கஞ்சத்தனம் உன் மதிப்பை அழித்துவிடும்
சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் தன்னுடைய பேச்சின்போது குறிப்பிட்ட ஒரு கேள்வியை முன்வைத்தார் . “எப்படி சுயவாழ்வில் ஒழுக்கமில்லாதவர்கள் குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மக்களால் போற்றப்படுகிறார்கள் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்? , சுயவாழ்வில் ஒழுக்கமிருப்பவர்களும் நல்லவர்களாக இருப்பவர்களும் கூட மக்களின் அன்பினை பெறாதவர்களாக இருப்பது ஏன் ? தலைவர்களாக அங்கீகாரம் பெற முடியாமல் இருப்பது ஏன்?”
இந்த கேள்விக்கான பதிலையும் அவரே கூறியிருந்தார் . “கொடை” இதுதான் ஒரு மனிதனின் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தும் காரணியாக இருந்துவருகின்றது என்கின்றார் . ஒரு மனிதரிடத்தில் எப்பேற்பட்ட தீய பழக்கவழக்கங்கள் இருப்பினும் அவரிடத்தில் கொடுக்கும் கொடை உள்ளம் இருப்பின் அவரது மற்ற பழக்கவழக்கங்களை மறந்து கொடை என்கிற பண்பு மட்டுமே கொண்டாடப்படும் என்கிறார் சுகி சிவம் .
மற்றொருபக்கம் பல சிறந்த பண்புகளையும் பலதுறைகளில் மேதையாகவும் இருந்தாலும் “கொடை” பண்பு இல்லாவிடில் அவர் மக்களால் நிராகரிக்கப்படுகிறார் . இன்னும் சொல்லப்போனால் இத்தனை மேதையாக இருந்து என்ன பயன் “கொடுக்கும் பண்பு” இல்லாத கஞ்சனாக இருக்கிறானே என உலகம் தூற்றும் .
உதாரணத்திற்கு , ஒரு நகரில் இசை , நாட்டியம் தொடங்கி இன்னும் பல துறைகளில் சிறந்தவராக இருக்கும் ஒருவரின் புகழை அறிந்து அவரை சந்திக்க செல்கின்றார் இன்னொருவர் . சுமார் ஒருமணிநேரம் சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்தவரிடம் மற்றொருவர் கேட்கின்றார் “பேசினீர்களா ? எவ்வளவு பெரிய மேதை ” என சொன்னார் . அதற்கு சந்தித்துவிட்டு வந்தவரின் பதில் “மேதைதான் ஆனால் என்ன பயன் . வீட்டிற்கு சென்று ஒருமணிநேரம் ஆனபின்னரும் குடிக்க ஒரு குவளை நீர் கூட கொடுக்க மனமில்லாதராக இருக்கிறாரே ” என இகழ்ந்தார் .
தனக்கு ஏதாவது கிடைத்தால் தான் மனிதன் கவனிக்கிறான்,புகழ்கிறான் . அவர் எப்பேற்பட்டவர் என்பதை பற்றியெல்லாம் அவனுக்கு கவலையில்லை . அப்படிப்பட்ட மனிதர்கள் வாழுகின்ற உலகத்தில் நாமும் அதற்கேற்றவாறு வாழ பழகிக்கொள்ள வேண்டும் .
கொடை வள்ளலாக இருக்கவேண்டும் என்றெல்லாம் கட்டாயமில்லை , சிக்கனம் இக்கால வாழ்க்கைக்கு அவசியமானதுதான் . சிக்கனம் என்கிற பெயரில் கஞ்சத்தனமாக இருக்க வேண்டாம் என்பதே இப்பதிவிலிருந்து நாம் அறிந்துகொள்ளவேண்டிய செய்தி .
சிக்கனத்தோடு கஞ்சத்தனம் அற்றவராக வாழ பழகிக்கொள்வோம் , பிறரின் அன்பினை பெற்றவராக மாறிடுவோம் .