மம்தா பானர்ஜி vs சிபிஐ மோதல் ஏன்? சிபிஐ ஐ மாநில அரசால் தடுக்க முடியுமா?

 


 

காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் நுழைந்து விசாரணை நடத்திட சிபிஐ அதிகாரிகள் முயன்றதை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிபிஐ க்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். ஏற்கனவே தங்களது மாநில எல்லைக்குள் சிபிஐ சிபிஐ அமைப்பிற்கு விசாரணை நடத்த கொடுத்திருந்த ஆதரவை திரும்ப பெற்று இருந்தது மேற்குவங்க அரசு. நாடு முழுமைக்கும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இந்த நிகழ்வில், மம்தா பானர்ஜி vs சிபிஐ மோதல் ஏன்? சிபிஐ ஐ மாநில அரசால் தடுக்க முடியுமா? என்பது போன்ற சில முக்கிய கேள்விகளுக்கு பதிலை காண்போம்.


மம்தா பானர்ஜி – சிபிஐ மோதல் ஏன்?

 

சாரதா நிதி நிறுவனம்

2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சாரதா நிதி நிறுவனம், பொது மக்களிடமிருந்து பெரும் முதலீட்டை பெற்றது. மிக குறுகிய காலத்தில் அதிக சொத்துமதிப்பினை இந்த நிறுவனம் பெற்றது. ஆனால் கொடுத்த வாக்குறுதி எதனையும் நிறைவேற்றவில்லை. தலைமறைவான அதன் நிறுவனர் சுதிப்தோ காஷ்மீர் பகுதியில் கைது செய்யப்பட்டார்.

 

2013 ஆம் ஆண்டு, சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி வழக்குகளை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது மேற்குவங்க அரசு, இதனை வழிநடத்தியவர் தான் இப்போது சிபிஐ விசாரிக்க முயன்ற காவல் ஆணையர் ராஜிவ் குமார்.

 

அதற்க்கு அடுத்த ஆண்டே (2014) இந்த வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைத்தது உச்சநீதிமன்றம்.

 

மேற்குவங்க அரசு நியமித்த விசாரணை அதிகாரியான ராஜிவ் குமார், அப்போது கைப்பற்றிய கணினி, பென்ட்ரைவ் போன்ற எலெட்ரானிக் பொருள்களை தங்களிடம் ஒப்படைக்கவில்லை. இதுதொடர்பான விசாரணைக்கு பல முறை ஆஜராகுமாறு அனுப்பிய கடிதங்களுக்கு அவர் ஆஜராகவில்லை என்பது சிபிஐ வைக்கின்ற குற்றச்சாட்டு.


 

மம்தா பானர்ஜி எதிர்ப்பு 

 

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கின்ற சூழலில் மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு வேண்டுமென்றே குழப்பத்தை வரவைக்கவே மத்திய ஏஜென்சிகள் மூலமாக தொந்தரவை அளித்துவருகின்றன என குற்றம் சாட்டினார். ஏற்கனவே சிபிஐ தங்களது மாநிலத்திற்குள் விசாரனை நடத்திட தடை விதித்திருந்த மேற்குவங்க அரசு, விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம் தேவையான அனுமதி சீட்டு எதுவும் இல்லை என கூறி அவர்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

 

தர்ணா நடத்தும் மம்தா பானர்ஜி
தர்ணா நடத்தும் மம்தா பானர்ஜி

 

காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் மம்தா , கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் மம்தாவிற்கு ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

 


 

சிபிஐ ஐ மாநில அரசால் தடுக்க முடியுமா?

 

 

இதுவரை சிபிஐ அமைப்பை பற்றிய சாதாரண மனிதனின் புரிதல் என்னவாக இருந்தது எனில், சிபிஐ நினைத்தால் யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம், எங்கு வேண்டுமானாலும் சோதனையிடலாம் என்பதுதான். ஆனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிபிஐ தங்களது மாநிலத்திற்குள் நுழைந்து விசாரணை நடத்த கொடுத்திருந்த அனுமதியை திரும்ப பெற்றவுடன் “சிபிஐ ஐ மாநில அரசால் தடுக்க முடியுமா?” என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது.

இதற்க்கு நேரிடையான பதில் “ஆமாம், சிபிஐ ஐ மாநில அரசால் தடுக்க முடியும்” ஆனால் சில விதிவிலக்குகளும் இருக்கின்றன.

சிபிஐ என்ற அமைப்பானது Delhi Special Police Establishment (DSPE) என்ற சட்டப்படி செயல்படுகிறது. அதன் விதிகளில் 6 ஆம் விதிப்படி சிபிஐ அமைப்பானது டெல்லி மற்றும் யூனியன் பிரதேசங்கள் தவிர்த்த பிற மாநிலங்களில் விசாரனை மேற்கொள்ள வேண்டும் எனில் அந்த மாநில அரசின் அனுமதியை பெற வேண்டியது அவசியம்.

The law:

“6. Consent of State Government to exercise of powers and jurisdiction.—Nothing contained in section 5 shall be deemed to enable any member of the Delhi Special Police Establishment to exercise powers and jurisdiction in any area in a State, not being a Union territory or railway area], without the consent of the Government of that State.”

(Section 6 of the Delhi Special Police Establishments Act, 1946)

 

ஆனால் உச்சநீதிமன்றமோ அல்லது உயர்நீதிமன்றமோ ஒரு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளிக்கின்ற பட்சத்தில் விசாரணையை மேற்கொள்ள முடியும்.


பாமரன் கருத்து 

 

நீதிமன்றம், தேர்தல் ஆணையம், காவல்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் இவை அனைத்துமே மக்களுக்காக செயல்படுகிற அமைப்புகள். அதனை அந்த அமைப்பில் பணியாற்றுகிறவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போது தான் இந்த அமைப்புகளின் மீதான நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்படும். சில அமைப்புகளின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவையாக இருப்பது அவசியம்.

அண்மையில் நடக்கின்ற நிகழ்வுகள் இந்த அமைப்புகளின் மீதான சந்தேகத்தை அதிகரிக்கவே செய்கின்றன. திடீரென சோதனை செய்கிறார்கள், அவ்வளவு பணம் மாட்டியது, இவ்வளவு ஆவணங்கள் சிக்கியது என அறிக்கை விடுகிறார்கள். ஆனால் அதற்க்கு பின்னர் அந்த வழக்கு என்ன ஆனது, பிடித்த பணம், ஆவணம் என்ன ஆனது என்பதே தெரியாமல் போய் விடுகிறது. இதனை பார்க்கும் போது இது ஏதோ அரசியல் அழுத்தத்திற்க்கான செயல்பாடாக இருக்கலாம் என்றே சாமானிய மக்களை சிந்திக்க வைக்கிறது . அதிகாரம் மிக்க, உண்மையை நிலை நாட்டுகின்ற அமைப்புகளின் மீதான சாதாரண மக்களின் சந்தேகம் மிகவும் ஆபத்தானது.

மேற்கு வங்கத்திற்குள் சிபிஐ அதிகாரிகளை உள்ளே விடலாமா கூடாதா என்பதனை நீதிமன்றம் முடிவு செய்யும். அந்த குறிப்பிட்ட அதிகாரி தவறு செய்திருக்கும் பட்சத்தில் மாநில அரசுக்கு இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி அதனை தடுக்க நினைத்தால் அதுவும் தவறு தான். அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆட்சியாளர்கள் ஜனநாயக அமைப்புகளை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர துடிக்க கூடாது. அந்த அமைப்புகளும் சுதந்திரமாக மக்களே இறுதி எஜமானர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.


பாமரன் கருத்து

One thought on “மம்தா பானர்ஜி vs சிபிஐ மோதல் ஏன்? சிபிஐ ஐ மாநில அரசால் தடுக்க முடியுமா?

  • February 5, 2019 at 2:05 pm
    Permalink

    Court Judgement :

    சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கில் விசாரணை நடத்திவரும் சிபிஐ அதிகாரிகள் முன் கொல்கத்தா போலீஸ் கமிஷனல் ராஜீவ் குமார் நேரில் ஆஜராகி, விசாரணைக்கு நம்பிக்கையான முறையில் ஒத்துழைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

    ரோஸ் சிட்பண்ட்ஸ், சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்குகளை விசாரித்து வந்த மேற்குவங்க போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார், முறையாக விசாரிக்கவில்லை என வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டன. விசாரணை ஆவணங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்தப் பலமுறை சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை. தற்போது கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனராக ராஜீவ் குமார் பணியாற்றி வருகிறார்.

    தவறவிடாதீர்

    மம்தா-சிபிஐ மோதல்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
    இந்நிலையில், நேற்று இரவு ராஜீவ் குமார் இல்லத்துக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த முயன்றனர். ஆனால், வீட்டு வாயிலில் பாதுகாப்பில் இருந்த கொல்கத்தா போலீஸாருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆவணங்கள் இல்லாமல் வந்திருப்பதாகக் கூறி சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தவிட்ட கொல்கத்தா போலீஸார், அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

    இந்நிலையில், சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் ஒத்துழைக்க உத்தரவிடக்கோரியும், , கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்ற தர்ணா போராட்டத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்றதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் கோரி இருந்தனர்.

    இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடினார்.

    அதன்பின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பின்வருமாறு உத்ரவுகளை பிறப்பித்தார், அதில், ” சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கை விசாரித்துவரும் சிபிஐ முன் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் நேரில் ஆஜராகி, விசாரணைக்கு நம்பகத்தன்மையான முறையில் ஒத்துழைக்க வேண்டும்.

    இந்த விசாரணை நடுநிலையான இடமான மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகரில் நடக்க வேண்டும். இந்த விசாரணையின் போது கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராகக் கடினமான நடவடிக்கைகள், கைது நடவடிக்கைகள் ஏதும் சிபிஐ எடுக்கக் கூடாது.

    இது தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வரும் 20-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். மேலும், போராட்டத்தில் பங்கேற்றதுக்காக சிபிஐ தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுதொடர்பாக வரும் 18-ம் தேதிக்குள் மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஆகியோர் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும்.

    இவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் வரும் 20-ம் தேதி இவர்கள் 3 பேரும் நேரில் ஆஜராக வேண்டுமா என்பது தெரிவிக்கப்படும் ” எனத் தெரிவித்தனர்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *