குடியுரிமை சட்ட திருத்த மசோதா – அசாம் ஏன் வலிமையாக எதிர்க்கிறது?
முஸ்லீம் மதத்தவர் விடுபட்டதற்காக மட்டும் இம்மசோதா எதிர்க்கப்படவில்லை என்பதனை புரிய வைப்பதற்காகவும் ஏன் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் இம்மசோதாவை எதிர்க்கின்றன என்பது பற்றியும் புரிதலை ஏற்படுத்திடவே இந்தப்பதிவு.
மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த மசோதாவில் முஸ்லீம் மதத்தவரை விட்டுவிட்டது, இலங்கை தமிழர்களை விட்டுவிட்டது உள்ளிட்ட காரணங்களுக்காகவே தமிழகத்தில் இருக்கின்ற கட்சிகள் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால் இந்த குடியுரிமை திருத்த மசோதாவை மிக தீவிரமாக எதிர்த்து வருகின்ற அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் இதே காரணத்திற்க்காக எதிர்க்கின்றனவா என்றால், நிச்சயமாக இல்லை. அவை வேறு சில காரணங்களுக்காகவே இம்மசோதாவை எதிர்க்கின்றன. முஸ்லீம் மதத்தவர் விடுபட்டதற்காக மட்டும் இம்மசோதா எதிர்க்கப்படவில்லை என்பதனை புரிய வைப்பதற்காகவும் ஏன் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் இம்மசோதாவை எதிர்க்கின்றன என்பது பற்றியும் புரிதலை ஏற்படுத்திடவே இந்தப்பதிவு.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா என்ன சொல்கிறது?
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இசுலாமியர் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் போன்றவர்கள் இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும். தற்போது தொடர்ந்து 5 ஆண்டுகள் இடையீடுயின்றி இந்தியாவில் வாழ்ந்தவர்களுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படுகிறது. தற்போதைய குடியுரிமை சட்டத் திருத்தத்தில் 5 ஆண்டுகள் இந்தியாவில் தொடர்ந்து வாழும் இசுலாமியர் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இந்த சட்ட திருத்த மசோதா, 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சில சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள வகை செய்கிறது.
தமிழகம் ஏன் எதிர்க்கிறது?
இந்தியாவின் அடிப்படை கொள்கையே மதசார்பின்மை தான். அப்படி இருக்கும் போது முஸ்லீம் மதம் தவிர்த்து பிற மதங்களை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது எப்படி இந்திய இறையாண்மைக்கு உகந்ததாக இருக்கும் என்பது முதல் எதிர்ப்புக்கு காரணம். அடுத்தது, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இந்த மூன்று நாடுகளில் இருந்து வந்தவர்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஏன் பிற நாடுகள் சேர்க்கப்படவில்லை, குறிப்பாக இலங்கை ஏன் சேர்க்கப்படவில்லை என்பது எதிர்ப்புக்கு இரண்டாம் காரணம்.
அசாம் ஏன் எதிர்க்கிறது?
இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பதற்கு அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் முஸ்லீம் மதத்தவர் விடுபட்டதற்காக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் அசாம் உள்ளிட்ட மாநிலத்தவர் இந்த மசோதாவை நிறைவேற்றியதற்காகவே எதிர்க்கிறார்கள். இந்த வேறுபாட்டை புரிந்துகொள்வது அவசியம். வெளிநாட்டவர் இந்தியாவில் குடியேறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகப்படியான மக்கள் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தான் குடியேறுவார்கள். அப்படி அதிகப்படியான மக்கள் குடியேறிக்கொண்டே வருவதனால் தங்களுடைய உரிமை மற்றும் கலாச்சாரம் பறிபோவதாக கருதிய அசாம் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இதனை அடுத்து அசாம் மாநிலத்துடன் மத்திய அரசு ஒரு ஒப்பந்தம்செய்துகொண்டது . அதன்படி மார்ச் 24 , 1971 அன்றோ அல்லது அதற்க்கு முன்னதாகவோ இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி குடியேறியவர்கள் இந்திய குடியுரிமை பெற தகுதி வாய்ந்தவர்கள். அதற்கு பிறகு வந்தவர்களால் அப்படி பெற முடியாது என இந்த ஒப்பந்தம் தெளிவாக வரையறுத்தது. அதற்கான பட்டியல் கூட அண்மையில் வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது குடியுரிமை சட்ட திருத்த மசோதா குடியுரிமை பெறுவதற்கு இருந்த தேதியை மாற்றி 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என கூறி இருக்கிறது. இங்கு தான் அசாம் மக்களுக்கு பிரச்சனை எழுகிறது. தங்களுடன் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த ஒப்பந்தம் மீறப்படுகிறது என அவர்கள் கருதியதால் மீண்டும் தங்களது வேலைவாய்ப்பு மற்றும் கலாச்சாரத்திற்கு ஆபத்து நேரும் என கருதியதால் இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா – பாமரன் கருத்து
பாகிஸ்தான் தன்னை முஸ்லீம் மத நாடு என பிரகடனப்படுத்திக்கொண்ட போது இந்தியா அனைத்து மதத்தவருக்குமான குடியரசாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டது. மத சார்பின்மை தான் இந்தியாவின் பலம் என்பதனை குழந்தை வயது முதல் நாம் படித்து உணர்ந்து வருகிறோம். அப்படிப்பட்ட சூழலில் குறிப்பிட்ட மதத்தை மட்டும் பட்டியலில் இருந்து புறந்தள்ளி இருப்பது தேவை இல்லாதது என்றே நான் கருதுகிறேன். அதேசமயத்தில் இங்கு ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும், மதத்தின் காரணமாக புண்படுத்தப்பட்டு வருகிறவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவே குடியுரிமை சட்ட மசோதா வழிவகை செய்கிறது, அரசியல் காரணங்களுக்காக வருகிறவர்களுக்கு அல்ல, இதனை நாம் உணர வேண்டும். இதில் தான் இலங்கை, ரோகிங்கியா முஸ்லிம்கள் வருவதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் வாதமும் அதுவாகத்தான் இருக்கிறது, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுமே முஸ்லீம் நாடுகள், ஆகவே அங்கு முஸ்லீம் மதத்தவர் “மதம்” சார்ந்து துன்புறுத்தப்பட வாய்ப்பில்லை என்கிறது மத்திய அரசு. சரி என்ன செய்யலாம், இந்தியாவை விரும்பி, நம்பி வந்துவிட்ட முஸ்லீம் மக்களை கைவிடுவது என்பது முறையற்றது. ஆகவே முன்பே வந்துவிட்டவர்களுக்கு குடியுரிமையை வழங்கி நமது பரந்த மனதை நிரூபிக்க வேண்டும். அதேசமயம், இனி இதுபோன்றதொரு வாய்ப்பு வழங்கப்படாது என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். அசாம் உள்ளிட்ட மாநிலத்தவர் முன்வைக்கின்ற கோரிக்கையும் கவனத்தில் கொள்ளவேண்டியதுதான். அவர்களுடைய வேலைவாய்ப்பு, கலாச்சாரம் உள்ளிட்டவை பாதிப்படையாமல் இதை செய்துமுடிக்க வேண்டும். இந்த பிரச்சனையை புரிந்துகொள்வதற்கும் கருத்து சொல்வதற்கும் பறந்த அறிவும் அனுபவமும் இருக்க வேண்டும் என்பதனை நான் அறிவேன். எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன். உங்களது கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!
Pingback:NRC,CAA,CAB முழு விளக்கம் தமிழில் | அசாம் ஏன் கொதிக்கிறது?| முஸ்லீம் மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? – பா