வாழ்வில் ஜெயிக்க கல்வி ஒரு தடை அல்ல !
கல்வியே வேண்டாம் என்பது அல்ல என் வாதம். கல்வி வாழ்விற்கு அவசியம் தான். ஆனால் கல்வி இருந்தால் தான் வாழ முடியும் கல்வி இருந்தால் தான் ஜெயிக்க முடியும் என்பதெல்லாம் வெறும் பொய் என்பதே என் வாதம்
Get updates via WhatsApp
தலைப்பை படித்துவிட்டு கல்வியே தேவையில்லையா என கேட்க வேண்டாம். கல்வி என்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அவசியமானது தான். ஆனால் படிப்பில் சுட்டியாக இருப்பவர்கள் மட்டுமே சாதிக்க தகுதி வாய்ந்தவர்கள் என்ற ஒரு கருத்து சமூகத்தில் பெருவாரியாக உலவுகிறது அது பொய் என்று தான் கூற வருகிறேன். முழுவதும் படியுங்கள். [Read This also : உனக்கு வெற்றி என்பது எது என சிந்தித்து அதனை நோக்கி செயல்படு]
இந்த தலைமுறை குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். காரணம், தங்களது வருமானத்தின் குறிப்பிட்ட பகுதியை தங்களது குழந்தைகளின் கல்விக்காக மகிழ்ச்சியோடு செலவு செய்திடும் பெற்றோர்களை பெற்று இருக்கிறார்கள். நமது கல்விமுறையில் ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி துவங்கி அதன் பிறகு 1 முதல் 12 வகுப்புகள் படித்தே தீர வேண்டும். பிறகு தான் தனக்கு விரும்பிய துறை சார்ந்த கல்வியின் பக்கம் பிள்ளைகளால் செல்ல முடியும்.
பள்ளிப்படிப்புகளை சிறப்பாக படிக்கின்ற குழந்தைகள் மிகவும் திறமையானவர்கள், எதிர்காலத்தில் அவர்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பெற்றோர், ஆசிரியர் இடத்தில் இயல்பாக எழுகிறது. மறுபக்கம் பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்காத குழந்தைகள் திறமை அற்றவர்கள் என கருதப்படுகிறார்கள். அவர்களால் எதிர்காலத்தில் சாதிக்கவே முடியாது என கருதப்படுகிறார்கள். இந்த எண்ணத்தை மாணவர்கள் மனதிலும் விதைத்து விடுகிறார்கள். இந்த எண்ணம் அவர்களின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடுகிறது என்பதே உண்மை.
உண்மையில் படிப்பில் சிறந்து விளங்குகிறவர்களால் மட்டும் தான் வாழ்க்கையில் சாதிக்க முடியுமா? நிச்சயமாக இல்லை. சிறப்பாக படிக்கிறவர்களுக்கு இருக்கின்ற வாய்ப்புகளை விட நன்றாக படிக்காத மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஜெயிக்க இருக்கின்ற வாய்ப்புகள் தான் அதிகம். உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள்,
நன்றாக பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த மாணவருக்கு என்ன வாய்ப்பு இருக்கும்? உயர்கல்விக்கு போகலாம் அல்லது அரசு பணிக்கு முயற்சி செய்யலாம் அல்லது தனியார் நிறுவனங்களில் வேலை செய்யலாம். ஆனால் நன்றாக படிக்காத மாணவருக்கு இந்த மூன்று வாய்ப்புகளும் இருக்கும், கூடவே தொழில் துவங்கலாம், கிடைக்கின்ற வேலையை செய்து அதில் சம்பாரிக்கலாம், இதில் தான் செல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் இல்லாமல் கோடி வாய்ப்புகள் இருக்கும்.
“படிக்காதவர்கள் என்று பட்டம் சுமத்தப்பட்டவர்கள் உருவாக்கிய நிறுவனங்கள் தான் படித்த பலருக்கு வேலைவாய்ப்பை கொடுத்துக்கொண்டு இருக்கிறது.”
நம்மை சுற்றி நடப்பவற்றை கவனித்து பாருங்கள், படிக்காத ஒருவர் ஹோட்டல் நடத்தி மிகப்பெரிய தொழில் அதிபர் ஆகி இருப்பார் . ஆனால் அவரது வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் ஏதோ ஒரு அரசுப்பணியில் மாதாந்திர சம்பளத்திற்கு வேலை பார்த்துக்கொண்டு இருப்பார். கல்வியே வேண்டாம் என்பது அல்ல என் வாதம். கல்வி வாழ்விற்கு அவசியம் தான். ஆனால் கல்வி இருந்தால் தான் வாழ முடியும் கல்வி இருந்தால் தான் ஜெயிக்க முடியும் என்பதெல்லாம் வெறும் பொய் என்பதே என் வாதம்.
உங்களை நம்புங்கள்
பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒரு விசயத்தை புரிந்துகொள்ள வேண்டும். மனப்பாடம் செய்வதில் வல்லவர் சிறந்த கல்வியாளர் என்ற நிலையில் தான் நாம் இருக்கிறோம். ஆனால் உண்மையான கல்வி என்பது ஒரு விசயத்தை நீங்கள் எப்படி புரிந்துகொண்டு இருக்கிறீர்கள், அதில் நீங்கள் எவ்வளவு நிபுணத்துவம் பெற்று இருக்கிறீர்கள் என்பது தான். ஆகவே பள்ளிக்கு செல்லுங்கள், படிப்பில் கொடிகட்டி பறக்க முடியவில்லையா, கவலை வேண்டாம். தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல் புரிதலோடு உங்களுக்கு பிடித்தமான விசயங்களில் உங்களது திறனை வளர்த்துக்கொள்வதில் அக்கறை காட்டுங்கள். எதிர்காலத்தில் வாழ்வாதாரத்திற்கு அது உதவுமா என்பதனை மனதில் வைத்துக்கொண்டு நம்பிக்கையோடு நடை போடுங்கள்.
நீங்களும் ஜெயிக்கலாம்!
Read This Post Also : தாழ்வு மனப்பான்மை எவ்வளவு கொடியது தெரியுமா?
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!