நல்ல பெற்றோராக இருப்பது எப்படி? 5 விசயங்கள்
சிறந்த பெற்றோராக இருப்பதே ஒரு கலை. அதை கைக்கொண்டுவிட்டால் பிள்ளைகளை வெற்றியாளர்களாக எளிதில் மாற்றலாம்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் வெற்றியாளர்களாக வர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். தங்கள் ஒட்டுமொத்த வாழ்வையும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்காக இழக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் சிலரது பிள்ளைகள் வெற்றியாளராக மாறுகிறார்கள், சிலரது பிள்ளைகள் பின்னடைவை சந்திக்கிறார்கள். பிள்ளைகள் இளம் வயதில் இருக்கும் போது பெற்றோர்கள் செய்திடும் ஒவ்வொரு விசயமும் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை பல பெற்றோர்கள் உணர்ந்து இருப்பது இல்லை. இங்கே நான் குறிப்பிடப்போகும் 5 எளிய விசயங்கள் உங்களை நல்ல பெற்றோராக மாற்றும் என நம்புகிறேன்.
1. முன்மாதிரியாக நீங்கள் நடந்துகொள்ளுங்கள்
கெட்ட வார்த்தை பேசக்கூடாது என சொல்லும் ஒரு அப்பா, தனது மனைவியை கெட்ட வார்த்தையால் வசை பாடினால் அதனை பார்த்து வளரும் பிள்ளை எதிர்காலத்தில் என்ன செய்யும் என நினைத்துப்பாருங்கள். ஒவ்வொரு விசயமும் அப்படித்தான். ஒரு குழந்தை இந்த பூமியில் பிறக்கும் போது அதன் அருகே இருப்பது பெற்றோர்கள் தான். ஒவ்வொரு விசயத்தையும் அவர்களிடம் இருந்தே குழந்தைகள் பெரும்பாலும் கற்றுக்கொள்கின்றன. நீங்கள் அடுத்தவர்களுக்கு மதிப்பு கொடுப்பவராக, நல்ல மனிதராக, நேர்மை குணம் கொண்டவராக, படிக்கும் ஆர்வம் உடையவராக இருந்தால் உங்கள் குழந்தையும் அப்படியே இருக்கும்.
எப்படிப்பட்ட சூழ்நிலையையும் கடந்து முன்னேறும் குழந்தைகள் உண்டு, ஆனால் அரிது
பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் தங்களை கவனிப்பது இல்லை என நினைத்துக்கொள்கிறார்கள். நீங்கள் செய்திடும் ஒவ்வொரு விசயத்தையும் நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு அவர்கள் உங்களை கவனிக்கிறார்கள்.
2. பிள்ளைகளின் நம்பிக்கைக்கு உரியவராக மாறுங்கள்
ஒரு குழந்தை தனக்கு ஒரு சந்தேகமோ அல்லது பிரச்சனையோ ஏற்படும் போது யாரை அணுகுகிறதோ அவர்கள் தான் அதன் நம்பிக்கைக்கு உரிய நபர். அது நீங்கள் தான் என குழந்தைக்கு புரிய வைக்க வேண்டியது உங்களது கடமை.
அவர்கள் ஒரு தவறை செய்திடும் போது அவர்களை அடிப்பதில் முழு கவனத்தையும் காட்டாதீர்கள். அவர்கள் அடுத்தமுறை நீங்கள் இல்லாத போது அந்த தவறை செய்யாதிருக்க அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். குழந்தைகள் சொல்ல வருவதை பெற்றோர்கள் காத்து கொடுத்து கேட்டாலே பிள்ளைகள் தங்களது பிரச்சனைகளை பெற்றோரிடம் சொல்லிவிடுவார்கள். நீங்கள் நம்பிக்கைக்கு உரியவராக மாறிவிட்டால் அவர்களை வழிநடத்துவது எளிது.
3. குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்
இரண்டு பெற்றோர்களும் வேலைக்கு போவது சராசரி விசயமாக தற்போது மாறிவிட்டது. பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க அது தேவை தான் என்றாலும் கூட பிள்ளைகளோடு குறிப்பிட்ட நேரமாவது செலவிடுவது அவசியமான ஒன்று. நீங்கள் எதற்காக கடுமையாக உழைக்கிறீர்கள் என பெற்றோரிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் ‘தங்களது பிள்ளைகளுக்காக’ என்பதே.
ஆனால் சிறந்த பிள்ளையாக உங்கள் பிள்ளை வர வேண்டும் எனில் ‘நீங்கள் உங்கள் நேரத்தை அவர்களோடு செலவிடுவது’ மிகவும் அவசியம். பணத்தை சம்பாதித்துக்கொடுத்துவிட்டு அதனை எப்படி காப்பாற்றுவது என சொல்லித்தராமல் போனால் எவ்வளவு அபாயம் நேருமோ அதே அளவு அபாயம் தான் நீங்கள் அவர்களோடு நேரம் செலவிடாமையும் என்பதை உணருங்கள்.
4. தோல்வியை கையாள கற்றுக்கொள்ளுங்கள்
போட்டி என்று வந்தால் அதில் யாரோ ஒருவர் வெற்றியாளர் மற்றவர்கள் தோல்வியுற்றவர்கள். ஆனால் தோல்வி அடைந்துவிட்டோம் என்பதற்காக துவண்டுவிடாமல் மீண்டும் மீண்டும் வெற்றிக்காக போராடுகிறவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள். அதனைத்தான் உங்களது பிள்ளைகளுக்கு நீங்கள் கற்றுத்தர வேண்டும்.
தோல்வியே வெற்றியின் படிக்கட்டுகள்
ஒரு சிறந்த பெற்றோராக நீங்கள் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் தோல்வியை தாண்டிச்செல்ல உங்களது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள். தோல்வியை அவர்கள் தாண்டிச்செல்ல அவர்களை நீங்கள் விளையாட அனுமதித்தாலே போதும். விளையாட்டு என்பது தோல்வியை தாண்டிச்செல்ல அற்புதமாக சொல்லித்தரும்.
5. நேர்மையாக இருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்
குழந்தைகள் ஏதும் அறியாத காலி கரும்பலகை போன்றவர்கள். அதிலே நாம் நல்லனவற்றை எழுதினால் அவர்கள் நல்லவர்களாக வருவார்கள். நேர்மையாக இருப்பது எப்படி, அப்படி இருந்தால் என்ன நடக்கும், ஏன் நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என அவர்களுக்கு இளம் வயதிலேயே சொல்லித்தாருங்கள்.
அவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என மனதார நினைத்துவிட்டால் நீங்கள் அவர்களை அப்படி நினைக்க வைத்துவிட்டால் முக்கால்வாசி பிரச்சனை ஓய்ந்துவிடும்.
ஒரு தாய் நினைத்தால் அறிஞனை உருவாக்கலாம் | எடிசன் என்ற அறிஞன் உருவான கதை
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!