இரண்டாவது வேலை/வருமானம் அவசியமானது
வேலை பறிபோய்விடும் என்ற அச்சத்தினால் பல சமயங்களில் நாம் நமது தனித்தன்மையையும் சுய மரியாதையையும் கூட அடமானம் வைக்கக்கூடிய அவலம் ஏற்படுகிறது.
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளுக்கு நன்றாகப் படி, நல்ல வேலைக்கு போ என்று தான் சிறுவயதில் இருந்தே சொல்லிக்கொடுக்கிறார்கள். நாம் என்ன செய்கிறோம், வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் ஒரு வேலையை பிடித்துக்கொண்டு அந்த வேலையிலேயே 60 வயது வரை பணியாற்றிவிட்டு ஓய்வு பெறுவதை வழக்கப்படுத்திக்கொள்கிறோம். அரசு வேலையென்றால் பணி நிரந்தரம் என்ற ஒரு வசதி இருக்கிறது.
ஆனால் தனியார் வேலையில் அப்படி எந்தவொரு உறுதியும் கொடுக்கப்படுவது இல்லை. நீங்கள் எந்த நேரமும் எந்த காரணத்திற்க்காகவும் வேலையில் இருந்து அனுப்பப்படலாம் என்ற அச்ச உணர்வு இருந்துகொண்டே இருக்கும். வேலை பறிபோய்விடும் என்ற அச்சத்தினால் பல சமயங்களில் நாம் நமது தனித்தன்மையையும் சுய மரியாதையையும் கூட அடமானம் வைக்கக்கூடிய அவலம் ஏற்படுகிறது. கொரோனா போன்ற சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நன்றாக பணியாற்றிவரும் பணியாளர்களைக்கூட பணியை விட்டு நீக்கும் நிலைக்கு நிறுவனங்களும் வந்து சேர்கின்றன.
வேலை இருக்கிறது என்ற நம்பிக்கையில் வாங்கிய கடன்களும் ஏற்படுத்திக்கொண்ட வசதிகளும் ஒரு போன் காலில் தூள் தூளாக போகும் போது உச்சகட்ட மன விரக்திக்கு பலர் சென்றுவிடுகின்றனர். தனி நபராக இருக்கும் பட்சத்தில் இதில் இருந்து மீள்வது எளிமையானதாக இருக்கலாம். ஆனால் மனைவி, குழந்தைகள் என்றான பிறகு இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அடுத்த வேலை கிடைக்கும் வரைக்கும் குடும்பத்தை நகர்த்தி செல்லுவது நரகமாக மாறிவிடும். தனியார் வேலை என்பதில் இந்தவொரு சிக்கல் எப்போதும் இருக்கக்கூடியது தான். ஆகவே இதனை புதியதுபோல எண்ணி அச்சப்பட தேவையில்லை. அதே சமயம், இதனை ஒதுக்கிவிட்டு போவதும் முட்டாள்தனமான செய்கையில் ஒன்றாகும்.
இந்த சூழ்நிலையில் இருந்து நாம் தப்பித்துக்கொள்வதற்கு இரண்டு வழிகள் இருப்பதாக நான் நினைக்கிறன். முதலாவது, வேலை திடீரென்று பறிபோனால் அடுத்த வேலை கிடைக்கும் வரைக்குமான கால கட்டத்தை முன்பு போலவே நகர்த்துவதற்கு தேவையான சேமிப்பை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பது, இரண்டாவது – ஒரே வேலையை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்காமல் இரண்டாவதாக ஒரு சிறிய வேலையை சிறிது சிறிதாக உருவாக்கிக்கொள்வது.
இரண்டாவது வேலை எப்படி இருக்கலாம்?
இரண்டாவது வேலை என்று சொன்னவுடன் அதிர்ச்சியடைந்துவிட வேண்டாம். ஒவ்வொருவரும் தற்போது படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையையோ அல்லது அது சம்பந்தப்பட்ட வேலையையோ தான் பார்த்து வருகிறோம். ஆனால் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமான, பிடித்தமான வேலை என்றவொன்று நிச்சயமாக அனைவருக்குமே இருக்கும். சிலருக்கு புகைப்படம் எடுப்பது பிடித்திருக்கும், சிலருக்கு ஊர் சுற்றுவது பிடித்திருக்கும், சிலருக்கு உடற்பயிற்சி செய்வது பிடித்திருக்கும். இதுபோன்று ஏகப்பட்ட விசயங்கள் பிடித்திருக்கலாம்.
இப்படி உங்களுக்கு பிடித்தமான விசயம் ஒன்றினை பொழுதுபோக்குக்காக மட்டும் செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதில் கொஞ்சமேனும் அக்கறை எடுத்து சில விசயங்களை கற்றுக்கொள்ளுங்கள். அதையே முழு நேரத்தொழிலாக செய்பவர்களிடம் சேர்ந்து அந்த தொழில் பற்றிய அறிமுகங்களை சேகரித்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, உங்களுக்கு புகைப்படம் எடுப்பது பிடித்திருக்கும் என்றால் திருமணத்திற்கு புகைப்படம் எடுப்பவர்களோடு சேர்ந்துகொண்டு ஒரு ஆல்பம் எப்படி தயாரிக்கிறார்கள், வெளியே எங்கெல்லாம் சென்று புகைப்படம் எடுக்கிறார்கள் போன்றவற்றை தெரிந்துகொள்ளுங்கள். பிறகு அவர்களோடு சேர்ந்துகொண்டு நேரம் கிடைக்கும் போது பணியாற்ற துவங்குங்கள்.
இப்படி உங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் நீங்கள் உங்களுக்கு பிடித்தமான வேலையை இரண்டாவது வேலையாக பார்க்க துவங்கினால் ஆரம்பத்தில் உங்களுக்கு சிறு வருமானம் கிடைத்தாலும் கூட பிற்காலத்தில் பக்கபலமாக அமையும். ஒருவேளை இரண்டாவது வேலையில் அதிக லாபம் கிடைப்பதாக தோன்றினால் நம்பிக்கை இருந்தால் நீங்கள் முதலாவது வேலையை விட்டுவிட்டு உங்களுக்கு பிடித்தமான இரண்டாவது வேலையை முதன்மையானதாக மாற்றிக்கொள்ளலாம்.
ஏதோ ஒரு சந்தர்பத்தினால் நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் முதலாவது வேலை பறிபோனாலும் கூட இரண்டாவது வேலையின் மூலமாக கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு உங்களால் வாழ்க்கையை நிம்மதியாக நகர்த்திச்செல்ல முடியும். இரண்டாவது வேலை எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். ஆகவே இரண்டாவது வேலை அவசியமானது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் இரண்டாவது வேலை செய்கின்ற நபரா அல்லது அதற்காக முயற்சி செய்கின்ற நபரா அப்படியென்றால் அந்த வேலை பற்றி கமெண்டில் பதிவிடுங்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!