ஜெய்ஸ்வால் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?? Yashasvi Jaiswal’s Success Story in tamil
காலையில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி சதம் அடித்துவிட்டு மாலையில் பானிபூரி விற்கும் கடையில் வேலை பார்ப்பேன். என்னோடு விளையாடிய நண்பர்கள் கடைக்கு வரும் போது எனக்கு கடினமாக இருக்கும். ஆனால் அதற்காக நான் கவலைப்படவில்லை – India’s U-19 World Cup Star Yashasvi Jaiswal
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதன் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு சுருண்டது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வென்றனர். இதில் தான் யாசவி ஜெய்ஸ்வால் 113 பந்துகளில் 105 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். இவரது ஆட்டத்தை இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூட வெகுவாக பாராட்டினார் .
இப்போது IPL போட்டிகளில் கலக்கி வருகிறார் ஜெய்ஷ்வால்.
பல்வேறு ஜாம்பவான்கள் ஜெய்ஸ்வால் ஐ பாராட்டுவதற்கு மிகமுக்கியக்காரணம் அவர் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்து இந்த நிலையை அடைந்திருப்பதுதான். கழிப்பறை,மின்சாரவசதி இல்லாத டெண்ட் கொட்டகையில் தங்கி கிரிக்கெட் விளையாட போராடியதில் துவங்குகிறது ஜெய்ஸ்வால் வாழ்க்கை .
யார் இந்த யாசவி ஜெய்ஸ்வால்?
உத்திரபிரதேசத்தில் பிறந்த யாசவி ஜெய்ஸ்வாலுக்கு கிரிக்கெட் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாகவும் சச்சின் விளையாட்டுகளை பார்த்து வளர்ந்தபடியால் மும்பை அணிக்காக எப்படியேனும் விளையாடி விட வேண்டும் என்ற கனவோடும் தனது அப்பாவுடன் மும்மைக்கு வந்தார். அங்கே இருக்கக்கூடிய மிகப்பெரிய மைதானமாக விளங்கக்கூடிய ஆசாத் மைதானத்தில் [Azad Maidan] விளையாடுவது மற்றும் பயிற்சி எடுத்துக்கொள்வது என ஆரம்பித்தார். இது நமக்கு சரிபட்டுவராது வா நாம் நமது ஊருக்கே போய்விடலாம் என அவரது அப்பா அழைக்க, நீங்கள் போய்வாருங்கள் நான் இங்கிருந்தே விளையாடுகிறேன் என அப்பாவிடம் தெரிவிக்க அவரும் ஜெய்ஸ்வாலை இங்கேயே விட்டுவிட்டு போய்விட்டார்.
சின்ன சின்ன வேலைகளை பார்த்துக்கொண்டு அதில் கிடைக்கக்கூடிய பணத்தை வைத்து கிரிக்கெட் விளையாடிவந்தார் ஜெய்ஸ்வால். தங்குவதற்கு ஒரு காலகட்டத்தில் இடம் இல்லாமல் போனது. அப்போது அனைத்து உடைமைகளுடன் ஆசாத் மைதானத்துக்கு வந்துவிட்டேன். அப்போது அங்கே இருந்த பப்பு சார் இங்கே ஒரு மேட்ச் நடக்க இருக்கிறது. இதில் நீ சிறப்பாக விளையாடிவிட்டால் நீ தங்குவதற்கு ஒரு டெண்ட் கிடைக்கும் என சொல்கிறார். அந்த மேட்சில் உள்ளபடியே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் டெண்டை பெற்றார். ஆனால் அந்த டெண்டில் கழிவறை வசதியோ மின்சார வசதியோ இல்லை. அப்போதைக்கு அதுவே பெரிதானதாக இருந்தது என்கிறார் ஜெய்ஸ்வால்.
மும்பை அணியில் ஜெய்ஸ்வால்
அப்போதைய சூழலில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வாழ்வாதாரத்திற்கு தேவையான பணம் கிடைக்கவில்லை. வீட்டில் இருந்தும் பணம் பெறக்கூடிய சூழலுமில்லை. ஆகையால் மாலை நேரங்களில் பானிபூரி கடையில் வேலைபார்த்துவந்தார் ஜெய்ஸ்வால். காலையில் மைதானத்தில் சதம் அடித்துவிட்டு மாலையில் பானிபூரி விற்பேன், அது எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் காலையில் என்னோடு விளையாடியவர்கள் பானிபூரி சாப்பிட நான் வேலைபார்க்கும் கடைக்கு வரும்போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும் என்கிறார் ஜெய்ஸ்வால்.
கிரிக்கெட்டில் எந்தவித சொதப்பலும் இல்லாமல் சிறப்பாக விளையாடிவந்தார் ஜெய்ஸ்வால். ஒருநாள் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுவதை ஆஷாத் மைதானத்தின் பயிற்சியாளர் ஜிவாளா சிங் பார்த்துவிட அன்று மாற்றம் ஏற்பட துவங்கியது. பணத்தை பற்றி நீ கவலைப்படாதே கிரிக்கெட்டில் கவனம் செலுத்து என்ற பயிற்சியாளரின் ஊக்குவிப்பு ஜெய்ஸ்வால் பெரிய இடத்திற்கு செல்ல வாய்ப்பாக அமைந்தது.
ஆமாம் விஜய் ஹசாரே போட்டியில் மும்மை அணிக்காக விளையாட தேர்வானார் ஜெய்ஸ்வால். ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 154 பந்துகளில் 203 ரன்கள் விளாசி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டின் பார்வையை தனது பக்கம் திருப்பினார் ஜெய்ஸ்வால்.
இந்திய அணிக்காக விளையாடுவார் ஜெய்ஸ்வால்
பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் குறிப்பிட்டது போல மிகவும் திறமையாக செயல்படும் ஜெய்ஸ்வால் நிச்சயம் ஒருநாள் இந்திய அணிக்காக விளையாடுவார். இனி வறுமை அவரது வாழ்க்கையில் எட்டிப்பார்க்க வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிறது. ஏற்கனவே ஜெய்ஸ்வால் வருகிற IPL போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட 2.4 கோடிக்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதைக்கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிடித்ததை செய்ய எந்தவித கஷ்டத்தையும் பொறுத்துக்கொண்ட ஜெய்ஸ்வால் இன்னும் பல உயரங்களை தொடவேண்டும் என வாழ்த்துவோம். இளம் பிள்ளைகளுக்கு ஜெய்ஸ்வால் ஒரு ரோல்மாடல்!