அந்த 45 நொடிகளில் ….
எதிர்காலத்தை நினைத்து நினைத்தே நிகழ்காலத்தில் சிரிக்காத மனிதர்கள் அதிகரித்துவிட்டார்கள்
இரவு 10.15PM இருக்கும் , திநகருக்கு அருகிலே இருக்கும் ஒரு சிக்னலில் டூவீலரை நிறுத்தினேன் .வழக்கம்போல வேலை முடித்து செல்வோர் , உணவு டெலிவரி செய்வோர் , கடைகளுக்கு சென்றுவிட்டு திரும்புவோர் என பலர் நின்றுகொண்டிருந்தனர் .பெரிய தொழிற்சாலையில் வருவதற்கு குறையில்லாமல் புகையும் சத்தமும் வெளியிடப்பட்டுக்கொண்டு இருந்தது. பச்சை சிக்னல் விழுவதற்கு 45 நொடிகள் இருந்தாலும் வாகனத்தை நிறுத்துவதற்கு யாருக்கும் மனமில்லை.
நொடிகளை கூட வீணாக்காதவர்களை காணவேண்டும் என்றால் சிக்னலில் வந்து பார்க்கலாம். கண் கொட்ட கொட்ட பார்த்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் எனக்கோ அங்கும் இங்கும் ஒரு சுற்று சுற்றி பார்ப்பது வழக்கமான ஒன்று.
சாலையின் ஓரத்தில் எப்போதும் பிசியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் தள்ளுவண்டி கடையின் அருகே 35 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா அமர்ந்திருந்தார் , அவருக்கு அருகே விரிக்கப்பட்டிருந்த துண்டில் இரண்டு குழந்தைகள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தன . அந்த குழந்தைகளின் அம்மா நாம் பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தியதாக நினைவிருக்கும் மிகச்சிறிய திரை கொண்ட மொபைலில் ஒரு வீடியோவை பார்த்துக்கொண்டு இருந்தார் . வாகன சத்தத்தில் அவரால் வீடியோவை பார்க்க முடிந்திருக்குமே தவிர சத்தத்தை கேட்டிருக்க முடியாது . ஆனாலும் அவர் சுவாரஷ்யமாக பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார் .
அவர்கள் வீடில்லாத ஏழைகளா அல்லது அவரது அப்பா இங்கே சிறிது நேரம் இருங்கள் என சொல்லிவிட்டு சென்றதனால் இருக்கிறார்களா அல்லது கணவரை பிடிக்காமல் அந்த பெண் குழந்தைகளுடன் வெளியே வந்துவிட்டாரா அல்லது இவை ஏதுமல்லாமல் வேறு காரணத்தினாலா என தெரியவில்லை. அடுத்தநாள் இரவு நான் செல்லும்போது அவர்கள் அங்கில்லை . ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற செய்திமட்டும் இருக்கின்றது .
குறைந்தபட்சம் ஒரு மின்விசிறியுடன் உறங்குவதற்கு ஓர் வீடு நமக்கு இருக்கின்றது . மாதந்தோறும் சம்பளம் பெறுவதற்கு வேலை இருக்கின்றது . ஆனால் இன்னும் எதையோ தேடிக்கொண்டே இருக்கின்றோம் , எதிர்காலத்தை நினைத்து நினைத்து நிகழ்காலத்தை தொலைத்துக்கொண்டே வருகின்றோம் .
வாகன இரைச்சல்களைப்போல கஷ்டங்களும் சோதனைகளும் நம்மை சூழ்ந்துகொண்டாலும் வாழ்க்கையினை ரசித்து வாழ வேண்டும் , கவலைகளை மறந்து இன்புற வாழவேண்டும் . நம்மை விடவும் துன்பப்படுகிறவர்கள் இங்கே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் . நமக்கு கிடைத்திருப்பதை மிகப்பெரிய விசயமென நினைத்து மகிழ்வோடு வாழவேண்டும் என 45 நொடிகளில் நான் உணர்ந்தேன் ……
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!