சாதிய தீண்டாமை செய்திடும் மூடர் கூட்டம் இன்றும் உண்டு
சாதியா அதெல்லாம் ஒழிஞ்சு ரொம்ப நாள் ஆச்சுங்க. இடஒதுக்கீடு, தனித்தொகுதி இதையெல்லாம் இனி நீக்கிறலாமுங்க என்று வாய்கிழிய பேசுகிற இளைஞர்கள் கூட்டம் சாதிய தீண்டாமை புரையோடிப்போயிருக்கும் இந்த சமூகத்தில் இட ஒதுக்கீடு, தனித்தொகுதி போன்ற வாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தால் வழங்கப்படாவிடில் அவர்களுடைய நிலைமை எவ்வளவு மோசமாக மாறியிருக்கும் என்பதனை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது தெற்குத்திட்டை பஞ்சாயத்து. இங்கு வன்னியர் குடும்பங்கள் அதிகமாகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் குறைவாகவும் வசிக்கிற பஞ்சாயத்து. இந்த முறை இந்தப் பஞ்சாயத்து தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களால் மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டிபோட இயலும்.
அப்படி தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் தான் ராஜேஸ்வரி. ஊராட்சி மன்றக்கூட்டங்களில் அவர் தரையில் அமருமாறு வன்னியர் பிரிவை சேர்ந்த துணைத் தலைவரால் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். இவர் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஒருவரும் தரையில் அமர கட்டாயப்படுத்தப்பட்டுளனர். இதற்கு ஊராட்சி மன்ற செயலரும் உடன்போயிருக்கிறார்.
இதற்கு முன்பு நடந்த பல்வேறு கூட்டங்களிலும் இப்படி நடத்தப்பட்டிருந்தாலும் தற்போது நடந்த கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் கீழ் செயலர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். துணைத்தலைவரை தேடுவதாக செய்திகள் கிடைத்திருக்கின்றன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த பல ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு இதே போன்றதொரு பிரச்சனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் அமிர்தம் என்ற பிற்படுத்தப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவரை தேசியக்கொடி ஏற்றாமல் தடுத்ததாகக்கூறி புகார் எழுந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்தப் பிரச்னையை சரிசெய்து மீண்டும் கொடியேற்றிட அவருக்கு உரிமை வழங்கப்பட்டது.
தற்போது ராஜேஸ்வரி அவர்களுக்கு நடந்த அநீதிக்கும் மாவட்ட நிர்வாகம் நடவெடிக்கைகளை எடுத்துள்ளது.
தமிழகம் முழுக்க பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பேர் ஊராட்சி மன்றத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சரியாக நடத்தப்படுகிறார்களா என்பதனை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் . மாவட்ட ஆட்சித்தலைவர் இதனை அவ்வப்போது உறுதிப்படுத்த வேண்டும் .
காவல்துறை இருக்கிறது, ஆட்சித்தலைவர் இருக்கிறார், நீதிமன்றம் இருக்கிறது, சமூக வலைத்தளம் என்கிற பேராயுதான் இருக்கிறது. இதில் எதையுமே பயன்படுத்த துணியாமல் முடங்கிக்கிடப்பதும் கூட மிகப்பெரிய தவறே.
இந்த நிகழ்வு குறித்து திமுக எம்பி கனிமொழி தன்து கண்டனத்தை ஒருபுறம் தெரிவித்து இருந்தாலும் மறுபுறம் இப்படி நடந்துகொண்டவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. சாதிய ரீதியாக மக்களை அடக்கியாளும் கொடுமைகள் பரவலாக நடைபெற்று வருகின்றன. ஒரு தவறு நடைபேயும்போது அந்தத்தவரை இழைக்கிறவர்கள் எந்தக்கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறி அவர்களுக்கு அடையாளம் அளிப்பதில் உடன்பாடு இல்லாதவன் நான்.
ஆகவே குற்றம் இழைக்கிறவர்கள் குற்றத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும். இயக்கங்கள் அனைத்து சமூகத்தினரையும் அனுசரித்து சென்றால் தான் வாக்குகளை பெற முடியும் என்ற குறுகிய எண்ணத்தோடு செயல்படாமல் சமத்துவத்தை தன் இயக்கங்களில் அமல்படுத்திட வேண்டும்.
குனிந்தால் கொட்டுவார்கள், ஆகவே ஊராட்சி மன்றத்தலைவர்கள் தங்களது உரிமைக்காக போராட வேண்டும். யார் உங்களை சாதிய மத பொருளாதார காரணங்களுக்காக தாழ்வுடன் நடத்தினால் கிளர்ந்தெழுங்கள். அதிகபட்சமாக உங்களை அடித்து துன்புறுத்துவார்கள், அதிகபட்சம் கொல்வார்கள். நீங்கள் அடிக்க அடிக்க எழுந்துகொண்டே இருந்தால் உங்களை ஒருவராலும் அடக்கியாள முடியாது.
பாமரன் கருத்து