இரண்டு கால் நாய்! – குட்டிக்கதை

அதிகாலை 6 மணி, அங்கே நடப்பவர்கள் இந்த குறிப்பிட்ட வயதைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாதபடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். வாடிக்கையாக வருகிறவர்கள் காலை வணக்கத்தை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு இன்று பார் நான் உன்னை முந்திக்கொண்டு நடக்க போகிறேன் என மனதுக்குள் சொல்லிக்கொண்டு போட்டி போட்டுகொண்டு நடப்பார்கள். அதிகாலைப்பொழுதை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக செலவு செய்கிற ஒரு கூட்டம் நடந்துகொண்டிருக்க அங்கு இன்னொரு கூட்டமும் அதிகாலை 6 மணிக்கெல்லாம் வந்துவிடும். நடப்பவர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்கிற அவசியம் இல்லை ஆனால் இவர்கள் வந்துதான் ஆகவேண்டும்.

ஆமாம், அந்தப் பூங்காவிற்கு அருகே இனி ஒன்றையும் நான் ஏற்கப்போவதில்லை நான் ஏற்கனவே நிரம்பி விட்டேன் வேண்டுமானால் பாருங்கள் என அதிகாலை வருகிறவர்களுக்கு சொல்வதைப்போல ஆளுயர குப்பை தொட்டி நிரம்பி வழிந்தது. குப்பை தொட்டியில் இதுதான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமையால் புதுப்புது கழிவுகள் குப்பைத்தொட்டியில் இருந்துகொண்டு தான் இருக்கும். மூன்று நாள் வீட்டு குப்பைத்தொட்டியில் எடுக்கப்படாமல் குப்பைத்தொட்டியில் போடப்பட்ட கொஞ்சம் மீதம் இருக்கும் பிரியாணி பொட்டலங்கள் குப்பை தொட்டி இங்கு தான் இருக்கிறது என்று புதிதாக அங்கு வருகிறவர்களுக்கு சொல்லும் அளவுக்கு நாற்றமெடுக்கும். இன்னும் இதுபோன்ற பல்வேறு விசயங்களை தன்னகத்தே கொண்டு பொருமிக்கொண்டு நிற்கும் அந்த குப்பைத்தொட்டி.

 

நோய் கிருமிகள் தாக்கக்கூடாது என்பதற்காக வாயில் கையில் உறைகள் போட்டுகொண்டு தான் பணியாற்ற வேண்டும் என செய்திகளில் வந்தாலும் கூட அப்படியேதும் இல்லாமல் ஒரு பச்சை நிற தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு ராமாயி, கண்ணம்மா, கவிதா மூவரும் வந்தார்கள். கைக்கு ஒரு வெளக்கமாறு என மூவரும் குப்பைத்தொட்டியை அடித்து விரட்டுவது போல வந்தார்கள். நீ இதை செய் நான் இதை செய்கிறேன் என எந்தவித உத்தரவையும் தங்களுக்குள் போட்டுக்கொள்ளாமல் வேலையை துவங்கிவிட்டார்கள். முதலில் அவர்களின் இலக்கு குப்பைத்தொட்டிக்கு வெளியே கொட்டிக்கிடக்கும் குப்பைகள் தான். மூவரும் தங்களது கைகளில் இருக்கும் வெளக்கமாறுகளை சுழற்ற ஆரம்பித்தார்கள். அவ்வழியாக போகிறவர்கள் நாற்றத்தை தாங்க முடியாமல் கடந்து போக நேற்று தங்களது வீடுகளில் நடந்த கதைகளை பேசிக்கொண்டு வேலையை மூவரும் ஆரம்பித்தார்கள். அந்த நாத்தத்தில் அவர்களுக்கு கதை பேச தோன்றுவதில்லை என்றாலும் கூட அந்த கதைகள் நாத்தத்தை தாங்கிக்கொள்ள சக்தியை தரும் என ராமாயி அடிக்கடி சொல்வது உண்டு.

 

அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் இரண்டு மூன்று சாப்பாட்டு பொட்டலங்களை குப்பைதொட்டிக்குள் போட்டார். அப்போது கண்ணம்மா “என்ன வாத்தியாரே நைட்டு நல்ல சாப்பாடு போல” என கிண்டலடிக்கும் தொனியில் பேசினாள். இந்தக்கிண்டல் அன்று மட்டுமல்ல தினமும் வாடிக்கையாக நடக்கும் ஒன்றுதான் என்றாலும் கூட கண்ணம்மா அப்படி சொல்லாமல் விடுவதில்லை. குப்பையை போட்டுவிட்டு வண்டிக்கு அருகே அவரும் அமர்ந்துகொண்டார். இன்னும் கொஞ்ச நேரத்தில் வரப்போகும் டீக்காரரிடம் மூவரும் டீ சாப்பிடுவார்கள். அப்போது இவருக்கும் ஒரு டீ வாங்கிக்கொடுப்பார்கள் அதற்காகத்தான் அவர் வண்டிக்கு அருகே அமர்ந்துகொண்டார். அந்தக்குப்பை தொட்டியில் என்ன இருக்கிறது யார் யார் வந்து குப்பை போட்டார்கள் என்பது அந்த ஒருவருக்கே தெரியும். நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பவர்கள் இந்த நால்வரையும் ஒதுக்கிக்கொண்டு நடந்துபோனார்கள்.

 

கண்ணம்மா வடக்கு புறம் கூட்ட ஆரம்பித்தாள். “ச்ச இந்த நாய் பண்ணைகளுக்கு ஒரு சாவு வர மாட்டுது, எங்க வந்து ஒன்னுக்கு அடிக்கணும்னு வெவஸ்த இல்ல பாரு, நாத்தம் கொடல பொரட்டுது” என பொருமிக்கொண்டு இடது கையால் குப்பைகளை ஒவ்வொன்றாக எடுத்தாள். எப்போதாவது சுற்றித்திரியும் நாய்கள் குப்பை தொட்டியில் சிறுநீர் மற்றும் மலத்தை கழித்துவிட்டு போய்விடும். குப்பைகளைக்கூட மனதை சகித்துக்கொண்டு அள்ளிவிடும் குப்பை அகற்றும் பணியாளர்களுக்கு இதுபோன்ற உபாதைகளை அகற்றுவது தான் குமட்டலை உண்டாக்கிவிடும். கண்ணம்மா திட்டுவதும் அதனால் தான் மூத்திர நாத்தம் அவளுக்கு குடலை புரட்டிக்கொண்டு வந்தது.

 

அருகே டீ க்காக காத்திருந்த வாத்தியார் “ஹா ஹா ஹா ஹா அது நாலுகால் நாய் இல்ல ரெண்டுகால் நாய் அதோ போகுது பாரு அந்த ரெண்டு காலு நாய்” என யாரையோ காண்பித்து சிரித்தார். காலைலயே சிரிப்ப பாரு போயி அங்குட்டு உக்காரு வாத்தியாரே டீ வந்தோடன வரலாம் என கண்ணம்மா வாத்தியாரின் வார்த்தைகளை கவனிக்காமல் சொன்னாள். ஆனால் வாத்தியார் சொன்னதை கேட்டு அவர்களை தாண்டி நடந்த வெள்ளைப்பனியன் போட்ட ஆள் மட்டும் திரும்பி திரும்பி இவர்களை பார்த்துக்கொண்டு நடந்தார். வாத்தியாருக்கும் அந்த வெள்ளைப்பனியன் போட்ட ஆளுக்கும் அப்போது காற்றின் வழியாக ஒரு உரையாடல் நடந்தது. அது அவர்களுக்கு மட்டுமே கேட்டது.

 

வாத்தியார் : அடேய் நீ தானே நேற்று உன் நண்பர்களுடன் பூங்கா அருகே மது அருந்திக்கொண்டு இருந்தாய்

 

வெள்ளை பனியன் : ஆமாம், ஏன் குடிக்க கூடாதா?

 

வாத்தியார் : நல்ல குடி மகாராசா, கண்ணம்மா சொல்றாளே நாய் ஏதோ இங்கே மூத்திரம் போய்விட்டதுனு

 

வெள்ளை பனியன் : எனக்கென தெரியும், எதாவது தெருவுல திரியிற நாய் போயிருக்கும்

 

வாத்தியார் : அடேய் மூடா, நீ தானே நேத்து வீட்டுக்கு கெளம்பும் போது வண்டிய இங்க நிறுத்திவிட்டு மூத்திரம் போனாய். நியாபகம் இல்லையா?

 

வெள்ளை பனியன் : நான் எங்கயோ போவேன், உனக்கென்ன உன் வீட்டு குப்பை தொட்டியா இது? பிச்சைக்காரன் நீ என்னை கேள்வி கேக்குறியா?

 

வாத்தியார் : ரெண்டாயிரம் ரூபா பாக்கெட்டில் விளையாடும் உன்னப்போயி நான் கேள்வி கேக்க முடியுமா?

 

வெள்ளை பனியன் : அப்பறம் என்ன பேசாம போ

 

வாத்தியார் : போறேன் போறேன், கண்ணம்மா கிட்ட அந்த ஆளுதான் நேத்து இங்க மூத்திரம் போனான்னு சொல்லுவேன். அவ நம்புறாளோ இல்லையோ ஆனால் அவ ஒரு மனுஷன் மூத்திரம் போனதை அல்லுறோமேன்னு மனசு கஷ்டப்படுவா? நாயிதான் மூத்திரம் போச்சுன்னா அவளுக்கு பெருசா தெரியாது. அதுனால சொல்லாம இருக்கேன் .

 

வெள்ளை பனியன் : நாம செஞ்சது தப்புதான் ஆனால் ஒரு பிச்சைக்காரன் கிட்டயா நாம தோக்குறது….தொண்டையை தேற்றிக்கொண்டு சொன்னா சொல்லு எனக்கொண்ணும் பயமில்லை

 

இப்படி வேறு எவருக்கும் கேட்காமல் விவாதம் ஒன்று நடந்துகொண்டு இருந்தது. அப்போது ஒரு அந்த தெருவில் சுற்றித்திரியும் நாயொன்று குப்பை தொட்டி அருகே வந்தது. இந்த நாய் தான் மூத்திரம் போயிருக்கணும் என சொல்லி கையில் இருந்த வெளக்கமாறை நாயை நோக்கி எறிந்தாள் கண்ணம்மா. அந்த வெளக்கமாறு நாய் மீது படாமல் அதன் அருகே விழுந்தது. அதிலிருந்து பறந்து போன வெளக்கமாரில் இருந்த ஒரு குச்சி வாத்தியாருடன் விவாதம் செய்துகொண்டிருந்த வெள்ளை பனியன் மீது விழுந்தது. கண்ணம்மா அதை கவனிக்கவில்லை ஆனால் வெள்ளைப்பனியனுக்கு கண்ணம்மா சொல்லிய வார்த்தைகளும் குச்சி விழுந்ததும் தெரிந்தது. எதிர்த்து கேட்கலாம் என தோன்றியது ஆனால் யாரும் அதை கவனிக்கவில்லை அதனால் விட்டுவிடலாம் என நடைப்பயிற்சியை தொடர்ந்தார் வெள்ளை பனியன்.

 

சிறிது தூரம் நடந்ததும், ஒன்றும் செய்யாத நாய் மீது வெளக்கமாறு படாமல் தவறு செய்த உன் மீது விழுந்தது சரியென பட்டது. பிறர் பார்க்காவிட்டாலும் கூட தான் கண்ணம்மாவை கேள்வி கேட்காமல் போனதற்கு காரணம் மனதில் தோன்றிய அந்த எண்ணம் தான் என மனதில் தோன்றியது.

 

நாய் யாரென்பது கால்களின் எண்ணிக்கையை பொறுத்தது அல்ல அது அவர்கள் செய்கிற செயல்களை பொறுத்தது. 


Get updates via WhatsApp





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “இரண்டு கால் நாய்! – குட்டிக்கதை

  • February 16, 2020 at 8:19 pm
    Permalink

    .

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *