தவறான பழக்கங்களை மறக்க 5 எளிமையான வழிகள்
தவறான பழக்கங்களை விட்டுவிடவேண்டும் என ஒவ்வொருவர் விரும்பினாலும் அது அவ்வளவு எளிதான விசயமாக இருப்பதில்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் முயன்றுகொண்டுதான் இருக்கிறோம். இந்த கட்டுரை உங்களுக்கு உதவும்
கிட்டத்தட்ட அனைவருக்குமே தீய பழக்கம் என்ற ஒன்று இருந்தே தீரும். ஒவ்வொருவரும் அதனை மறக்க முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால் சிலரால் மட்டுமே அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடிகிறது, பலரால் முடிவதில்லை. நீங்களும் தீய பழக்கங்களை மறக்க முயற்சி செய்கிறவர் எனில் உங்களுக்கு இங்கே 5 எளிமையான வழிகளை கொடுத்திருக்கிறேன் அதனை பின்பற்றிப்பாருங்கள்.
எது தவறான பழக்கம்?
முதலில் எது தீய பழக்கம் என்பதனை தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா! உங்களது வளர்ச்சி அல்லது ஆரோக்கியத்தை குறைக்கின்ற விதமாக நீங்கள் செய்கின்ற செயல், தனது வளர்ச்சிக்கு அந்த பழக்கம் எதிராக இருக்கிறது என்பதனை அறிந்து அதிலிருந்து விடுபட நினைக்கும் செயல். அதுதான் தீயபழக்கம்.
ஏன் தவறான பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை?
டியூக் பல்கலைக்கழகத்தில் செய்த ஆய்வொன்றில் நாம் தினந்தோறும் செய்கின்ற விசயங்களில் 40% விசயங்கள் “Habit” தமிழில் “புழக்கம்” என கண்டறிந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புதுமையானதுதான் ஆனால் நாம் அதற்கேற்றவாறு முடிவு செய்திடாமல் நம் பழக்கம் என்னவோ அதுபடிதான் 40% நடக்கிறோம் என்கிறது ஆய்வு. உதாரணத்திற்கு, சூழல்கள் வேறாயினும் புகை பிடிக்கிறோம் அல்லவா அப்படித்தான்.
தவறான பழக்கங்களை மறக்கவே முடியாதா? என கேட்டால் நிச்சயமாக முடியும். அதற்க்கான எளிமையான 5 வழிகளைத்தான் தற்போது பார்க்க இருக்கிறோம்.
>> ஒவ்வொன்றாக குறைக்கலாம்
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஞான உதயம் திடீரென்று தான் தோன்றும். உடனே இனி கெட்ட பழக்கங்கள் எதனையும் செய்வதில்லை என முடிவெடுத்துவிடுவார்கள். இரண்டு நாட்கள் இருப்பார்கள் பின்னர் மீண்டும் அதே பழக்கத்தை செய்திட துவங்கி விடுவார்கள். Power of Habit எனும் புத்தகத்தின் ஆசிரியர் சார்லஸ் டியூகிக் இதுபற்றி கூறும்போது “ஒரே நேரத்தில் அனைத்து கேட்டபழக்கங்களையும் விட்டுவிட நினைக்கும் போது நமது உடல் பெருமளவு ஸ்திர தன்மையை இழக்கும். மீண்டும் கெட்ட பழக்கங்களை செய்தால் மட்டுமே சகஜமாக இருக்க முடியும் என அது எண்ணச்செய்யும். இதனை தவிர்க்க முழுமையாக அனைத்து கெட்ட பழக்கங்களையும் தவிர்க்காமல் ஒவ்வொன்றாக தவிர்க்க துவங்க வேண்டும்” என்கிறார்.
புகைப்பழக்கம் , குடிப்பழக்கம் போன்றவை இருக்குமாயின் ஒவ்வொன்றாக நிறுத்திட துவங்கலாம்.
