திட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு ஆனால் பதவியோ ஆண்களுக்கு, சூப்பர் சமூகநீதி
திமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது அதிலே பெண்களுக்கு 12 இடங்கள். அதிமுக 171 இடங்களில் போட்டியிடுகிறது அதிலே பெண்களுக்கு 14 இடங்கள். மக்கள் நீதி மையம் 154 இடங்களில் போட்டியிடுகிறது அதிலே பெண்களுக்கு 12 இடங்கள். நாம் தமிழர் கட்சி மட்டும் தான் 234 தொகுதிகளில் போட்டியிடுகிறது அதிலே பெண்களுக்கு 117 இடங்களை [50%] ஒதுக்கியுள்ளது.
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது செய்வோம் அது செய்வோம் என வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள். ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையையும் கவனித்துப் பார்த்தால் பெரும்பான்மையான கவர்ச்சிகரமான திட்டங்கள் அனைத்தும் பெண்களை மையப்படுத்தியதாகவே இருக்கும்.
திமுகவின் ரூ 1000 ஆகட்டும் அதிமுகவின் ரூ 1500 மற்றும் வாஷிங் மெஷின் ஆகட்டும் அனைத்துமே ‘குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும்’ என்றே சொல்லப்படுகிறது. வாக்கு கேட்டு ஒவ்வொரு ஊராக போகிற போட்டியாளர்கள் ஆண்களை பெரிதாக கண்டுகொள்வதே கிடையாது. பின்னால் நிற்கும் பெண்களை ‘அம்மா வாங்க, நல்லா முன்னாடி வாங்க’ என முன்னால் அழைத்து புன்சிரிப்போடு பேசுகிறார்கள். இன்னும் சில போட்டியாளர்களோ தலைமுடி நரைத்திருந்தால் போதும் காலில் கூட விழுந்துவிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும் சரி, போட்டி போடுகிறவர்களும் சரி பெண்களையே குறிவைத்து செயல்படுகிறார்கள்.
இப்படி வாக்குக்காக பெண்களை குறிவைத்து செயல்படும் அரசியல்கட்சிகள், பெண்களை அரசியலில் முன்னிறுத்துகின்றனவா? அவர்களுக்கு போதிய பிரதிநித்துவம் கொடுக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இல்லை. இந்தியாவை பொறுத்தவரைக்கும் சமுகநீதி, ஆண் பெண் சமத்துவம் அதிகம் பேசப்படுகிற மாநிலம் தமிழகம். அதிலும் சமூகநீதியை நாங்கள் தான் காக்கிறோம் என மார்தட்டிக்கொள்ளும் திமுகவை பாருங்கள் 173 இடங்களில் வெறும் 12 இடங்களை மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது. அதிலும் பெரும்பாலானவர்கள் முக்கியஸ்தர்களின் மனைவி அல்லது வாரிசுகள்.
மறுபுறம் அதிமுகவோ 171 இடங்களில் போட்டியிடுகிறது, அந்தக்கட்சி வெறும் 14 இடங்களையே பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளையும் விமர்சித்து புதியதொரு மாற்றம் படைப்போம் என வெளிச்சம் பாய்ச்சும் கமல் ஹாசனும் புதிதாக ஒன்றையும் செய்திடவில்லை. 154 இடங்களில் போட்டியிடும் அவரது கட்சி 12 இடங்களையே பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது. பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33% சதவிகித கோரிக்கை பல வருடங்களாக ஹோமா நிலையில் இருக்கிறது. சட்டமன்றத்திலாவது 33% ஐ நிறைவேற்றுவார்களா என எதிர்பார்த்தால் 10% இடங்களைக்கூட பெண்களுக்கு ஒதுக்க மறுக்கிறார்கள்.
இவர்களில் இருந்து சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி தான் சற்று வேறுபட்டு இருக்கிறது. இவர்கள் தான் கடந்த சில தேர்தல்கள் அனைத்திலும் 50% இடங்களை பெண்களுக்கு ஒதுக்குகிறார்கள். இந்த விசயத்திற்காக நாம் நிச்சயமாக நாம் தமிழர் கட்சியை பாராட்டியே தீர வேண்டும்.
மற்ற கட்சிகளை குறை சொல்வதைவிட இந்த விசயத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளைத்தான் குறை சொல்ல வேண்டும். காரணம் அவர்கள் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறார்கள். இந்த இரண்டு கட்சிகளிலும் கணிசமான அளவில் பெண்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அவர்கள் போராட்டங்களுக்கும் அரசியல் கூட்டங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களை பிரதிநித்துவம் செய்வதில் இரண்டு கட்சிகளுமே பின்தங்கியே இருக்கின்றன.
பொதுவான அரசியல் தளங்களில் சில பெண்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர்கள் நடிகையாகவோ முக்கியஸ்தர்களின் மனைவியாகவோ மகளாகவோ இருக்கும்பட்சத்தில் தான் அவர்களுக்கு பிரதிநித்துவம் கிடைக்கிறது. சாதாரண தொண்டராக பயணத்தின் தொடங்கும் ஆண்களுக்கே இங்கே பதவிகள் எட்டாக்கனியாக இருக்கும் போது பெண்களின் நிலைமையை சொல்லவா வேண்டும், அதள பாதாளம் தான். கட்சிக்கு தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் இதனை கவனத்தில் கொண்டால் பெண்கள் கவனிக்கப்படுவார்கள். சாதிகள் மதங்கள் கூட இங்கே கவனிக்கப்படுகின்றன. ஆனால் பாலினம் கவனிக்கபடுவது இல்லை.
உரிமைக்கான குரலை நாம் எழுப்புவதைக்காட்டிலும் பெண்களிடத்தில் இருந்து அந்த உரிமைக்குரல் எழ வேண்டும். எழுமா பெண்களே?