Appreciation for Sengottaiyan | மரம் வளர்த்தால் மதிப்பெண் – சபாஷ் செங்கோட்டையன் சார்
மரம் வளர்த்தால் மதிப்பெண்
தற்போது வெளியிட இருக்கக்கூடிய பாடதிட்டத்தில் மாணவர்கள் மரம் வளர்க்க வேண்டும் எனவும் அதனை ஆய்வு செய்து அதற்கேற்றபடி மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார் . இன்றைய சூழலில் மரம் வளர்ப்பதை ஊக்குவிப்பது நிலையான சுற்றுசூழல் முன்னேற்றத்திற்கு உதவும் என்பது அனைவரும் அறிந்தது .
அரசு விழாக்களில் சம்பிரதாயமாக மரம் நடுவதை விடவும் , சமூக செயற்பாட்டாளர்கள் மரம் நடுவதை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான மரங்களை மாணவர்களால் மட்டுமே நட இயலும் . மேலும் ஆண்டு முழுவதும் அவர்களின் பராமரிப்பில் மரம் இருப்பதால் நிச்சயமாக அதற்கு ஆபத்து நேராது . இந்த திட்டத்தினால் மாணவர்களுக்கு மதிப்பெண் கிடைப்பதோடு மட்டுமில்லாமல் இயற்கையோடு பயணிக்க கூடிய வாய்ப்பும் அறிவும் நிச்சயமாக கிடைக்கும் .
செங்கோட்டையன் அவர்களோடு சேர்த்து சிறந்த கல்வித்திட்டத்தை உருவாக்கிட பங்களிப்பு செய்துள்ள அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுகள் .
ஆலோசனை சொல்ல அதிகாரிக்ள் இருந்தாலும் அதனை கேட்டு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் தலைமையால் தான் சிறப்பாக செயல்பட முடியும் . அந்த வகையில் சிறப்பாக செயல்படும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள் .
தற்போது நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய அதிமுக ஆட்சியில் குறிப்பிடும்படியாக பள்ளிக்கல்வித்துறை மிக சிறப்பாக செயல்படுகிறது என்றே கூறலாம் .
நீட் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதும் தமிழகத்தில் உணவு , உறைவிடத்துடன் கூடிய நீட் பயிற்சி மைய்யங்கள் திறந்ததாகட்டும் , நீட் தேர்வினை எதிர்கொள்ளவும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி தரத்தை உயர்த்தும் பொருட்டு எடுக்கப்படுகின்ற முயற்சிகளாகட்டும் அனைத்துமே சிறப்பாக இருப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர் .
ஜெயலலிதா ஆட்சி பொறுப்பில் இருந்தபோது நீதிமன்ற கண்டனங்களை தாண்டியும் அண்ணா நூற்றாண்டு நூலகம் வேண்டுமென்றே கவனிக்கப்படாமல் இருந்துவந்தது . செங்கோட்டையன் அமைச்சராக பதவியேற்றது முதல் மீண்டும் சிறப்பாக செயல்பட துவங்கியிருக்கின்றது அண்ணா நூற்றாண்டு நூலகம் . இதற்கு உதாரணமாக 50 வாரங்களை கடந்துவிட்ட சனிக்கிழமை தோரும் வாரம் ஒரு ஆளுமையுடனான பொன்மாலை பொழுது நிகழ்ச்சியை கூறலாம் .
தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் .
பாமரன் கருத்து