>> உடனே நிறுத்தாதீர்கள், கணக்கிடுங்கள்
நான் திருந்திவிட்டேன் இனி புகை பிடிக்க மாட்டேன் என முடிவெடுத்துவிட்டு புகை பிடிக்காமல் இருக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஒரு வாரமோ அல்லது மாதமோ அல்லது நாட்களோ கழித்து மீண்டும் புகைபிடிக்க துவங்கிவிடுவார்கள். இதற்க்கு மிக முக்கிய காரணம், நம்முடைய பழக்கமாக “புகைப்பிடித்தல்” மாறிப்போனதுதான். ஒரேயடியாக பெரும்பாலானவர்களால் எந்த பழக்கத்தையும் நிறுத்திவிட முடியாது. படிப்படியாகத்தான் குறைக்க முடியும்
ஒரு நாளைக்கு 5 சிகரெட் பிடிப்பவர் எனில் முதல்வாரம் 4 இரண்டாவது வாரம் 3 என குறைத்துக்கொண்டே செல்லுங்கள். அப்போதுதான் உங்களது உடலும் மனமும் இந்த மாற்றத்தினை ஒரு புதிய பழக்கமாக எடுத்துக்கொள்ளும்.
>> சுற்றுசூழலை மாற்றிடுங்கள், உங்களை அல்ல
ஒவ்வொரு நிகழ்வுக்கும் சுற்றுப்புறத்திற்கும் நிச்சயமாக சம்பந்தம் உண்டு. நீங்கள் அலுவலகத்தை விட்டு ஓய்வுக்காக வெளியில் செல்லும்போதெல்லாம் சிகரெட் பிடிக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். புகைப்பிடிக்க கூடாது என முடிவெடுத்த பின்னர் நீங்கள் வெளியில் செல்லும் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் அல்லது சிகரெட் விற்கும் இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் அல்லது சிகரெட் பிடிக்கும் நண்பர்களோடு செல்வதனை தவிர்க்க வேண்டும்.
முழுமையாக நீங்கள் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்ட பின்னர் எங்கு வேண்டுமானாலும் யார் கூட வேண்டுமானாலும் செல்லலாம்.
>> மன அழுத்தத்தை குறைத்திடுங்கள்
பெரும்பாலவர்களிடம் கேட்டால் “ஒரே மன அழுத்தமாக இருக்கிறது” அதனால் தான் அதை செய்கிறோம், அப்போது ஒரு நிம்மதி கிடைக்கிறது என சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்களே, உங்களுக்கு அப்படி ஒரு அழுத்தம் தோன்றிடும் போது உங்களுக்கும் கீழான நிலையில் கோடி பேர் இருக்கிறார்கள் என்பதனை உணருங்கள், தோல்வி இழப்பு என்பதெல்லாம் வாழ்வின் ஒரு அங்கம் என்பதனை உணருங்கள். அனைத்தையும் எளிமையானதாக எடுத்துக்கொள்ள முயலுங்கள்.கவலைப்படுவதனால் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை எனும்போது ஏன் கவலைப்படவேண்டும் என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
>> குற்ற உணர்ச்சியிலிருந்த்து விடுபடுங்கள்
பலருக்கு குற்ற உணர்ச்சியே மன அழுத்தத்தை ஏற்படுத்தி புதிய பழக்கங்களை செய்திட வழிவகுத்து விடும் என்பார்கள். நீங்கள் சிகரெட் குடிக்கக்கூடாது என முடிவெடுத்து அதற்காக பயிற்சியில் இருக்கிறீர்கள். ஒருநாள் ஏதோ ஒரு காரணத்தால் ஒரு சிகரெட் குடித்துவிட்டீர்கள். ஐயோ நான் சிகரெட் குடித்துவிட்டேனே எனது கட்டுப்பாட்டை நான் மீறிவிட்டேனே என எண்ணி புலம்பாதீர்கள். ஆம் ஒரு சிகரெட் குடித்துவிட்டேன், இனி மீண்டும் குடிக்கப்போவதில்லை என அதிலிருந்து மீண்டு வாருங்கள். அதுதான் குடித்துவிட்டோமே இனி கட்டுப்பாடு வேண்டாம் என தவறான முடிவெந்துவிடாதீர்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!