தொடரும் வாரிசு அரசியல் – சரியா? தவறா?

 

 


 

தேர்தலுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் சூழல்களிலும் கட்சிக்கு தலைவர்கள் நியமிக்கப்படும் சூழல்களிலும் வாரிசு அரசியல் என்றதொரு பேச்சு கிளம்புவது உண்டு. அரசியலில் வாரிசுகள் என்பது இங்கு நடப்பது முடியாட்சியா அல்லது குடியாட்சியா என்றதொரு கேள்வியை எழுப்புகிறது. வாரிசு அரசியல் முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றா? தமிழகத்தில் மட்டும் தான் வாரிசு அரசியல் நடக்கிறதா? என்பது போன்ற கேள்விகளுக்கு விரிவான விடையை தேடுவோம்.

 

உங்களுக்கு மாற்றுக்கருத்து அல்லது கூடுதல் விவரங்கள் இருந்தால் கமெண்டில் தவறாமல் பதிவிடுங்கள்.


முடியாட்சி, குடியாட்சி வித்தியாசம்

 

முடியாட்சி நடைபெறும் தேசத்தில் மன்னருக்கு பிறக்கின்ற வாரிசு தான் அடுத்த மன்னராக முடியும். அந்த வாரிசு ஏற்கனவே இருந்த மன்னரை விடவும் அறிவாளியாக இருக்கலாம், அறிவற்றவராக இருக்கலாம், வீரராக இருக்கலாம், கோழையாக இருக்கலாம், நேர்மையானவராக இருக்கலாம், குற்ற எண்ணமுடையவராகவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் அவர்தான் அந்த தேசத்து மக்களின் அடுத்த மன்னர்.

 

குடியாட்சி நடைபெறும் தேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரே உயரிய பொறுப்பில் அமர்த்தப்படுவார். அந்தபதவிக்கான போட்டியில் அந்த தேசத்தை சேர்ந்த எவர் வேண்டுமானாலும் போட்டியிடலாம். மக்கள் அதிக வாக்குகளை அளிக்கின்றபட்சத்தில் அவரே உயரிய பொறுப்பினை அடைவார்.


இந்தியாவில் வாரிசு அரசியல்

 

வாரிசு அரசியல் : நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல்காந்தி
வாரிசு அரசியல் : நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல்காந்தி

 

இந்தியாவில் மக்களாட்சி நடப்பதாக கூறப்பட்டாலும் பரவலாக வாரிசுகளே அடுத்தடுத்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை வாரிசு அரசியலின் தாக்கம் இருக்கவே செய்கிறது. நாம் வாழுகின்ற காலகட்டத்தில் மட்டும் அரசியலில் இருக்கும் சில வாரிசுகளை பார்க்கலாம்.

 

சோனியா காந்தி >> ராகுல் காந்தி

கருணாநிதி >> ஸ்டாலின்

முலாயம் சிங் >> அகிலேஷ் யாதவ்

தேவகவுடா >> குமாரசாமி

எம்ஜிஆர் >> ஜானகி

லாலு பிரசாத் >> ராப்ரி தேவி (மனைவி)

பரூக் அப்துல்லா >> உமர் அப்துல்லா

 

இவை நினைவுகளில் வந்த சில பெயர்கள் மட்டுமே

 

இதுதவிர மாநில அளவிலும், உள்ளாட்சி அளவிலும் வாரிசு அரசியலின் தாக்கம் என்பது மிகப்பெரிய அளவிலேயே இருந்து வருகிறது.

 


 

வாரிசு அரசியல் சரியா தவறா?

 

வாரிசு அரசியல் சரியா அல்லது தவறா என்ற கேள்விக்கு 100 சதவிகிதம் உறுதியாக எந்த பதிலையும் கூற முடியாது என்பதே நிதர்சனம். ஆனால் சரியான பதிலை தேடி நம்மால் பயணிக்க முடியும் என கருதுகிறேன். அதனைத்தான் இங்கு செய்ய இருக்கிறோம்.

 

வாரிசு அரசியலில் களமிறங்குபவர்கள் தங்களுக்கு சாதகமாக ஒரு பதிலை வைத்திருப்பார்கள் “ஒரு மருத்துவரின் மகன் அல்லது மகள் மருத்துவர் ஆகலாம், ஒரு தொழில் அதிபரின் வாரிசு தொழிலதிபர் ஆகலாம், ஒரு பள்ளி தாளாளரின் வாரிசு தாளாளர் ஆகலாம் ஆனால் ஒரு அரசியல் தலைவரின் வாரிசு மீண்டும் அதே அரசியலில் ஈடுபடுவது மட்டும் எப்படி தவறாகும்?”. இந்தக்கேள்வியை கேட்கும் போது அவர்கள் சொல்வதும் சரியாகத்தானே இருக்கிறது என நமக்கும் தோன்றலாம்.

 

அவர்களின் இந்தக்கேள்விக்கான பதிலாக இது நிச்சயமாக இருக்கும். மற்ற துறைகளை நாம் அரசியலோடு நிச்சயமாக ஒப்பிட முடியாது. அதற்கு மிக முக்கியக்காரணம் மக்களின் அன்றாட வாழ்வோடு பிணைந்திருக்கக்கூடிய அரசியலுக்கு வாரிசு என்ற ஒற்றை தகுதி மட்டுமே போதுமானது அல்ல. அனுபவம். தியாகம், அப்பழுக்கற்ற தன்மை என பல தகுதிகள் அரசியலில் ஈடுபடுவோருக்கு தேவைப்படுகிறது. இதனை விட ஒரு முக்கியமான விசயம், அரசியல் கட்சி என்பது ஒற்றை நபரால் மட்டுமே உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல, குறிப்பாக சொத்து அல்ல.

 

ஸ்டாலின் மற்றும் கருணாநிதி

 

ஆனால் அனைத்து தகுதிகளுடன் கூடிய ஒரு ஒரு வாரிசு பதவியை பெறுவது என்பது தவறாகாது. இதற்கு மிகச்சரியான உதாரணம், கருணாநிதிக்கு பிறகு திமுகவின் தலைமை பதவியை பெற்றிருக்கக்கூடிய முக ஸ்டாலின். அடிப்படை உறுப்பினர் பதவியில் துவங்கி, மேயர் , சட்டமன்ற உறுப்பினர், துணை முதல்வர், பொருளாளர் போன்ற பல பதவிகளை வகித்து இருக்கிறார். இதனைவிட அவர் கருணாநிதி அவர்களின் மகன் என்பது கூடுதல் பலம். இப்படிப்பட்ட அனுபவங்களுடன் கூடிய ஒரு வாரிசு அரசியல் வாரிசாக வருவதென்பது மக்களுக்கும் நன்மையே தரும். இதனை நம்மால் விமர்சனங்களுக்கு உள்ளாக்கவும் முடியாது. [விமர்சனம் என்னவெனில், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் திடீரெனெ முன்னிறுத்தப்படுவது தான்]

 


 

தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் வாரிசுகள்

 

நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போகும் திமுக வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன் வாரிசு அரசியல் என்ற பேச்சு தொடங்கி இருக்கிறது.

 

 

  • கதிர் ஆனந்த் [பொருளாளர் துரைமுருகனின் மகன்]
  • கலாநிதி வீராசாமி [ஆற்காடு வீராச்சாமி அவர்களின் மகன்]
  • தமிழச்சி தங்கபாண்டியன் [முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் தங்கபாண்டியன்]
  • தயாநிதி மாறன் [கருணாநிதியின் பேரன், முரசொலி மாறனின் மகன்]
  • கனிமொழி [ கருணாநிதி அவர்களின் மகள்]
  • கவுதம சிகாமணி [முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன்]
  • இதுதவிர அதிமுகவிழும் ஓபிஸ் அவர்களின் மகனும் போட்டியிடுவதாகவும் கூறப்படுகிறது.

 


 

வாரிசு அரசியல் தவிர்க்கப்பட வேண்டும்

 

என்னைக்கேட்டால் வாரிசு அரசியல் என்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றே கூறுவேன். அரசியல் என்பது பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு அமைப்பு அதில் வாரிசு உரிமை என்பது தவிர்க்கப்பட வேண்டும். ஒருவேளை வாரிசுக்கு, அரசியலுக்கு வர விருப்பம் இருந்தால் ஒரு சாதாரண தொண்டன் எப்படி அந்த கட்சியில் புதிதாக இணைந்து பொறுப்புக்களை பெறுவாரோ அதனைப்போலவே வாரிசும் நடத்தப்படுதல் வேண்டும். இதனை செய்யவேண்டியது பொறுப்புமிக்க அந்த அரசியல் தலைமைகள் தான்.

 

தொண்டர்கள் தான் இதனை கட்டுப்படுத்த வேண்டும். வாக்குகள் பெற்றால் தான் ஒருவரால் வெற்றிபெற முடியும். தகுதியற்ற தனது வாரிசை நான் முன்மொழிந்தால் எனது கட்சியினர் கூட வாக்களிக்க மாட்டார்கள் என்பதனை உணர்த்திட வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை தான்.

 

ஒருவர் வெற்றி பெற உங்களது ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது, ஆகவே இன்றளவும் நீங்கள் தான் எஜமானர்கள். ஆகவே உங்களது முடிவுகளால் மேலிடத்தில் இருப்பவர்களை திருத்திட முயலுங்கள்.

 

தகுதி இருப்பவர் நம்மை ஆளட்டும் !

 

பிறரோடு இந்த பதிவை பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

இதுபோன்ற கருத்துக்களை படிக்க subscribe செய்திடுங்கள்

 

பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “தொடரும் வாரிசு அரசியல் – சரியா? தவறா?

  • March 18, 2019 at 9:53 am
    Permalink

    தலைமை இவர்கள் கட்டுபாட்டில் உள்ளது…

    அதனால் இன்னொருவர் மா.செயலாளர் பதவிக்கு வந்து அதிகாரம் செய்வது இவர்களுக்கு கௌரவக்குறைச்சலை ஏற்படுத்தும்.

    அதனால் வாரிசு அரசியல் என்பது இந்தியக்கட்சிகளுக்கு தொடர்கதையாகதான் இருக்கும்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *