரை அவர் கண்டபடி விமர்சிக்கிறார் .
நாளை எதிரணிக்கு மாறிவிடுகிறார் , இப்போது முந்தாநாள் இருந்த அணியை கண்டபடி விமர்சிக்கிறார் .
இது என்ன மாதிரியான அரசியல் . கீழ்த்தரமான கொள்கைகள் இல்லாத மனிதர்களினால் தான் இவ்வாறு மாறி மாறி பேசிட முடியும் .
அண்ணா அவர்களுக்கு பெரியாரின் கொள்கைகளே அவரை பிரிந்து வந்த போதும் இருந்தன , பெரியாரின் மீது அன்று இருந்த மதிப்பே பிரிந்து வந்தபோதும் இருந்தது . அவையே பெரியாரை விமர்சிக்க அண்ணாவை அனுமதிக்கவில்லை .
புதிய கட்சி தொடங்க ஆர்ப்பரித்த நல்ல உள்ளங்களுக்கு அண்ணா சொன்ன பதில் இதுதான் :
இயக்கத்தை விட பெரியாரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் கழக பக்தர்கள் வெகு சிலராக இருந்தாலும் அவர்கள் பெரியாரோடு இருக்கிறார்கள் . பெரியாரை விட இயக்கத்தினடத்து அதிக பற்று வைத்திருப்பவர்கள் நம்மோடு இருக்கின்றார்கள் .
பெரியாரோடு நிற்கும் திராவிட கழகத்தினரோடு மோதி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வழக்குகள் தொடுப்பது நம்முடைய நேரம் , நினைப்பு , உழைப்பு , பொருள் முதலியவற்றை வீணாக்கிட உதவுமேயன்றி நம்மையே நம்முடைய கழகத்தையோ முன்னேற்ற பயன்படா .
இதன்பிறகு பெரியார் மணியம்மை திருமணம் நடந்தேறி திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டது .
ஆனால் எந்த சூழ்நிலையிலும் அண்ணா அவர்கள் தான் கொண்டிருந்த கொள்கைகளையும் பெரியாரின் மீது கொண்டிருந்த மதிப்பையும் குறைத்துக்கொள்ளவே இல்லை .
அதனாலேயே அவர் இன்றளவும் சிறந்த தலைமைத்துவம் மிகுந்த தலைவராக பார்க்கப்படுகிறார் .
நீங்கள் எப்படிப்பட்ட தலைமையாக உருவாக வேண்டும் :
கொள்கைகள் முதன்மையானதாக இருக்கவேண்டும் .
உங்கள் கொள்கைகளை எதிர்கட்சியோ யாரோ செயல்படுத்தினால் அல்லது போராடினால் அவர்களை பாராட்டிட தயங்குதல் கூடாது .
கொள்கைகளுக்கு எதிராக எவ்வளவு பெரிய தலைவர் இருந்தாலும் அவரை எதிர்க்க துணிய கூடாது .
நம்பிக்கை , தன் தலைவர் சரியாகத்தான் செய்வார் என்கிற நம்பிக்கையை தொண்டர்களிடம் ஏற்படுத்தும் விதமாக செயற்படுதல் வேண்டும் .
நாகரிகமாக விமர்சிக்கும் பழக்கத்தை தன்னிடம் ஆரம்பித்து அதனை தன்னுடைய கட்சி கடைசி தொண்டன் வரையிலும் புகுத்திட வேண்டும் .
தேர்தலுக்காக அரசியல் செய்யாமல் கொள்கைகளுக்காக அரசியல் செய்ய வேண்டும் .
வயோதிகம் ஏற்பட்டால் தான் இருக்கும்போதே அடுத்த தலைவரை முன்னிறுத்தி அவர்களின் செயல்பாட்டை கவனித்து அடுத்த தலைவரை உருவாக்கிட வேண்டும் .
இதில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா தோற்றுப்போனார்கள் …அண்ணாவே ஜெயித்தார் (எப்படியென்று அடுத்த பதிவில் பார்ப்போம் )
நன்றி
பாமரன் கருத்து