யார் இந்த அயோத்திதாசர்? அம்பேத்கார், பெரியாரின் முன்னோடி எப்படி?

> சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு மாற்று பௌத்தத்தை அடைவது என்ற முடிவை முன்மொழிவதற்கு முன்பாகவே அதனை முன்மொழிந்தவர் அயோத்திதாசர்.

> சாதிய ஏற்றத்தாழ்வுகளை விட்டொழித்து, சம்பிரதாய சடங்குகளை தாண்டி தமிழ் சமூகத்தை நவீனத்துவமாக்கிட பாடுபட்டவர்களில் பெரியாருக்கு முன்னோடி அயோத்திதாசர்.

> தமிழன் ஒன்றுக்கும் லாயக்கு இல்லாதவன் என்ற கோவத்தில் “ஒரு பைசாத் தமிழன்” என்ற பத்திரிகையை நடத்தியவர் அயோத்திதாசர்.

பெரியார், அம்பேத்கார் போன்றோர் கொண்டாடப்பட்டது போல அயோத்திதாசர் கொண்டாடப்படவில்லை என்கிற வருத்தம் அவரை அறிந்தவர்களுக்கு உண்டு. அதற்கு மிக முக்கியமான காரணம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பியவர்களுள் முதன்மையானவர் அயோத்திதாசர் என்பதனால் தான். ஒரு வடிவத்தில் அல்லாமல் எழுத்து வடிவில், பத்திரிக்கை வடிவில், போராட்ட வடிவில் என பல வடிவங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியிருக்கிறார். அவர் பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்தி அதன் முடிவில் தற்போது தாழ்த்தப்பட்டவர்கள் என அறியப்படுகிறவர்களும் முன்பு கல்வியில் சிறந்தவர்களாகவும் பண்பாட்டில் உயர்ந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என நிறுவியிருக்கிறார். சாதி, மதம் என்ற எதுவுமே இல்லாத தமிழ் சமூகம் தற்போது இவற்றால் பிரிந்து கிடக்கக்கூடாது. அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றைக்குடையின் கீழ் ஒன்றுசேர வேண்டும் என கூக்குரலை முதலில் எழுப்பியவர் அயோத்திதாசர். ஆகவே தான் அவரை நாம் அறிய வேண்டும் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

அயோத்திதாசர் நூல்கள் pdf Download Here

காத்தவராயன் பிறந்தார்

இந்தியாவை ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதிநிதியாக மெட்ராஸ் மாகாணத்தில் வசித்து வந்தார் ஜார்ஜ் ஆரிங்டன். அவருக்கு வீட்டு உதவியாளராகவும் சமையல்காரராகவும் சித்தவைத்தியர் கந்தப்பன் இருந்துவந்தார். சித்தவைத்தியர் கந்தப்பனின் மகன் கந்தசாமி. அவரும் சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கினார். அவருக்கு 1845 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் அன்று சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் மகனாக பிறந்தார் காத்தவராயன். ஓரளவிற்கு வசதி வாய்ப்போடு வாழ்ந்த குடும்பம் தான் அது. காத்தவராயன் வளர்ந்து பெரியவன் ஆனதும் கல்வி கற்க பன்மொழிப் புலவர் வல்லக்காளத்தி அயோத்திதாசக் கவிராயர் அவர்களின் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அப்போது இருந்தது திண்ணைப்பள்ளி தான். 

தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார். தன் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தனது பெயரை அயோத்திதாசர் என மாற்றிக் கொண்டார்.

துயரம் தந்த முதல் திருமணம்

சென்னை பிரதிநிதியாக இருந்த ஜார்ஜ் ஆரிங்டன் பணி நிமித்தமாக நீலகிரிக்கு மாற்றப்பட்டார். இதனால் அயோத்திதாசர் குடும்பமும் இடம்பெயர வேண்டிய சூழல் உண்டானது. அயோத்திதாசர் அவர்களுக்கு திருமண வயது வந்தவுடன் தோடர் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு கண்பார்வை அற்ற குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் சில நாட்களிலேயே அது இறந்தும் போனது. குழந்தை இறந்த துயரில் இருந்து மீள முடியாமல் அயோத்திதாசரின் மனைவியும் இறந்து போனார். இதனால் ஏற்பட்ட துக்கத்தை போக்க பர்மாவிற்கு சென்றுவிட்டார் அயோத்திதாசர். பின்னர் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் தான் நாடு திரும்பினார். இங்கு வந்தவுடன் தனலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவதாக மணம் புரிந்துகொள்கிறார். தனலட்சிமியின் அண்ணன் தான் பெரிதும் அறியப்பட்ட இரட்டைமலை சீனிவாசன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்புதல்

ஆதிசங்கரரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அயோத்திதாசர் “அத்வைனந்தா சபை” என்ற அமைப்பை தோற்றுவித்து கொள்கைகளை பரப்பும் வேலைகளைச் செய்தார் . பின்னர் ‘நாரதீய சங்கைத் தெளிவு’ எனும் ஓலைச்சுவடியை அவர் படித்தபின்பு தான் அவருக்குள் பெரும் சிந்தனை மாற்றம் ஏற்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்த காலகட்டங்களில் பிற்படுத்தப்பட்ட தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தீண்டாமை கொடுமைகள் அவரை கொதித்தெழச் செய்தன. தலித் மக்கள் சாதிய கொடுமைகளில் இருந்து விடுபட பௌத்தம் ஒன்றே தீர்வு என முழங்கினார். பின்னாட்களில் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு பௌத்தம் ஒன்றே தீர்வு என அம்பேத்காரும் கூறினார் என்பது கவனிக்கத்தக்கது. 

 

1891ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், திராவிட மகாஜன சபையின் சார்பாக, ஊட்டியில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. இதில், “பறையர் எனக் கூறுவது குற்றம் எனச் சட்டம் இயற்ற வேண்டும், பொது இடங்களில் நுழைய உரிமை அளிக்க வேண்டும், கல்வி வசதி செய்துதர வேண்டும்” என்பன உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு காங்கிரஸ் செயலாளருக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் அனுப்பப்பட்டது. அதையடுத்து, 1892 ஏப்ரல் மாதம், சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற சென்னை மகாஜன சபை மாநாட்டில், நீலகிரி பிரதிநிதியாக அயோத்திதாசர்  கலந்துகொண்டார். 

 

இம்மாநாட்டில்தான், ஒடுக்கப்பட்டோருக்கு இலவசக் கல்வி, புறம்போக்கு தரிசு நிலம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். மேலும், ‘இறைவனை வழிபட எங்கள் மக்களைக் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்’ என அவர் கேட்டபோது, அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று “அவரை வெளியே துரத்துங்கள்” எனச் சத்தம் போட்டனர். “உங்களுக்கு மதுரைவீரன் சாமி, காட்டேரி சாமி, கருப்பண்ணசாமி கொடுத்திருக்கிறோம். சிவன் சாமி, விஷ்ணு சாமி எல்லாம் உங்கள் குலத்தோருக்கு உரியது அல்ல” எனப் பதில் கூறினர். அப்படியெனில், “எங்களுக்கு உங்கள் சாமிகள் வேண்டாம், எங்களுக்கு இலவசக் கல்வியும் நிலமற்றவர்களுக்கு நிலமும் கொடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

இவரது முயற்சியின் பலனால் தான் 1893 இல் தாழ்த்தப்பட்ட மக்களிடம் கல்வி பரவலாக்கப்பட வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. பின்னாட்களில் பஞ்சமி நிலம் என்ற ஒன்று உருவாகக் காரணமாக இருந்ததும் அவரது கோரிக்கை தான்.

தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாறு மீளுருவாக்கம்

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வரலாறு என்பதே கிடையாது, அவர்களுக்கென பண்பாடு கிடையாது, அடையாளம் கிடையாது என்பது தான் அப்போதைய எண்ணவோட்டமாக இருந்தது. இதனை மாற்றி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பண்பாடு இருந்துள்ளது, சாதி மத பாகுபாட்டால் அவர்கள் முடக்கப்படுவதற்கு முன்பு அவர்களும் கல்வி அறிவு உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதனை ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கு பெரிதும் முயற்சி செய்தார் அயோத்திதாசர். இதற்காக அவர் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சூளாமணி, திருக்குறள், நன்னூல், வீரசோழியம், நாலடியார், காக்கை பாடினியம், நாட்டார் வழக்கு நூல்கள் போன்றவற்றை ஆய்வு செய்து அதனை வெற்றிகரமாக செய்தார்.

ஒரு பைசாத் தமிழன் பத்திரிக்கை

தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என பெரியார் கூறியது மட்டும் தான் தற்போது பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் தமிழர்கள் மீதான கோபத்தினால் “ஒரு பைசாத் தமிழன்” என்ற பத்திரிக்கையே நடத்தினார் அயோத்திதாசர். இந்தப்பெயருக்கு அவர் சொன்ன காரணம் “”ஒரு நயா பைசாவுக்குக் கூட தகுதியில்லாதவனாகத் தமிழன் இருந்துவருகிறான்” என்பது தான். ஒரு பொய்யை அல்லது புரட்டை ஆதாரபூர்வமாக நிறுவுவது தான் சிறந்தது என்பதை உணர்ந்து இருந்தார் அயோத்திதாசர். ஆகவே தான் அவர் அனைத்தையும் ஆராய்ச்சிகள், ஆய்வுகள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். உதாரணத்திற்கு, கார்த்திகை தீபம், தீபாவளி, பொங்கல், திருமணச் சடங்கு, இறுதிச் சடங்கு உள்ளிட்ட சடங்குகள் எல்லாம் பவுத்தம் வசம் இருந்தவை என்றும் காலப்போக்கில், இவையெல்லாம் எப்படி இந்துமயமானது என்பதையும் விளக்கி எழுதினார். இவையெல்லாம் அப்போதைய காலகட்டங்களில் பெரும் விவாதப்பொருளாக விளங்கியவை.

பல்துறை வைத்தியர்

தமிழ் சமூகத்தை பிடித்தாட்டிய சமூக நோய்க்கு ஒருபுறம் வைத்தியராக இருந்தார் அயோத்திதாசர். இன்னொருபுறம் தன் குடும்பபின்னணி காரணமாக சித்தமருத்துவ வைத்தியராகவும் சிறப்பாக செயல்பட்டார். இதுதவிர ஓலைச்சுவடி வாசிப்பு, நாள்கோள் கணிப்பு, ஜோதிடம், இலக்கிய பாண்டித்தியம் என பல விசயங்களில் திறமை கொண்டிருந்தார். திருவிக அவர்கள் முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தபோது அயோத்திதாசர் தன்னுடைய சித்தமருத்துவ வித்தையால் திருவிகவை குணப்படுத்தியதை திருவிக தன்னுடைய குறிப்புகளில் எழுதி வைத்துள்ளார். மக்கள் காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டபோது அவர்கள் அதில் இருந்து தப்பிக்க தேவையான மருத்துவ குறிப்புகளையும் தன்னுடைய பத்திரிகைகளில் எழுதினார். 

 

சாதிய நோய்க்கு எதிரான அயோத்திதாசரின் வைத்தியம் என்பது மிகவும் போற்றத்தக்கது. அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி மத, சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான தனது பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு வந்தார். 

திராவிட அரசியலின் முன்னோடி

அண்ணாவின் ஆங்கிலப்புலமை

திராவிட மகாஜன சபை இவரால் கி.பி. 1891 தொடங்கப்பட்டது. அயோத்தி தாசர் 1885 ஆண்டிலேயே திராவிட பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கினார். அவர் கி.பி. 1886ஆம் ஆண்டில் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றார். அவர்கள் யாவரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தையும் முன்வைத்தார். இதனால் இவர் திராவிட கருத்தியலின் முன்னோடி என அறியப்பட்டார். திராவிட மகாஜன சபையை நிறுவி திராவிட அரசியலைத் தொடங்கி வைத்ததால் திராவிட அரசியலின் முன்னோடி எனவும் கூறப்படுகிறார்.

அயோத்திதாசர் தன்னுடைய 68 ஆம் வயதில் [மே 05, 1914] இயற்கை எய்தினார். 






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *