Crime at the age of 18 to 21 | 18 – 21 வயதில் கொலை கொள்ளையில் ஈடுபடும் இளைஞர்கள்? எங்கே போகிறோம் நாம் ?

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் செயின்பறிப்பு , மொபைல் போன் திருட்டு , பைக் திருட்டு அதிகமாகியிருப்பதனால் சென்னையில் இரவு ரோந்துப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன . பலர் கைதும் செய்யப்பட்டிருப்பதாக தெரிகின்றது .
பலமுறை திருட்டு சம்பவங்கள் நடைபெறும்போது வெளியிடப்படும் காட்சிகளிலும் சரி , பிடிபடும் குற்றவாளிகளின் விவரங்களை பார்க்கும்போதும் சரி மிகப்பெரிய அச்சம் ஏற்படுகின்றது .
திருடன் என்றால் வயதாகி , அழுக்கான ஆடையுடன் முகத்தை பார்த்தாலே தெரிந்துகொண்டுவிட முடியும்

ஆம் இப்போது திருட்டு , கொலை சம்பவங்களை செய்பவர்கள் 18 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள் .

அண்மையில் இரவில் பணி செய்துவிட்டு திரும்பிய லாவண்யா சில கொடூர நபர்களால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அந்த குற்றவாளிகளை போலீசார் பிடித்துள்ளனர் .

சில தினங்களுக்கு முன்பாக பட்டப்பகலில் நடந்த செல்லும் முதிய தம்பதிகளிடம்  செயினை பறித்துக்கொண்டு ஓடுகிறார்கள் இரண்டு நபர்கள் .

பல இடங்களில் மொபைல் போன் மற்றும் பைக் திருட்டுகள் அதிகமாக நடக்கின்றன .

இந்த குற்றங்களை துலக்கி குற்றவாளிகளை கண்டுபிடித்தால் பிடிபட்டவர்கள் அனைவரும் இளைஞர்களாக இருக்கின்றனர் . அதிலும் பலர் தொடர் திருட்டில் ஈடுபடுவபர்கள் கூட இல்லை . நன்றாக படித்த புதியவர்களே அதிகமாக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர் .

இளைஞர்களின் பாதை மாற்றம் ஏன் ?

ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்
உயிரினும் ஓம்ப படும்

வள்ளுவரின் வார்த்தைப்படி ஒழுக்கமாக இருப்பதனால் வருகின்ற கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை இளைஞர்களிடத்தில் குறைந்து வருகின்றது . கேட்டவுடன் மொபைல் வாங்கித்தராத அப்பாவை வில்லனாக பார்க்கும் மனநிலையில் இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள் .

அத்தனைக்கும் காரணம் முறையான படிப்பினையை பெற்றோர்களும் ஆசிரியர்களும் சமூகமும் அவர்களுக்கு கொடுக்க தவறிவிட்டது . அதன் நீட்சியே இன்று குற்றங்கள் புரிய அவர்களை அச்சப்படாமல் கூச்சப்படாமல் செய்துவிட்டது .

வேலைவாய்ப்பு இன்மை

அண்மையில் நடந்துவரும் குற்றவழக்குகளில் இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகின்றது .

படித்த இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகும்போது ஒருகட்டத்திற்குமேல் நிலைமையை சமாளிக்க முடியாமல் பணம் சம்பாதிப்பதற்கான அடுத்த வழிகளை தேடுகின்றனர் .

திருட்டு ,கொலையில் எளிமையாக விரைவாக அதிகமாக பணம் கிடைத்துவிடுவதால் சிலர் குற்றம் என்பதையெல்லாம் மறந்து அதனை செய்ய துணிந்து விடுகின்றனர் .

பெற்றோரின் அரவணைப்பு குறைவு

இன்றைய சூழ்நிலைகளை சில பெற்றோர்களும் சுற்றுபுறத்தவர்களும் உணர்ந்துகொள்ளாமல் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களை வார்த்தைகளால் கொல்லுகின்றனர் .

கஷ்டகாலங்களில் உறுதுணையாக இருந்து நல்வழிப்படுத்தவேண்டிய குடும்பத்தார் கூட புரிந்துகொள்ள மறுப்பதால் இளைஞர்கள் இந்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் .

போலீசாரின் ஒத்துழைப்பு

அன்றும் இன்றும் ஒரு திருட்டு நடக்கிறதென்றால் அதை யார் செய்திருப்பார் என்று போலீசாருக்கு தெரியும் . ஆனால் அவர்களே லஞ்சங்களை வாங்கிகொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதால் பலர் இன்று பயப்படாமல் திருடுகின்றனர் , குற்றங்களில் ஈடுபடுகின்றனர் .

காரணம் ஆயிரம் இருந்தாலும் குற்றம் குற்றமே, வழி மாறாதே இளைஞனே

முதல்முறை தவறு செய்யும் எண்ணம் வரும்போதே ஒரு அச்சம் வரும் . அந்த அச்சத்திலேயே தவறு செய்யாமல் இருந்துவிட்டால் தப்பித்துக்கொள்வீர்கள் இளைஞர்களே . ஒருவேளை அந்த தவறை செய்து அதில் உங்களுக்கு இன்பம் கிடைத்துவிட்டால் நீங்களே விரும்பினால் கூட அடுத்த முறை தவறு செய்வதை உங்களால் தடுக்க முடியாது .

வேலை கிடைக்காமல் போனதற்காக திருட்டில் கொலை கொள்ளையில் ஈடுபடுகிறேன் என்று கூறுவது சரியாகாது . ஒவ்வொருவரும் அவ்வாறு நினைத்துவிட்டால் என்னாகும் நினைத்துப்பாருங்கள் . ஆகையால் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் …உங்களுக்கான வேலை நிச்சயம் இருக்கும் .

வழிதவறிவிட வேண்டாம் ! வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம் !

படியுங்கள் ! பகிருங்கள் !

நன்றி

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *