பணியிடத்தில் தனித்து தெரிய வேண்டுமா? இதை செய்து பாருங்கள்
அலுவலகங்களில் அனைவரைப்போலவே நாமும் நமக்கு ஒதுக்கப்படுகிற வேலையை செய்துவிட்டுத்தான் வீட்டிற்கு செல்கிறோம். ஆனாலும் சிலர் மட்டும் தான் அலுவலகத்தில் தனித்து தெரிகிறார்கள். கடினமாக உழைத்தும் பலரால் தனித்து தெரிய முடிவதில்லை. காரணம் இதுதான்.
நூறு பேர் வேலை செய்திடும் அலுவலகத்தில் ஒரு சிலர் மட்டும் தான் தனித்து தெரிவார்கள். புதிய வாய்ப்புகள் வந்தாலும், சவாலான வேலை என்றாலும் அவர்களால் தான் முடியுமென மேல் அதிகாரிகளால் நம்பப்படுகிறவர்கள் அவர்கள் தான். அந்த சிலரைப்போலவே கடுமையாக வேலை செய்கிறவர்களாக இருந்தும், இன்னும் சொல்லப்போனால் அவர்களை விடவும் அதிக விசயங்கள் தெரிந்தவராக இருந்தும் கூட பலர் அந்த இடத்தை பிடிக்க முடிவதில்லை. அனைவரும் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள் என்றாலும் கூட “அந்த சிலர்” அதே வேலையை சற்று வித்தியாசமாக செய்து முடிப்பதனால் தான் அவர்கள் தனித்து தெரிகிறார்கள். நீங்களும் அந்த சிலரில் ஒருவராக பணியிடத்தில் தனித்து தெரிய வேண்டுமா? இதை செய்து பாருங்கள்.
ஆங்கிலத்தில் புகழ்மிக்க சொல்லாடல் ஒன்று உண்டு. “first impression is the best impression” அதாவது நீங்கள் முதல் முறையில் எப்படி நடந்துகொள்கிறீர்களோ அதைத்தான் பெரும்பாலானவர்கள் நினைவிலே வைத்திருப்பார்கள். அதுதான் உங்களது எதிர்காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, ஒரு அலுவலகத்தில் சேர்ந்தவுடனேயே உங்கள் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படும் விதத்தில் நடந்துகொள்ளுங்கள். முதலில் கோட்டை விட்டுவிட்டு பிறகு எவ்வளவு தான் உழைத்தாலும் நற்பெயரை பெறுவது கடினமாகவே இருக்கும். ஆகவே பின்வரும் விசயங்களை துவக்கத்தில் இருந்தே செயல்படுத்துங்கள்.
1.முதலில் செய்ய வேண்டியதை முதலில் செய்திடுங்கள்
பலர் செய்திடும் பெரிய தவறு இதுதான். ஒவ்வொருவருக்கும் பல வேலைகள் இருக்கும். ஆனால் அவற்றில் எதை முதலில் செய்து முடிக்க வேண்டும், எதை நேரம் எடுத்து முடித்தாலும் பரவாயில்லை என்று பலர் பார்த்து வேலை செய்வது கிடையாது. சிலர் மட்டும் தான் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகள் என்னென்ன என்பதை அலுவலகம் வந்த உடனேயே தெரிந்துகொண்டு வரிசைப்படி முடித்துக் கொடுத்து மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குகிறார்கள். பெரும்பான்மையானோர் அனைத்து வேலைகளையும் அறியாமல் ஏதோ ஒரு வேலையை எடுத்து அதை மிகவும் கடினமாக செய்துகொண்டு இருப்பார்கள். ஆனால் எத்தனை கடினமாக செய்தாலும் முதலில் முடிக்க வேண்டியதை முடிக்காமல் வேறு பல வேலைகளை செய்து முடித்தாலும் மேலதிகாரிகளிடம் “சபாஷ்” வாங்க மாட்டார்கள்.
எப்படி தேர்வுக்கு செல்லும் போது முதலில் முழு வினாத்தாளையும் ஒருமுறை பார்த்துவிட்டு தேர்வெழுத துவங்குவோமோ அதைப்போலவே பணியிடத்திலும் நடந்துகொள்ளுங்கள்.
தலைமைப் பொறுப்பை வெற்றிகரமாக செய்திட 6 யோசனைகள்
2. கடினமானதை முதலில் செய்து முடியுங்கள்
அலுவலகம் சென்றவுடன் பலர் செய்யக்கூடிய விசயம் “எது எளிமையாக செய்து முடிக்க முடியுமோ” அந்த வேலையை முதலில் செய்ய ஆரம்பிப்பது தான். பிறகு அலுவலகம் முடிவடையும் நேரத்தில் அசுர வேகத்தில் கடினமான வேலையை செய்துமுடிக்க நினைத்து, முடிக்கவும் முடியாமல் தவறுகளையும் செய்துவிடுகின்றபடியால் எவ்வளவு கடினமாக உழைத்தும் கூட நல்லபெயர் வாங்க முடியாமல் போகிறது.
நாம் காலையில் அலுவலகத்திற்குச் செல்லும் போது தான் “வேலை செய்திடும் ஆற்றல்” நமக்கு அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் கடினமான வேலையைக்கூட நம்மால் எளிதாக செய்துமுடித்துவிட முடியும். ஏனென்றால் கடினமான வேலையை செய்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. ஆகவே அதனை முதலில் செய்து முடித்துவிட்டால் அலுவலகம் முடிவடையும் நேரத்தில் கூட எளிமையான வேலைகளை நம்மால் வேகமாக செய்து முடித்துவிட முடியும். தவறுகளையும் நம்மால் தவிர்க்க முடியும். ஆகவே கடினமான வேலைகளை முதலில் செய்து முடியுங்கள்.
3.உடனடியாக செயலில் இறங்குங்கள்
வேலையிலும் சரி, வாழ்க்கையிலும் சரி பலர் பின்னடைவை சந்திப்பதற்கு மிக முக்கியக்காரணம் “தயக்கம்” “தள்ளிப்போடுதல்” இவை இரண்டும் தான். உங்களுக்கு ஒரு வேலை ஒதுக்கப்படுகிறது என்றால் முதலில் அந்த வேலையை ஏற்றுக்கொள்ள தயங்காதீர்கள். நீங்கள் ஒருமுறை அந்த தயக்கத்தை வெளிப்படையாக காட்டிவிட்டீர்கள் என்றால் நீங்கள் அந்த அலுவலகத்தில் வேலை செய்திடும் இறுதி நாள் வரைக்கும் உங்கள் மீது அந்தப் பார்வை இருந்துகொண்டே இருக்கும். அதற்கு அடுத்து உங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஒதுக்கவே தயங்க ஆரம்பித்துவிடுவார்கள், பிறகு எப்படி நீங்கள் தனித்து தெரிவது? ஆகவே புதிய வாய்ப்புகள் வந்தால் தயங்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.
வேலையிலும் சரி, வாழ்க்கையிலும் சரி…ஒரு வேலையை செய்வதற்கு முன்னதாக திட்டமிடுங்கள். அதில் தவறு இல்லை. ஆனால் யோசித்தே காலம் தாழ்த்திக்கொண்டு இருக்காமல் எவ்வளவு விரைவாக அந்த வேலையை ஆரம்பிக்க முடியுமோ ஆரம்பித்துவிடுங்கள். பலருக்கு துவக்கம் தான் பிரச்சனை. நீங்களும் அதில் சிக்காதீர்கள்.ஆரம்பியுங்கள், அந்த வேலையை முடிப்பதற்கு சீராக பணியாற்றிக்கொண்டே இருங்கள். உங்களால் முடியும்.
4.கற்றுக்கொடுக்க எப்போதும் தயங்காதீர்கள்
அலுவலங்களில் பலர் தனக்கு தெரிந்த விசயத்தை தனக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளார்கள். பிறருக்கு அதனை சொல்லிக்கொடுத்துவிட்டால் எங்கே தனக்கான முக்கியத்துவம் குறைந்துபோய் விடுமோ என்ற அச்சம் தான் அதற்கு முக்கியக்காரணமாக இருக்கிறது. உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் போது தான் “நீங்கள் இன்னும் பிரபலம் அடைகிறீர்கள்” “நீங்கள் இன்னும் அதைப்பற்றி அதிகமாக கற்றுக்கொள்ளுகிறீர்கள்” என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் உங்களுக்கு தெரிந்ததை கற்றுக்கொடுப்பதனால் உங்களுக்கான முக்கியத்துவம் குறையப்போவது இல்லை. மாறாக, நீங்கள் இவ்வளவு நாட்கள் செய்துவருகிற வேலையை இன்னொருவர் செய்யப்போகிறார். இதனால் நீங்கள் அதனை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளில் அக்கறை செலுத்தலாம். புதியவற்றை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கலாம். நீங்கள் யாருக்கு கற்றுக்கொடுத்தீர்களோ அவர்கள் உங்களைப்பற்றி இன்னும் அதிகம்பேரிடம் உங்களைப்பற்றி சொல்ல ஆரம்பிப்பார்கள். அப்போது நீங்கள் இன்னும் உயருகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
5.செய்திடும் வேலையை மதித்து செய்திடுங்கள்
அலுவலகங்களில் பணியாற்றும் பலருக்கு தாங்கள் செய்திடும் வேலை குறித்த நல்ல அபிப்பிராயம் இல்லாமலே தான் வேலை செய்கிறார்கள். இந்த உலகத்தில் எந்த வேலையும் மற்ற வேலைகளை விட உயர்வானதோ அல்லது தாழ்வானதோ கிடையாது. எந்த ஒரு நபர் தான் செய்திடும் வேலையை மிகவும் விரும்பி செய்கிறாரோ அவர் அந்த வேலையில் சிறந்தவராக இருக்கிறார். அவர் மீது மற்றவர்களுக்கு தானாகவே ஒருவித ஈர்ப்பு உண்டாகிறது.
நீங்கள் எத்தனையோ ஆட்டோ ஓட்டுனர்களை பார்த்திருக்கலாம். ஆனால் அயர்ன் செய்யப்பட்ட சட்டை, பேண்ட், கூடவே இன் செய்திருக்கிறார் எனில் அவரைக்காணும் போது உங்களுக்கு ஒருவித மகிழ்ச்சி உண்டாகும். அவர் மீது மதிப்பு உண்டாகும். அவர் அப்படி ஒரு ஆடையை அணிய வேண்டிய அவசியமில்லை. யாரும் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. ஆனாலும் அவர் செய்கிறார் என்றால் அவர் அந்த வேலையை எவ்வளவு நேசித்து செய்கிறார் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
அவரைப்போலவே நீங்களும் உங்கள் வேலையை உயர்வாக எண்ணிக்கொண்டு பணியாற்றிட ஆரம்பியுங்கள். அது உங்களுக்கு உள்ளத்திலும் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை வாரி வழங்கும். நீங்கள் தனித்துவம் மிக்கவராக நிச்சயம் தெரிவீர்கள்.
இந்தப்பதிவு பற்றிய உங்களது கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்.
இதுபோன்ற பல சுயமுன்னேற்ற பதிவுகளை இங்கே படியுங்கள்
பாமரன் கருத்து