சாதிய வன்முறை | பகடைக்காய்களாக மாறும் பொதுமக்கள் | Ponnamaravathi |Ponparappi

 


 

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமம் , புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆகிய இடங்களில் சாதிய வன்முறைகள் அரங்கேறியுள்ளன . இவை இரண்டும் வெவ்வேறு பகுதிகளில் நடந்திருந்தாலும்  இவை இரண்டிற்கும் இடையில் இருக்கின்ற ஒற்றுமை “திட்டமிட்டு வன்முறையை அரங்கேற்றியதுதான் என்பதும் அரசியல் ஆதாயத்திற்க்காக வன்முறை தூண்டப்பட்டுள்ளது என்பதும்தான்”.

 

அமைதியான சூழலில் வாழுகின்ற மனிதன் சிந்திப்பான் . அப்படி சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் சாதி மதங்களை கடந்து நல்லதை தேட ஆரம்பித்துவிடுவான் . இவர்கள் அனைவரையும் சிந்தாமல்  சிதறாமல் ஒரு குடைக்கு கீழே கொண்டுவந்து பலனை அனுபவிக்க வேண்டுமெனில் அவர்களின் அமைதியை குலைப்பதற்கான வேலையை செய்யவேண்டும் . இதற்கு எளிமையான ஆயுதமாக சாதி இருக்கிறபடியால் பல அரசியல்கட்சிகள் சாதிய பிரச்சனைகளை அவ்வப்போது தூண்டிவிடுகின்றன .

 

பொன்பரப்பி மற்றும் பொன்னமராவதி இரண்டு பிரச்சனைகளையும் கவனித்துப்பாருங்கள் , பானையை உடைத்தது , சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட குறுஞ்செய்தியை பகிர்ந்தது . இதனை பல ஆயிரம்பேர் இணைந்து துவங்கவில்லை , வெகுசிலரே திட்டமிட்டு பிரச்சனையை துவங்கி இருக்கிறார்கள் . போதிய நடவெடிக்கை எடுக்கப்படாமல் போனதால் அவை மிகப்பெரிய வன்முறையாக மாறியிருக்கின்றது .

 



சாதிய வன்முறைகளின் பாதிப்புகள் சமூகத்தில் இருக்கின்ற அனைத்துத்தரப்பு மக்களுக்கும் தொந்தரவை கொடுக்கின்றன . பொதுச்சொத்துக்கள் பல சமயங்களில் சேதப்படுத்தப்படுகின்றன . அனைத்தையும் தாண்டி , அடுத்த தலைமுறைக்கு சாதி எனும் விஷப்பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டுகிற செயலாகத்தான் சாதிய வன்முறைகள் இருக்கின்றன .

 

மக்களுக்கு நன்மை செய்வோம் , சிறந்த சமூகத்தை கட்டமைப்போம் , முன்னேற்றத்தை தருவோம் என பேசும் அரசியல்கட்சிகள் சாதிய வன்முறைகளுக்கு பின்னால் நிற்பதாக எழுகின்ற குற்றச்சாட்டுக்கள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகின்றன . ஆட்சிக்கு வந்தால் அனைவருக்குமான அரசை எப்படி இவர்கள் நடத்துவார்கள் ?.

 


இதுபோன்ற வன்முறைகளுக்கு காவல்துறையின் அமைதியும் மிக முக்கிய காரணமாக அமைகின்றன .

 


 



ஒவ்வொரு காலகட்டத்திலும் சுயநல சக்திகள் சாதிய வன்முறைகளை கட்டவிழ்த்துக்கொண்டுதான் இருக்கின்றன . பொதுமக்களாகிய நாம்தான் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம் . இப்போதைய சூழலில் நாம் அனைவருமே ஏதாவது ஒரு சாத்தியப்பின்னணியில் இருந்து வந்தவர்களாகவே இருக்கின்றோம் . அதற்காக நாமும் வன்முறைக்கும்பல்களோடு சேர்ந்துகொண்டு தாக்குதல்களில் ஈடுபடவேண்டும் என்கிற அவசியம் இல்லை .

சமூக வலைதளங்கள் கட்டற்ற சுதந்திரத்தை கொண்டிருக்கக்கூடிய சூழலில் எவரும் வன்முறை கருத்துக்களை பகிர முடியும். ஒவ்வொன்றிற்கும் வன்முறைதான் தீர்வென்றால் தினமும் நாம் போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான் .


சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள் !



வன்முறையை தூண்டும் விதமாக கருத்துக்களை பகிர்வோரை  காவல்துறை தண்டிக்க வேண்டியதும் அவசியம்.

 


பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *