How to understand your Child? | குழந்தைகளை புரிந்துகொள்வது எப்படி?

அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதையே முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர். வளர்ந்து வருகிற கார்ப்பரேட் யுகத்தில் அதிக பணி சுமையினால் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிட முடியாத காரணத்தினால் பல பெற்றோர்களால் தங்களது குழந்தைகளை புரிந்துகொண்டு சிறப்பாக வளர்க்க முடிவது இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு குழந்தைகளை எளிமையாக புரிந்துகொள்ள சில ஐடியாக்கள் .

குழந்தை வளர்ப்பின் அடிப்படையே “குழந்தைகளை புரிந்துகொள்வது தான்”. எப்படி ஒரு செடி வளர அதற்கு தேவையான ஊட்டச்சத்து எது என்பதனை அறிந்துகொண்டு அதனை உரமாக போடுகிறோமோ அதனை போலவே தான் குழந்தைக்கு என்ன வேண்டுமோ அதனை புரிந்துகொண்டு கொடுக்க வேண்டும்.

சரி குழந்தைகளை புரிந்துகொள்வது எப்படி ?

குழந்தைகளை கவனியுங்கள் :

முதலில் நாம் ஒன்றில் தெளிவாக இருக்க வேண்டும், இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் பண்புகளில் ,திறன்களில் வேறுபாடு கொண்டுதான் இருக்கும். அதன்படியே தான் உங்களது குழந்தைக்கும் சில பண்புகள்,திறன்கள் இயற்கையாகவே இருக்கும். அவை நல்ல பண்புகளாக இருப்பின் அதில் அக்கறை செலுத்தி ஊக்குவிக்கலாம், தவறெனில் முறையாக பயிற்றுவித்து சரி செய்யலாம்.

நீங்கள் நினைப்பதை தான் குழந்தை செய்ய வேண்டும் என்பதை விட மிகப்பெரிய முட்டாள் தனம் வேறில்லை

உங்களது குழந்தையின் பண்புகளை, திறன்களை அறிந்துகொள்ள அவர்கள் விளையாடும் போது, சாப்பிடும் போது, தூங்கும் போது , நண்பர்களுடன் பேசும்போது, உங்களுடன் இருக்கும் போதும் என பல சந்தர்ப்பங்களில் அவர்களை கூர்ந்து கவனியுங்கள். அப்படி கவனிக்கும் போது அவர்கள் தொடர்ச்சியாக எந்த பண்பினை, பழக்கவழக்கத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்துகிறார்கள் என கவனிக்க வேண்டும்.

எந்த விளையாட்டை எளிமையாக கற்றுக்கொள்கிறார்கள்?
எது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது?
எந்த விஷயத்தில் ஆர்வமாக இருக்கிறார்கள்?
எந்த சூழ்நிலையில் கோவப்படுகிறார்கள்?

என அத்தனையையும் கவனித்திடுங்கள். அப்படி செய்திடும்போது உங்களது குழந்தையின் ஆர்வமும் அவர்களது பழக்கவழக்கங்களும் திறன்களும் கண்டிப்பாக வெளிப்படும்.

குழந்தைகளுடன் பேசுங்கள் :

குழந்தைகளுக்கு என்ன தெரியும்? என பாதி பெற்றோர்கள் அவர்களே முடிவெடுத்துக்கொண்டு குழந்தைகளுடன் பேசுவதே இல்லை. இது மிகவும் தவறு. ஒவ்வொரு குழந்தையுமே கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கும், அவர்களுடன் பேசும் போது அவர்களை பற்றி அதிகமாக அறிந்துகொள்ள முடியும். ஆகையால் குழந்தைகளுடன் அவர்களுக்கு புரியக்கூடிய எளிமையான மொழியில் பேசுங்கள். அவர்களை கேள்வி கேட்க அனுமதிப்பது, அவர்களை அதிகமாக பேச செய்வதன் மூலமாக அவர்களை எளிமையாக புரிந்துகொள்ள முடியும்.

உங்களது குழந்தையின் பண்புகளை,பழக்கவழக்கங்களை நிர்ணயிப்பது பெற்றோர் மட்டுமே அல்ல. குழந்தையின் நண்பர்கள் , சமூகம் ,ஆசிரியர்கள், சொந்தங்கள் என அனைவருமே உங்களது குழந்தையின் பண்புகளை நிர்ணயிக்கிற இடத்தில் இருக்கிறார்கள். ஆகவே உங்களது குழந்தை அவர்களுடன் எவ்வாறு பழகுகிறார்கள் என்பதனை கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களது குழந்தை விளையாடும் போது எப்போதும் எளிதாக கோபப்படுகிறார் என வைத்துக்கொண்டால் அதற்க்கான காரணம் என்ன? என ஆராய்ந்திட வேண்டும், அதனை எவ்வாறு மாற்றிடலாம் என ஆராய வேண்டும்.

குழந்தைகள் தான் எதிர்காலம் என கருதிக்கொண்டிருக்கும் இந்திய பெற்றோர்கள் பலர் வேலை பளுவின் காரணமாக குழந்தைகளை கவனிக்க முடியாமல் திணறுகின்றனர். அவர்களை பற்றி எதுவும் அறியாமல் அவர்களின் மீது சொந்த விருப்பங்களை திணிக்கும் வேலையும் நடந்து வருகிறது. ஆகவே உங்களது குழந்தைகளை புரிந்துகொள்ளுங்கள், அவர்களை வெற்றியாளராக மாற்றிடுங்கள்.

Pamaran Karuthu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *