கல்வித்தரம் உயர்த்தப்பட வேண்டாமா? எப்போது விழித்துக்கொள்ளப்போகிறோம்?

 


 

பள்ளி மற்றும் உயர்கல்விகளில் சேர்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டு வருவதனால், நாம் கல்வி வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தினை அடைந்துவருகிறோம் என ஒவ்வொரு மாநில அரசும், இந்திய அரசும் பெருமை அடித்துக்கொள்வதனை நாம் பார்க்கிறோம். பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, உயர்கல்வி முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது அதனை மறுப்பதற்கு இல்லை. ஆனால் ஒவ்வொரு வகுப்பினை கடக்கும் மாணவரும், படித்து பட்டம் வாங்கிய பட்டதாரிகளும் அதற்கு உரிய தகுதியுடன் இருக்கிறார்களா என்பது தான் மிக முக்கிய கேள்வி.

 

நாம் நிறைவான தகுதியுடன் இருக்கிறோமா என நம்மையே கேட்டுக்கொள்வோம்

 

இதற்கு “இல்லை’ அல்லது “போதவில்லை” என்பதே சரியான பதிலாக இருக்கும். பள்ளிக்கல்வி முதற்கொண்டு பட்டப்படிப்பு வரை இருக்கின்ற கல்வித்தரம் மிக மிக குறைவாக இருப்பதும், மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்திட உதவிட வேண்டிய பொறுப்புமிக்க ஆசியர்களின் பங்களிப்பு, அரசின் முற்போக்கு திட்டங்கள், கட்டமைப்பு போன்றவை குறைவாக இருப்பதும் மிக முக்கிய காரணங்களாக நாம் பார்க்கிறோம்.


 

உலக வங்கியின் அறிக்கை

 

தமிழக பள்ளி மாணவர்கள்
தமிழக பள்ளி மாணவர்கள்

 

கல்வி மீதான வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான கற்றல்-உலக மேம்பாட்டு அறிக்கை 2018 என்ற தலைப்பில் உலக வங்கி ஓர் அறிக்கையினை வெளியிட்டது. இதற்காக 12 நாடுகளில் இருக்கும் 2 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களின் திறன்கள் ஒப்பிடப்பட்டன. இதில் இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் தொடக்க நிலை கல்வி மற்றும் மேல்நிலை கல்வி இரண்டுமே பின்தங்கி இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த தகவல்கள்,

>> இந்தியாவில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவனால் இரண்டு இலக்க எண் கொண்ட கழித்தல் கணக்கை கூட செய்ய முடியவில்லை.

>> கிராமப்புறங்களில் இந்த நிலை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு 3-ம் வகுப்பு படிக்கும் மூன்றில் ஒரு பங்கு மாணவர்களுக்கு, இரண்டு இலக்க கழித்தல் கணக்கை சரிவர செய்ய முடியவில்லை.

>> குறிப்பாக 2-ம் வகுப்பு மாணவர்களின் கணித பாட பலவீன பட்டியலில் உள்ள 7 நாடுகளில் இந்தியாவுக்கு முதலாவது இடம் கிடைத்து இருக்கிறது.

>>பள்ளிக்கூடங்களில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகியும், பல லட்சம் மாணவர்களுக்கு சரிவர எழுத, படிக்க தெரியவில்லை. குறிப்பாக அடிப்படை கணிதத்தில் மிகவும் பலவீனமாக உள்ளனர்.

>>கிராமப்புற இந்தியாவில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால், அவனால் 2-ம் வகுப்பு பாடத்தை மட்டுமே நன்கு வாசிக்கவோ, எழுதவோ தெரிகிறது. அதுவும் எளிமையான வார்த்தைகள் என்றால்தான் சுலபமாக படிக்கிறான்.

>>ஆந்திர மாநில கிராமப்புற மாணவர்களின் கல்வி நிலை மிகுந்த அதிர்ச்சி தருவதாக உள்ளது. அங்கு 5-ம் வகுப்பு படிக்கும் மாணவனால் ஒன்றாம் வகுப்பு பாடத்தில் உள்ள கேள்விகளுக்கு கூட சரிவர பதில் அளிக்க தெரியவில்லை.

இதுபற்றி உலக வங்கி குழு தலைவர் ஜிம் யோங் கிம் கூறுகையில், இந்தியாவில் கல்வித்தரம் மோசமாக உள்ளதாக வருங்காலத்தில் இந்தியாவில் பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியன பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகலாம் என கவலை தெரிவித்துள்ளார்.


நமக்கே தெரியும் நமது கல்வித்தரம்

 

நமது கல்வித்தரம் குறைவாக இருக்கிறது என்று சொல்லுவது நம்மை நாமே இழிவுபடித்துக்கொள்வதற்காக அல்ல. அதன் குறைகளை கடந்து முன்னேறுவதற்காகத்தான். என்னுடைய சுய அனுபவத்தில் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்த பல மாணவ மாணவிகளுக்கு அவர்களது பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதக்கூட தெரியவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த குறைபாடு கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகளில் இன்றும் அரங்கேறுகிறது.

 

தமிழக பள்ளி மாணவிகள்
தமிழக பள்ளி மாணவிகள்

 

ஆரம்ப கல்வியின் நிலைமைதான் இப்படியென்றால் பட்டப்படிப்பின் நிலைமையோ இதனை விட மோசம். உதாரணத்திற்கு பொறியியல் துறையில் தேர்ச்சி அடைந்த பல மாணவர்களுக்கு அவர்களது துறையில் மிக குறைந்த அளவிலான அறிவு கூட இருப்பதில்லை. பட்டப்படிப்பில் தெரிய மாணவர்களுக்கு ஒரு வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது கூட தெரிவதில்லை.

 

நிதர்சனம் இதுதான்

 

ஆனால் தரத்தினை பற்றிய எந்த கவலையும் இல்லாமல், வெறும் எண்ணிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு ‘எங்கள் மாநிலம் கல்வியில் முன்னேறிவிட்டது’ ‘எங்கள் நாடு கல்வியில் முன்னேறிவிட்டது’ என பேசிக்கொண்டு இருப்பதில் எந்தவித பயனும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

 


கல்வித்தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும்?

 

கரும்பலகை அருகே நிற்கும் மாணவர்கள்
கரும்பலகை அருகே நிற்கும் மாணவர்கள்

 

>> பல உலகநாடுகளின் கல்வித்தரத்தை ஆராய்ந்து அதில் சிறந்தவற்றை நமது மாணவர்களுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக அரசு எடுக்க வேண்டும்.

>> மாணவர்களுக்கு அறிவினை போதிப்பவர்கள் ஆசிரியர்கள். அப்படிப்பட்ட அவர்கள் அதிகப்படியான அறிவோடு இருக்க வேண்டியது அவசியம். ஆகவே ஆசிரியர்களை பணிக்கு எடுப்பதோடு தங்களது கடமை முடிந்துவிட்டது என அரசாங்கம் நினைக்காமல் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் அவர்களுக்கு மேம்பாட்டு வகுப்புகளை நடத்திட வேண்டும்.

>> தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது, அதனை முறையாக பயன்படுத்தி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கான வேலைகளை செய்ய வேண்டும். மற்ற நாடுகளில் இருக்கும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க ஏற்பாடு செய்திட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் wifi வசதியினை ஏற்படுத்துவதன் மூலமாக இதனை எளிமையாக அனைத்துப்பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும்.

>> அனைத்தையும் அரசினால் கண்காணிக்க இயலாது. தங்களது பிள்ளைகள் படிக்கின்ற பள்ளியில் சரியான முறையில் கல்வி கற்பிக்கப்படவில்லையெனில் பெற்றோர் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று முறையிட வேண்டும்.

>> ஒவ்வொரு மாநில அரசும் மத்திய அரசும் அதிகப்படியான நிதியினை கல்வித்துறைக்கு ஒதுக்குகின்றன. அந்த பணத்தினால் கல்வி கற்று மாணவர்கள் நல்ல பணிகளுக்கு சென்று நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திட உதவினால் மட்டுமே செலவு செய்வதற்கான பலனை நாடு அனுபவிக்கும். அதனை விடுத்து வெறும் காகிதத்தில் மட்டும் பட்டம் இடம்பெற்று என்ன பயன்?

தரமான கல்வியினை இளம் தலைமுறைகளுக்கு கொடுப்பதன் மூலமாக நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக உயரும். நமது தேசம் அதற்க்கான பலனை அனுபவிக்கும். இதற்கான முயற்சிகளில் ஆட்சியாளர்கள் ஈடுபடவேண்டும் என்பதே நமது விருப்பம்.

எப்போது அந்த முயற்சியினை ஆக்கப்பூர்வமாக துவங்க போகிறோம்?

 


உங்களுடைய எண்ணமும் இதுதான் என்றால் பிறருடன் இந்த பதிவை பகிர்ந்துகொள்ளுங்கள்

 


பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *