உண்மையான அலசல் – ஆர்கே நகரில் வெல்ல போவது யார்? யார் வென்றால் என்ன நடக்கும் ?
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தொகுதியான ஆர்கே நகரில் இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் களத்தில் நிற்க கூடிய முக்கிய வேட்பாளர்களின் பட்டியலில் பன்னிர்செல்வம் அணி சார்பாக இருக்க கூடிய மதுசூதனன், சசிகலா அணியில் இருந்து நிற்க கூடிய தினகரன், திமுகவின் சார்பில் நிற்கக்கூடிய மருதுகணேஷ் இவர்களுக்கு இடையில் தான் போட்டி நடைபெற இருக்கின்றது. இவர்களை தவிர ஜெயலலிதாவின் மருமகள் என்கிற ஒற்றை தகுதியோடு களத்தில் குத்திருக்கும் தீபாவும் நாம் தமிழர் கட்சி சார்பாகவும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் பாஜகவின் சார்பாகவும் தேமுதிக சார்பாகவும் பல சுயேச்சை வேட்பாளர்களும் களத்திலே நிற்கின்றனர்.
பன்னிர்செல்வம் அணி : மதுசூதனன்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் போட்டியிட்ட போது மாற்று வேட்பாளராக மதுசூதனன் அவர்களை வைத்திருந்தார் என்பதும் அவர் அதிமுகவின் அவை தலைவராகவும் அந்த தொகுதியின் நபராகவும் நிலைநிறுத்தி வாக்குகளை சேகரித்து வருகிறார். ஜெயலலிதா இறந்த மர்மம் இன்னும் விலகாத நிலையில் சசிகலாவிடம் விசாரனை தேவை போன்றவற்றை வைத்து பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்கிறார்.
ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஏன் கேள்விகளை எழுப்பவில்லை, இறந்த பிறகு முதல்வராக பதவியேற்றுக்கொண்ட பன்னிர்செல்வம் அப்போது ஏன் கேள்வி கேட்கவில்லை என்ற கேள்விக்கு இவர்களிடம் சரியான விளக்கம் இல்லாதது சற்று பலவீனமே.
சசிகலா அணி : தினகரன்
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அக்கட்சியின் முழு பொறுப்பும் தினகரன் வசம் வந்துவிட்டது. பெரும்பாலான மக்கள் சசிகலா குடும்பம் ஆட்சியையும் கட்சியையும் பிடித்ததற்கு எதிரான மன நிலையில் இருப்பதை உணர்ந்து கொண்டிருந்தாலும் இந்த இடைத்தேர்தலை விட்டால் தான் MLA ஆகி முதல்வர் ஆவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்த்துக்கொண்டே தினகரன் இந்த போட்டியில் களமிறங்கி உள்ளார். பல்வேறு எதிர்ப்புகள் இருந்தாலும் அதிகார பலத்தையும் வாக்குறுதிகளை நம்பியும் இந்த தேர்தலில் களமிறங்குகிறார்.
இவருக்கு எதிராக சசிகலா குடும்பம் கட்சியையும் ஆட்சியையும் பிடித்தது மற்றும் ஜெயலலிதா மரணத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என்பதை இன்னும் மக்களுக்கு விளக்கமாக புரிய வைக்காமல் இருப்பது.
திமுக : மருது கணேஷ்
திமுகவில் எவ்வளவோ பணம் செலவு செய்யக்கூடியவர்கள் இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் மருதுகணேஷ் போன்ற செலவு செய்யமுடியாத ஒரு சாதாரண ஒருவரை நிறுத்தியிருப்பது என்பது திமுகவின் குறிப்பாக ஸ்டாலினின் ராஜதந்திரமாக அரசியல் பார்வையாளர்கள் பார்க்கின்றனர்.ஒருவேளை மருதுகணேஷ் வென்றால் உங்களை வெல்ல திமுக வின் சாதாரண தொண்டன் போதும் என்று பேசலாம் மேலும் அடிமட்ட தொண்டனுக்கு நமுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்கிற நம்பிக்கையை கொடுக்கலாம். ஒருவேளை தோற்றால், ஆளும் கட்சி தரப்பு தனது முழுப்பலத்தையும் பயன்படுத்தி வென்றுவிட்டது.இதுநடக்கும் என்று தெரிந்ததால் தான் சாதாரண தொண்டனை நிறுத்தினோம் என்று தப்பித்து கொள்வது.
