ஸ்விட்சர்லாந்தில் சம உரிமைக்காக பெண்கள் நடத்திய மாபெரும் உரிமை போராட்டம்
ஸ்விட்சர்லாந்தில் சம உரிமைக்காக பெண்கள் நடத்திய மாபெரும் உரிமை போராட்டம்
ஒவ்வொரு நாட்டிலும் பெண்கள் பாகுபாட்டுடன் தான் நடத்தப்படுகிறார்கள். வெகுகாலமாக இது நடந்துகொண்டு இருந்தாலும் சகித்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். சில நேரங்களை தவிர..
சில நாடுகளின் பெயர்களை கேட்டால் நாம் கண்ட, கேட்ட விசயங்களை வைத்துக்கொண்டு அந்நாடு பற்றிய அபிமானத்தை கூறி விடுவோம். அந்த வகையில் ஸ்விட்சர்லாந்து என்றவுடன் மிகவும் அமைதியான, மக்கள் இன்பமாக வாழுகிற அழகான நாடு என்ற அபிமானம் நம் மனதில் எழும். அப்படிப்பட்ட நாட்டின் வீதிகள் ஊதா நிறத்தால் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நிரம்பியிருந்தது. ஆம், பாலின அடிப்படையிலான பேதம் இருக்கக்கூடாது, வேலைக்கு சம ஊதியம், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்ககளை களைதல், ஆணாதிக்கத்தை ஒழித்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஊதா நிறத்திலான ஆடையுடன் பெண்கள் வீதிகளில் களமிறங்கி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள். எங்களது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு, நாங்களும் முக்கியமானவர்கள் தான். அதனை புரிந்துகொள்ளுங்கள் என்ற ரீதியில் அந்த போராட்டம் இருந்தது.
1991 ஆம் ஆண்டு இதே போன்றதொரு போராட்டம் ஸ்விட்சர்லாந்தில் நடந்திருக்கிறது. அப்போது கிட்டத்தட்ட 5 லட்சம் பெண்கள் அலுவலகம் மற்றும் வீடுகளில் எந்தவொரு வேலையையும் செய்யாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது நடந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கக்கூடிய சூழலில் பெண்களுக்கான உரிமைகளைநிறுவிட சட்டங்கள் இருந்தாலும் செயற்பாட்டளவில் பின்தங்கிய நிலையே இருக்கிறது என்பது பெண்களின் குற்றசாட்டு.
முக்கியமாக தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை. ஆண்களை விட பெண்களே உயர்நிலை படிப்புகளில் வெற்றிபெற்றவர்களாக இருக்கின்றனர். ஆனால் ஒரு புள்ளிவிவரத்தின் அடிப்படையில் 93% சதவிகித ஆண்களே CEO போன்ற முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். மகப்பேறு விடுமுறைக்கு பிறகு 7 பெண்களில் ஒரு பெண் வேலை இழக்கிறார், 5 இல் ஒரு பெண்ணுக்கு அலுவலகத்தில் பாலியல் தொந்தரவு ஏற்பட்டு இருக்கிறது என்கிறது புள்ளிவிவரங்கள். தற்போது ஸ்விட்சர்லாந்தில் மட்டுமே இதே நிலைமை இல்லை என்பதும் பல்வேறு நாடுகளின் நிலைமையும் இதுதான் என்பதே உண்மை.
இந்தியாவில் நிலைமை எப்படி?
இந்தியாவில் வேலை செய்திடும் பெண்களுக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும், மகப்பேறு விடுமுறை அளித்திட வேண்டும் என்பது போன்றவற்றை கண்டிப்போடு பின்பற்றுவதற்கான சட்டங்கள் இருக்கின்றன. அரசு அலுவலகங்களை பொறுத்தவரை இவை இரண்டும் எந்தவித பாதிப்பும் இன்றி நடக்கின்றன. ஆனால் தனியார் நிறுவனங்களில் தான் பிரச்சனைஎழுகிறது . வேலை செய்திடும் பெண்கள் தானாக வெளியில் வந்து குற்றத்தை சொல்லாதவரை இதுபோன்ற அநீதிகள் வெளியில் தெரியப்போவது இல்லை.
பெண்கள் சமூகத்தின் ஓர் அங்கம். குழந்தைகள் தான் உலகின் எதிர்காலம். எதிர்காலத்திற்கான குழந்தைகளை வலிமையானவர்களாக தயார் செய்வதில் பெண்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ஆகவே அவர்களுக்காக மகப்பேறு விடுமுறை, பாதுகாப்பு போன்றவற்றை கொடுப்பது என்பது அவர்களுக்கு செய்கின்ற உதவி மட்டுமல்ல, அது எதிர்கால சந்ததிக்காக நாம் செய்கின்ற கடமை. இதனை சட்டங்களினால் மட்டுமே செய்துவிட முடியாது, ஒவ்வொருவரும் நினைத்தால் மட்டுமே செய்துமுடிக்க முடியும்.
இந்த பதிவினை படிக்கின்ற பெண்கள், நீங்கள் இதே போன்றதொரு பாலின பாகுபாட்டை அனுபவித்து இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!