என் ஜன்னலுக்கு வெளியே – மறதி நம்மை வீழ்த்தும் சதி

காலை தேநீரை அருந்திக்கொண்டே செய்தித்தாள்களை புரட்ட ஆரம்பித்தேன். செய்தித்தாள்களில் நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக பல யூகங்கள் ஆளுநரை மையப்படுத்தி வந்தன . ஆளுநர் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு பெண் செய்தியாளரின் கன்னத்தை தடவியது மிகபெரிய பிரச்சனையாக மாறியிருந்தது . அதனை கண்டித்து போராட்டங்களும் நடந்தன .சமூக வலைதளங்களில் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக அனைவரும் பேச ஆரம்பித்திருந்தார்கள்.

என் வீட்டிற்கு வெளியே யாரோ பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டவுடன் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன் . அவர்கள் மாணவிகளிடம் தவறாக பேசிய நிர்மலா தேவியை மற்றும் அதில் சம்பந்தபட்ட பெரும் புள்ளிகளை பிடித்து கடும் தண்டணை கொடுக்கவேண்டும் என உணர்ச்சிகரமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் .

பார்க்க கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது , மக்கள் நடப்பு விசயங்களில் நாட்டமுள்ளவர்களாக , அவர்களை கருத்து சொல்பவர்களாக இந்த சமூக வலைதளங்கள் மாற்றியிருக்கிறதே என நினைத்துக்கொண்டேன் .

மறுநாள் காலை ஜன்னலை திறந்தேன் , அனைவரும் H ராஜா என்கிற பாஜக நபர் கருணாநிதி அவர்களை இழிவு படுத்தி போட்ட டிவீட் க்கு எதிராக போராட்டமும் சமூக வலைதளங்களில் பரவலான பேச்சும் ஆரம்பித்திருந்தன . இதையே அன்றைய செய்தித்தாள்களிலும் பார்க்க முடிந்தது .

நேற்றைய பிரச்சனை இன்னும் முடிவடையவே இல்லை , இன்று அதே ஜன்னலுக்கு வெளியே வேறொரு பிரச்சனையை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் . இது எதனால் நடந்தது , மக்கள் மறதியால் பாதிக்கப்பட்டார்களா அல்லது மறதி அவர்களின் மீது தொடர்ச்சியாக திணிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றதா ?

எத்தனயோ பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கின்றோம் , ஒன்றிற்காவது தீர்வு கிடைத்ததா ? இல்லை. காரணம் , நமது போராட்டங்களை திசை திருப்ப சிலரின் ஒரு டிவீட் போதுமானதாக இருக்கின்றது . புதிதாக ஒரு பிரச்சனையை கண்டவுடன் புதிய பிரச்சனைக்கு முக்கியதுவம் கொடுத்து முந்தைய பிரச்சனையை மறந்துவிடுகிறோம் .

ஒரு பிரச்சனையை மறைக்க அதைவிட கொஞ்சம் பெரிய , உணர்வுகளை தொடக்கூடிய வகையில் இன்னொரு பிரச்சனையை கொண்டுவந்தால் நாம் முன்புள்ள பிரச்சனையை மறந்துவிடுகிறோம் . இது நம்மை திசை திருப்ப செய்யப்படும் ஆகப்பெரும் சதி .

இனியாவது மறதியில்லாத மனிதர்களை என் வீட்டு ஜன்னலுக்கு வெளியே காண்பேனா ?

பாமரன்

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *