80/20 பரேட்டோ கொள்கையை வெற்றி பெற பயன்படுத்துவது எப்படி?
பாதை தெரியாமல் பயணம் துவங்கினால் அதிர்ஷ்டம் இருந்தால் சிகரத்தை ஒருவேளை அடையலாம். ஆனால் பாதை தெரிந்து பயணம் துவங்கினால் எத்தனை தடைகள் வந்தாலும் நிச்சயமாக சிகரத்தை அடையலாம்.
“காலை எழுந்தவுடன் தவளை” என்ற புத்தகத்தை பிரையன் டிரேசி எழுதி இருக்கிறார். அதனை தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்த்து உள்ளார். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைப்போர் தங்களுக்கு வழிகாட்டக்கூடிய, உத்வேகம் அளிக்கக்கூடிய புத்தகம் ஏதாவது படித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தால் இந்தப்புத்தகத்தை படிக்கலாம். அந்தப்புத்தகத்தை வாசிக்கும் போது தான் அதிலே 80/20 என்ற பரேட்டோ கொள்கையை மையப்படுத்தி ஒரு கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. நம்முடைய வாசகர்களுக்கு அது பயன்தரும் என்ற நோக்கிலே தான் அதுகுறித்து இங்கே சில கருத்துக்களை சொல்லப்போகிறேன்.
பரேட்டோ கொள்கை
இது அறிவியல் கொள்கையெல்லாம் அல்ல. ஆகவே நீங்கள் பயமின்றி இக்கொள்கை பற்றி தெரிந்துகொள்ளலாம். இத்தாலிய பொருளாதார வல்லுநர் வில்ப்ரெடோ பரேட்டோ இவ்விதியைப் பற்றி முதன் முதலாக எழுதியதால் அவரது பெயரால் இவ்விதி அழைக்கப்படுகிறது. தன்னுடைய வாழ்வில் சில விசயங்களை கவனிக்கும் போது அவை அனைத்தும் 80/20 என்ற அளவில் பிரிந்திருப்பதைக் கண்டார். உதாரணத்திற்கு, தன்னுடைய சமூகத்தில் மக்கள் 80/20 என்ற அளவில் பிரித்துப்பார்க்கப்பட்டதாக அவர் கூறினார். அதன்படி, பணத்தையும் செல்வாக்கையும் பொறுத்தவரை “முக்கியமான சிலர்” என்ற பிரிவில் 20% பேரும் “முக்கியமில்லாத பலர்” என்ற பிரிவில் 80% பேரும் இருந்ததாகவும் பரேட்டோ கூறினார்.
இதனை உணர்ந்துகொண்ட இவர் இன்னும் பல விசயங்களுடன் 80/20 என்ற விதியை பொருத்திப்பார்க்க ஆரம்பித்ததில் பல பொருளாதாரம் சார்ந்த விசயங்கள் அனைத்தும் இவ்விதியை ஒட்டி இருப்பதை அவர் கண்டார். உதராணத்திற்கு, ஒருவரது 20% நடவெடிக்கைகள் தான் அவருடைய 80% விளைவுகளை தீர்மானிக்கின்றன. ஒரு நிறுவனத்தினுடைய 20% வாடிக்கையாளர்கள் தான் 80% விற்பனைக்கு காரணமாக இருக்கிறார்கள். ஒருவருக்கு இருக்கும் 10 வேலைகளில் 2 வேலைகள் தான் முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளாக இருக்கும் என இந்தப்பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
80/20 பரேட்டோ கொள்கையை வெற்றி பெற பயன்படுத்துவது எப்படி?
நாம் மேலே பார்த்த பரேட்டோ கொள்கையின்படி நமக்கு இருக்கும் வேலைகளில் 20% வேலைகள் தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வேலைகள் மற்ற வேலைகளைக்காட்டிலும் நிச்சயமாக சுலபமானதாக இருக்கப்போவது கிடையாது. ஆகவே பலரும் செய்யக்கூடிய பொதுவான விசயம் என்னவெனில் முக்கியத்துவம் குறைவான 80% வேலைகளை செய்யத்துவங்கி முக்கியமான 20% வேலைகளை செய்யாமல் தள்ளிப்போடுவது தான். இதனால் ஒருவர் வேலை செய்துகொண்டே இருப்பது போல தோன்றினாலும் கூட அதற்கான பலனை அனுபவிக்க முடியாமல் போகிறது. ஒருவர் இப்படி தொடர்ச்சியாக முக்கியத்துவம் இல்லாத இலகுவான வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை செய்யத்துவங்கினால் தன்னை அறியாமல் சிரமமான வேலைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் பழக்கத்திற்கு அடிமைபட்டுப்போக வாய்ப்பு உண்டு.
இதற்கு மாற்றாக நீங்கள் கடினமான, முக்கியத்துவம் வாய்ந்த 20% வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை செய்யத்துவங்கினால் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் கூட அந்த வேலைகளை நீங்கள் செய்து முடிக்கும் போது உங்களுக்கு உள்ளாக ஒரு உத்வேகம் பிறக்கும். அப்படி கிடைக்கும் உத்வேகத்தை சரியாக பயன்படுத்தினால் இலகுவான 80% வேலைகளை இன்னும் சுலபமாக உங்களால் செய்து முடிக்க முடியும்.
வெற்றி என்பது பரம ரகசியம் என பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் வெற்றி என்பது மிகவும் சுலபமாக அடையக்கூடியது தான், சில வழிமுறைகளை சரியாக பயன்படுத்தினால்.
20% கடினமான வேலைகளை முதலில் எடுத்து செயல்படும் சிலரில் சிலர் ஆரம்பத்தில் சோர்வடைந்து விடுகிறார்கள். இது பெரும்பாலானவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை தான். இதிலிருந்து நீங்கள் விடுபட்டு வேகமாக வேலைகளை செய்துமுடிக்க உங்களை நீங்களே தயார்படுத்திக்கொள்ளுதல் அவசியமானது. உங்களைப்பற்றிய பெருமிதம் உங்களது மனதில் உள்ளவரை சோர்வு என்பது உங்களை அண்டாது. கடினமான வேலையை செய்யத்துவங்கும் முன் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். உங்களால் மட்டுமே அந்த கடினமான வேலையை செய்ய முடியும் எனவும் அதற்காகவே உங்களுக்கு அந்த வேலை கிடைத்திருப்பதை போலவும் நம்புங்கள். பிறகென்ன, நீங்கள் நிச்சயமாக செய்து முடிப்பீர்கள்.
உங்களை உத்வேகப்படுத்தி வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் பல பதிவுகளை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.