எதை செய்யக்கூடாது என மோடி கற்றுக்கொடுத்தார் | ராகுல் பளீச் பேட்டி
16 வது நாடாளுமன்ற தேர்தல் 2014 இல் நடந்த போது வெறும் 44 இடங்களை மட்டுமே வென்றிருந்தது காங்கிரஸ் கட்சி. முதலிடம் பெற்ற பாஜக பெற்ற இடங்களோ 282. இந்த முடிவுகளை கண்ட பின்னரும், ராகுல் காந்தி போன்ற அனுபவம் இல்லாத அடுத்த தலைமுறை தலைவர்களை மனதில் வைத்தும் இனி பாஜகவை எவராலும் வீழ்த்திட முடியாது என எண்ணியிருந்தனர். ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் வெளியான பின்னர் அது மாறியிருக்கிறது.
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பெற்றுள்ளது காங்கிரஸ். மத்திய பிரதேசத்தில் மாயாவதியின் கூட்டணியுடன் ஆட்சி அமைக்கப்போகிறது. மிசோரம் மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் வென்றுள்ளன.
எதை செய்யக்கூடாது என மோடி கற்றுக்கொடுத்தார்
நீண்ட காலத்திற்கு பிறகு காங்கிரஸ் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இந்த வெற்றிக்கு பின்னர் ராகுல் பேசிய வார்த்தைகள் முக்கியமானவை,
நான் எனது அம்மாவிடம் சொன்னேன் “2014 தேர்தல் தோல்வி எனக்கு அதிக படிப்பினையை தந்தது. அதில் அதிகமாக கற்றுக்கொண்டேன். பணிவு தான் மிக முக்கியமானது என்பதனை உணர்ந்து கொண்டேன்” என்றார்.
மேலும் “எதை செய்யக்கூடாது என்பதனை மோடி எனக்கு சொல்லிக்கொடுத்துவிட்டார், அவர் மிகப்பெரிய வாய்ப்பினை எனக்கு தந்துள்ளார். நாட்டின் அடிமட்டத்திலிருந்து வரக்கூடிய குரலை அவர் கேட்க மறுத்துவிட்டார்” என கூறினார்.
காலம் தான் ஒரு தலைவரை உருவாக்குகிறது
ராகுல் ஒரு பாரம்பரியமான பரிச்சயமான குடும்ப பின்னணியில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இல்லாத போதுதான் அதன் தலைமை பொறுப்பிற்கு வந்தார்.
மோடி , அமித்ஷா போன்ற அனுபவசாலிகள் எதிர்த்து நிற்கும் போது மறுபக்கம் ராகுல் காந்தி ஒன்றுமேயில்லை என்பது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மற்றவர்களின் அனுபவத்தைவிட ராகுலின் அனுபவம் குறைவுதான். ஆனாலும் அதனை பயன்படுத்திக்கொள்ள பாஜக தவறிவிட்டது.
அதிகப்பெரும்பான்மை , அனுபவம் வாய்ந்த ஆட்கள் , எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மை , தொடர் வெற்றி போன்ற பல காரணங்களினால் ஒருவித அலட்சியத்துடனும் ஆதிக்க மனப்பான்மையுடனும் நடந்துகொண்டது பாஜக என்பதே உண்மை .
பண மதிப்பிழப்பு , GST வரி விதிப்பு போன்றவை சிறுதொழில்கள் முதல் மிகப்பெரிய நிறுவனங்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்தியது. சிலை நிறுவுதல் , பசு பாதுகாப்பு , இந்துமத செயல்பாடு போன்றவையும் தாக்கத்தை ஏற்படுத்தின .
நிறைவேறாத வாக்குறுதிகள்
2014 தேர்தலில் வெளிநாட்டு பணத்தினை கொண்டுவருவது, வேலைவாய்ப்பினை உருவாக்குவது உள்ளிட்ட பல அதிரடியான , மக்களை கவரும்படியான வாக்குறுதிகளை கொடுத்துதான் வெற்றிபெற்றனர் . ஆனால் இதுவரை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான ஒரு அறிகுறியும் தெரியவில்லை . இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது .
எந்தவொரு தலைவரும் பிறக்கும்போதே தலைவராக பிறப்பது இல்லை . எதிரில் நிற்பவர்களும் சூழ்நிலையுமே தலைவராக சிலரை உருவாக்கிவிடுகிறது . ராகுல்காந்தி சொன்னதைப்போலவே “மோடி” செய்ய தவறிய மற்றும் தவறாக கையாண்ட விசயங்கள் தான் ராகுலை தலைவராக ஆக்கியுள்ளது .
ஊழலற்ற, அனைவருக்குமானஆட்சியை கொடுத்தால் உங்களுக்கான வெற்றி நீடித்திருக்கும். மக்கள் அறிவாளிகள், பாடம் கற்பிப்பார்கள் என்பதனை புரிந்துகொண்டு நடந்திடுங்கள்
வெற்றிகள் தொடரட்டும் .
பாமரன் கருத்து