திமுகவும் அதிமுகவும் அந்த தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்துவிடாத நிலையில் இனிமேல் செய்வோம் என்கிற வாக்குறுதியை கொடுத்ததும் அதிமுகவின் ஓட்டுகள் பபிரிந்தால் எளிதில் வெற்றி கிட்டலாம் என்பதும் இவர்களின் நம்பிக்கை.
தீபா :
ஜெயலலிதா அவர்களின் மருமகள் என்கிற தகுதியையும் அவரை போன்ற தோற்றம் தன்னிடம் இருப்பதையும் நம்பி தேர்தலில் களமிறங்குகிறார். கிராமபுறங்களில் சசிகலாவுக்கு எதிராகவும் இவருக்கு ஆதராகவும் குரல் எழுந்ததை மறுக்க முடியாது.
இன்னும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு எதையும் போடாமல் இருப்பதும் தனது கணவரே தனக்கு எதிராக மாறிவிட்ட நிலையிலும் எந்த துணிவில் தேர்தலில் நிற்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
நாம் தமிழர் கட்சி :
கணிசமான இளைஞர்களின் ஆதரவினை பெற்ற கட்சியாக நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் முன்னேறி வருகிறது. இதற்கு பக்கபலமாக திராவிட கட்சிகள் செய்த ஊழல்களும் பெரும் தலைவர்கள் இல்லாத வெற்றிடமும் இருக்கின்றது. ஆனால் இந்த தேர்தலில் இவர்களால் வெற்றி பெற முடியாது. கணிசமான வாக்குகளை பெற்றால் அதுவே இவர்களுக்கு வெற்றிதான்.
பாஜக : கங்கை அமரன்
வடக்கே பல வெற்றிகளை பெற்று மகுடம் சூட்டிக்கொண்டாலும் தமிழகத்தில் பாஜகவினால் கால்தடம் பதிக்கவே முடியாது என்பதே நிதர்சனம். இதற்க்கு முக்கிய காரணமாக பாஜக பிரமுகர்களின் மத உணர்வு பேச்சுக்கள் எவரையும் எளிதில் தேச துரோகிகள் என்று சொல்லும் பாங்கு , சுப்ரமணிய சுவாமி போன்றவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
கங்கை அமரனின் திரைப்பட செல்வாக்கினை பயன்படுத்தி பாஜக இந்த தேர்தலில் களமிறங்குகிறது. இதில் வெற்றி பெறாவிட்டாலும் எத்தனையாவது இடத்தினை பெற முடிகிறது என்பதை பொறுத்தே அந்த கட்சிக்குள் மாற்றம் நிகழும்.
ஜெயிக்கப்போவது யார் ?
ஆர்கே நகர் தொகுதி என்பது பெரிதாக வளர்ச்சி அடையாத தொகுதியாகவும் ஏழை எளிய மக்கள் அதிகமிருக்கும் தொகுதியாகும் இருக்கின்றது. ஜெயலலிதா அவர்களே இந்த தொகுதியை தேர்ந்தெடுத்தார் என்பதால் நிச்சயமாக இது அதிமுகவின் கோட்டையாக இருக்கவே கூடும்.
இப்போதிருக்க கூடிய சூழ்நிலையில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டால் பணம் கொடுத்து ஓட்டுக்களை வாங்க முடியவில்லை. எனவே வாக்குகள் பெரும்பாலும் மாறிவிட வாய்ப்பில்லாத பட்சத்தில் மதுசூதனனுக்கு வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.
திமுக வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது தனது கட்சிக்கு உள்ள வாக்குகளை சிதறவிடாமல் சிறிது வாக்குகளை புதிதாவும் பெற்றால் வெல்லலாம். வெல்லாவிட்டாலும் இரண்டாமிடம் என்பது திமுகவுக்கு தான்.
அமெரிக்காவில் அனைவரின் கணிப்பையும் மீறி டிரம்ப் வெற்றி பெற்றதை போல தினகரன் வென்றால் அவரே அடுத்த முதல்வராவர்.
அவர் வெற்றி பெறாமல் போனால் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏதும் நடக்காது. திமுக வென்றால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மக்கள் இந்த அரசை விரும்பவில்லை என்று பேசிக்கொண்டே இருக்கும். மதுசூதனன் வென்றால் தேர்தல் ஆணையத்தில் மக்கள் எங்களுக்கு ஆதரவு என்பார்கள். தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை எனவே இதே நிலைமை தொடரும்.
நன்றி
பாமரன்