மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் தேர்வு எப்படி இருக்கு? | MNM Candidate list
சினிமாவில் முன்னனி நடிகராக இருந்து வந்த திரு கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மையம் என்கிற கட்சியை துவங்கினார். தொடங்கிய காலம் முதல் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுவருகிற கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் சந்திக்கபோகிற முதல் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறப்போகிற பாராளுமன்ற தேர்தல். இந்த சூழலில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிடுகின்ற முதற்கட்ட வேட்பாளர்களின் பெயர்களை திரு கமல்ஹாசன் அறிவித்து இருக்கிறார்.
கமல்ஹாசனின் வேட்பாளர்கள் தேர்வு எப்படி இருக்கிறது?
வெற்றி வாய்ப்பினை அவருக்கு பெற்றுத்தருமா? என்பதனைதான் பார்க்க இருக்கிறோம்.
படித்த வேட்பாளர்கள்
பல சமயங்களில் நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த நபர்களின் செயல்பாடுகள் நமக்கே அசிங்கமாய் இருக்கும். என்ன இவர் கொஞ்சம் கூட அறிவோடு பேச, சிந்திக்க மாட்டேன் என்கிறாரே என எண்ணுவோம். நல்ல பொறுப்பில் இருக்கும் இவர் என்னென்னவோ செய்திருக்கலாமே என சிந்திப்போம். அதற்க்கு தீர்வாய் நாம் அடிக்கடி உச்சரிப்பது “இதுக்குதான் படிச்சவன் வரணும்னு சொல்றது” என்பதை தான்.
இதுக்குத்தான்யா படிச்சவன் ஆளனும்னு சொல்றது
கமல்ஹாசனும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தில் இருப்போரும் நிச்சயமாக இந்த உச்சரிப்பை, முணுமுணுப்பை கேட்டிருப்பார்கள் என்றே அறிகிறேன். ஆகையினால் தான் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தின் சார்பாக போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவருமே குறைந்தபட்சம் ஒரு பட்டம் பெற்றவர்கள் என கூறப்படுகிறது. நாம் வேட்பாளர்களின் பட்டியலை பார்த்தபோதும் பெரும்பாலானவர்களின் பெயர்களின் பின்னால் அவர்களின் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.
பெரும்பாலான இளைஞர்கள் கமல்ஹாசனின் இந்த முன்னெடுப்பை வரவேற்று இருக்கிறார்கள்.
கல்வியறிவு, அனுபவ அறிவு இரண்டும் கொண்டவர்களை வேட்பாளர்கள் பட்டியலில் இணைத்தவிதம் நிச்சயமாக பாராட்டுதலுக்கு உரியது, ஆனால் கல்வியை மட்டுமே பிரதானமாக கொள்வது ஏற்புடையது அல்ல.
கல்வியை தகுதியாக கொள்ளலாமா?
அரசியல் என்பதற்கு படிப்பறிவு மட்டும் போதாது, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட எவரும் அரசியல்வாதியாக, வேட்பாளராக இருக்க தகுதி வாய்ந்தவர் தான். இதனை நாம் கமல்ஹாசனுக்கு சொல்லவேண்டியது இல்லை, அவரே அறிவார். பெரும்பாலான மக்களின் எண்ணம் “படித்தவர்களாக தேர்தலில் நிற்க வேண்டும்” என்பதாக இருக்கலாம், ஆனால் அவர்கள் நினைக்கிறார்கள் என்பதற்காகவே சரியானதாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லையே.
கற்றோர் இருப்பது சிறப்பு, அதனினும் சிறப்பு நல்லோர் இருப்பது
படிப்பு என்றுமே அரசியலுக்கு ஒரு தகுதியாக பார்க்கப்படக்கூடாது என்பது அரசியல்சாசனம் எழுதியவர்கள் உட்பட அனைவரின் நிலைப்பாடு. கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் படிப்பினை கருத்தில் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை என்றால் இந்த பதிவினை நீங்கள் நிராகரித்து விடலாம்.
மக்களின் துயரறிந்த , நேர்மையான , மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என உத்வேகமுள்ள எவரும் மக்கள் பணி ஆற்றிட தகுதி உள்ளவர்கள் என்பதனை மக்கள் நீதி மையம் உணரவேண்டும். அடுத்தகட்ட வேட்பாளர்களின் தேர்வில் அது எதிரொளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். மக்கள் நீதி மையம் கல்வித்தகுதியை கருத்தில் கொள்ளவில்லை எனில் அதனை கமல்ஹாசன் தெளிவுபடுத்திட வேண்டும் என்பதே எமது ஆவல்.
தவறான முன்னுதாரணங்களை தவிர்ப்பது நல்லது