நேரம் வேகமா போற மாதிரி உணருகிறீர்களா? என்ன காரணம் தெரியுமா?
“இப்போதான் தீபாவளி போன மாதிரி இருந்துச்சு இந்தா அடுத்த தீபாவளி வந்துருச்சி.. இப்போவெல்லாம் நாள் ரொம்ப வேகமா போகுதுல்ல”
இப்படிப்பட்ட உரையாடல்களை ஒவ்வொரு விசேஷ நாட்களின் போதும் நாம் கேட்டிருப்போம். நீங்களே கூட உங்களது நண்பர்களிடத்தில் இப்படி சொல்லியிருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அனைவருக்கும் நேரம் ஒரே அளவானது தான் பிறகு ஏன் சிலருக்கு மட்டும் நேரம் மிக வேகமாக போவதைப்போல தோன்றுகிறது? இதற்க்கு என்ன காரணம்? இதனை தடுத்து நேரம் மெதுவாக போவதைப்போல மாற்ற முடியுமா?
நிச்சயமாக முடியும்.
Read this post also :
எந்த சூழலிலும் அமைதியான மனநிலையில் இருப்பது எப்படி?
சந்தோசமான வாழ்க்கை வாழ்வது எப்படி?
ஏன் நேரம் வேகமாக ஓடுவதை போல உணருகிறோம்?
பொதுவாக நேரம் வேகமாக ஓடுவதுமில்லை மெல்ல நகருவதும் இல்லை, நமக்குதான் அப்படி தோன்றுகிறது. சிலருக்கு மட்டும் அப்படி தோன்றுவதற்கு காரணம் அவரவருடைய மனநிலை மற்றும் அவர்களுடைய வாழ்க்கை சூழல். மனநல நிபுணர்கள் சிலருக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறது என்பதற்கு விளக்கங்களை கூறுகிறார்கள். அதனைத்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
ஒரே இடம் ஒரே வேலை
யாருக்கு வேகமாக நேரம் ஓடுவதை போல தோன்றுகிறது என்றால் “வயதானவர்களுக்கு” என்கிறார்கள். வயதாக வயதாகத்தான் இப்படி நேரம் வேகமாக ஓடுவதைப்போல உணருகிறோமாம், இதற்க்கு காரணம் நாம் இருக்கக்கூடிய சுற்றுசூழல்தான் காரணம் என்கிறார்கள். நம்மை சுற்றியிருக்கும் சூழல் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் போது நமது கவனம் அவ்வளவு ஆழமானதாக இருப்பதில்லை. உதாரணத்திற்கு நீங்கள் ஒரே பாதையில் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிக்கொண்டு போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். பல நேரங்களில் நாம் எப்படி குறிப்பிட்ட இடத்தை கடந்து வந்தோம் என்பது நினைவில் இல்லாததை போல உணருவோம். ஆனால் கவனத்தோடு தான் வாகனத்தை ஓட்டியிருப்போம். இதற்க்கு காரணம் ஒரே பாதை என்பதனால் ஏற்கனவே உங்களுக்கு பரிட்சயமான தரவுகளையே மீண்டும் உங்களது மூளை Process செய்கிறது. ஆகையினால் தான் உங்களுக்கு அப்படி தோன்றுகிறது.
அதேபோல ஒரே விதமான வேலையை செய்துகொண்டே இருக்கும் போதும் நேரம் வேகமாக ஓடுவதைப்போன்ற எண்ணம் ஏற்படுகிறதாம்.
குழந்தைகளுக்கு இதுபோன்ற உணர்வுகள் ஏற்படுவது இல்லை. இதற்க்கு காரணம், அவர்கள் பார்க்கின்ற விசயங்கள் புதிது, செய்கின்ற செயல்கள் புதிது என இருப்பதனால் அவர்களுடைய மூளை ஆழமாக செயல்பட வேண்டி இருக்கிறது. இதனால் தான் வேகமாக நேரம் ஓடுவதை போன்ற உணர்வு குழந்தைகளுக்கு ஏற்படுவது இல்லையாம்.
இதனை எப்படி தவிர்ப்பது?
>> புதிய இடங்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் சென்று வர வேண்டும்.
>> புதிய வேளைகளில் ஈடுபட வேண்டும்.
வேலை செய்யும் இடத்தையும் நாம் இருக்கும் இடத்தையும் மாற்றிக்கொண்டே போக முடியாது. அதே போல நாம் செய்கின்ற வேலையையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே போக முடியாது. ஆனால் அதற்க்கு சற்று ஓய்வளிக்க வேண்டும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். குறிப்பிட்ட இடைவெளியில் புதிய இடங்களுக்கு செல்வதனை வழக்கமாக கொள்ள வேண்டும். அதேபோல புதுவிதமான சிறிய வேலைகளை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட வேண்டும்.
இந்த இரண்டையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் நாம் செய்திடும் போது நமது மூளையும் மனதும் ஒருநிலையோடு அதிக அக்கறையோடு வேலை செய்ய ஆரம்பிக்கும். இதனால் நேரம் வேகமாக ஓடுவது போன்ற எண்ணம் நமக்கு தோன்றாது.
நான் செய்து பார்க்க போகிறேன்!
நீங்களும் இப்படி செய்து பாருங்க!