பாமகவும் நிழல் பட்ஜெட்டும் | சிறப்பு | PMK shadow budget

 


 

பாமக கட்சி பற்றிய உங்களது பார்வை என்ன என தமிழக மக்களிடத்தில் கேட்டால் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருப்பது ஒன்று தான் “அது வன்னியர்களுக்கான சாதிக்கட்சி” என்பதுதான். பாமகவின் ஆரம்பகால செயல்பாடுகள் இதற்க்கு காரணமாக இருந்தாலும் , இவ்வளவு தான் பாமக கட்சியா என்றால் நிச்சயமாக இல்லை என்பதே என்னுடைய கருத்தாக இருக்கும்.

 

தமிழக அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி ஏதேனும் ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால் அது குறித்த தன்னுடைய ஆதரவையோ எதிர்ப்பையோ பதிவிடும் வெகுசில  அரசியல்வாதிகளில் முதன்மையானவர் திரு ராமதாஸ் அவர்கள். வெறுமனே கருத்துக்களை மட்டுமே கூறிக்கொண்டு இருக்காமல் மிக மிக துல்லியமான தகவல்களோடு தீர்வினையும் அரசுக்கு பரிந்துரைப்பது இவரின் சிறப்பு.

 

 

 

 

பாமகவின் செயல்பாடுகளில் சிறந்தவையாக நான் காண்பது “நிழல் நிதிநிலை அறிக்கை“.

 


 

நிழல் நிதிநிலை அறிக்கை 

 

 

ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை மற்றும் வரும் ஆண்டிற்கான பட்ஜெட் ஆகியவற்றை மாநில அரசு சட்டமன்றத்திலும் இந்திய நடுவண் அரசு பாராளுமன்றத்திலும் சமர்ப்பிப்பது வழக்கம். இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்காக நிதியமைச்சகம் மிக தீவிரமாக பணியாற்றுவது வழக்கமான ஒன்று.

 

மிகப்பெரிய கட்சிகளாக அறியப்படுகிற திமுக மற்றும் அதிமுக ஒருபோதும் இதனை செய்ததில்லை. மிகச்சிறிய கட்சியாக இருந்தாலும் தன்னுடைய செயல்திட்டங்களை, தான் ஆட்சி அமைத்திருந்தால் செய்திருக்கக்கூடியவைகளை உண்மையான வருவாய் மற்றும் செலவின கணக்குகளோடு ஒப்பிட்டு மிகத்தெளிவான நிழல் பட்ஜெட் ஒன்றினை ஆண்டுதோறும் வெளியிடுவது என்பது உண்மையாலுமே பாராட்டத்தக்க செயல்.

 

 

2003-04ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக பாமகவின் சார்பில் நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படுகிறது. இதில் தமிழகத்துக்கு என்னென்ன நலத்திட்டங்கள் தேவை, அதற்கு எவ்வளவு செலவாகும், திட்டத்தால் எவ்வகையில் மக்கள் பயனடைவார்கள், பிரச்னைகளுக்கு அதன் தீர்வுகளும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கியிருக்கும்.

 


 

வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை

 

 

கடந்த 2008 ஆம் ஆண்டுமுதல் வேளாண்மைத்துறைக்கும் நிழல் நிதிநிலை அறிக்கையினை தனியாக சமர்ப்பிக்க துவங்கியிருக்கிறது பாமக. அதன்படி 2018 – 2019 ஆம் ஆண்டிற்க்கான பாட்டாளி மக்கள் கட்சியின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் 2016 – 2017 ஆம் ஆண்டு வறட்சியின் காரணமாக 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். இதனால்  2017 – 2018 ஆண்டை உழவர்கள் தற்கொலை இல்லாத ஆண்டாக மாற்றுவதற்குரிய செயல்திட்டங்களுடன் வெளியிடப்பட்டது. அதே நோக்கத்தில் 2018 – 2019 ஆம் ஆண்டிற்க்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

வேளாண்மைக்கான அனைத்து இடுபொருள்களையும் வேளாண்மை மூலதன மானியம் மூலமாக இலவசமாக வழங்குதல் தொடங்கி, வேளாண் பொருள்களுக்கு நியாயமான விலை வழங்குதல், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும்போது அதனால் விவசாயிகள் இழப்பினை சந்திக்காத வண்ணம் பயிர்க்காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி இழப்பீடு வழங்குதல் என நீள்கிறது.

 


 

இந்தப்பதிவின் நோக்கம் 

 

இந்த பதிவினை படித்தவுடன் பாமரன் கருத்து பாட்டாளி மக்கள் கட்சியின் பக்கம் சாய்ந்துவிட்டதாக முடிவெடுத்துவிட கூடாது. அப்படி அல்ல, இந்த பதிவு எழுதப்பட்டதன் முக்கிய நோக்கம் “இந்தியாவில் இருக்கக்கூடிய கட்சிகளில் எந்த கட்சியும் செய்யாத ஒரு நல்ல முயற்சியை பாமக செய்து வருவதனை நம் தலைமுறை அறிந்துகொள்ளவேண்டும், மற்ற அரசியல் கட்சியினரும் இதேபோன்றதொரு நிழல் பட்ஜெட்டை தங்களது கொள்கைகளுக்கு ஏற்ப வடிவமைத்து மக்களின் முன்னால் வைக்க வேண்டும். அதனை வாக்காளர்கள் படித்து எவர் நல்ல திட்டங்களை முன்னெடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்”.

 


பாமரன் கருத்து

 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *